G.D.N – இன்றைய தேவை

Published by

on

பனிரெண்டாம் வகுப்பில் எனக்கு இயற்பியல் பாடம் நடத்திய நரசிம்மன் வாத்தியார்,  பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களில், அவர் சொல்லும் கதைகளாலும், உதாரணங்களாலும் 20 சதவீதமே  நடத்தி முடித்தார். பாடத்திட்டத்தை முடிக்காமல் அவர் சொல்லும் நீளும் கதைகளில் GD நாயுடு குறித்த நிகழ்வுகளும் உண்டு. ஏற்கனவே மெத்தப்படித்த இஞ்சினியர்களாக இருந்தாலும், GD நாயுடுவிடம் பாடம் படிக்க வருவார்களாம். அந்த வகுப்பறையில் ‘என்னைத் தொடாதே’ என்ற குறிப்புடன் ஒரு பொம்மை இருக்குமாம். ஒவ்வொரு மாணவருமே, ஏதாவது ஒரு முறை அதைத் தொட்டுப் பார்க்க எத்தனிப்பார்களாம். தொடுபவர்களை, அந்த பொம்மை, செருப்பால் அடிப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருக்குமாம். GD நாயுடுவிடம், என்ன சார் , நாங்கள் எல்லாம் இஞ்சினீயர்கள், பொம்மையை இப்படி பண்ணி வைச்சிருக்கீங்க, ஒரு மரியாதை வேண்டாமா என்று கேட்பார்களாம். என்ன போட்டிருக்கு என்பதுதான் அவரது பதிலாக இருக்குமாம். ஒரு உலகளாவிய அறிவியல் மாநாட்டில், Engineering Marvelous என்று ஒவ்வொருவரும் அவர்கள் படைத்ததை காண்பித்துப் பேச, GD நாயுடு குருவிக் கூட்டைக் காண்பித்து அதுதான் Marvelous என்று உரை ஆற்றி பாராட்டைப் பெற்றாராம் . 

என் அப்பாவின் உடன்பிறப்புகள், அம்மாவின் உடன்பிறப்புகள் யார் வீட்டிற்குச் சென்றாலும்,  அவர்களது விவசாய நிலங்களில் உலவும் பாம்புகளைப் போல, GD நாயுடு வடிவமைத்த பம்புசெட் மோட்டார், கார், ரேடியோ பற்றிய கதைகளும் உலவும்.   என் அப்பா, பள்ளி நண்பன், கல்லூரி நண்பன் என்று ஒவ்வொருவரும் சொன்ன , நாயுடு  பைக்கை பிரித்துப்போட்டு அது இயங்குவதை கற்றுக்கொண்ட கதையை , கல்யாணத்திற்கு அப்புறம் என் மாமனாரும் சொன்னார். ஆனால், இவர்தான் அந்த பைக் ஒரு வெள்ளைக்காரனது என்ற ஒரு புது விஷயத்தை சொன்னார். முறையான படிப்பை படிக்காததால், அவர் கண்டுபிடித்ததை எதையுமே முறையாக ஆவணப்படுத்தாமல், உலகம் அறிந்த அறிவியலளாராக  GD நாயுடு அறியப்படவில்லை என்பது என் மனப்பதிவு.  

மொத்தத் தமிழ் நாட்டிற்கே எட்டுப் பொறியியல் கல்லூரிகள் இருந்த காலத்தில், மூன்று பொறியியல் கல்லூரிகள் கோயம்புத்தூரில் இருந்தன. அதற்கு காரணம் GD நாயுடு போன்றவர்கள் உருவாக்கிய நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் கொடுக்கும் நன்கொடையும் என்ற பேச்சும் அடிபடும். அவர்களது நன்கொடை குறித்த கதைகளும் அவ்வளவு உலவும்.  Philanthropy விதையை என் மனதில் அந்தக் கதைகள் விதைத்தன.

பாரதியின் கவிதைகளை பாடிப்பாடி மக்களிடம் கொண்டுசேர்த்த திருலோக சீதாராம் GD நாயுடுவை சந்தித்ததும், அவர்கள் நண்பர்கள் ஆன கதையையும் நண்பர்கள் சொற்களின் வழியாகவே அறிந்திருக்கிறேன் . 

இளவயது G.D.N பாத்திரத்தில் (தீஜய் அருணாசலம்) வருபவர், கொஞ்சம் ஒட்டாமல் இருப்பதுபோல தோன்ற, செவிவழியாக மட்டுமே நான் அறிந்திருந்த அறிவியலளாரை, ஆளுமையை எப்படியெல்லாம் படமாக்கியிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தினால் மட்டுமே, கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள G.D.N தன்வரலாற்றுப் படத்தை முழுக்கப் பார்ப்பது என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு பார்த்தேன். 

மாதவன் G.D.N-ஆக, பிரியாமணி மூத்த மனைவி செல்லம்மாளாக படத்தில் அறிமுகமான பின் படத்திற்கு உயிர் பிடிக்கிறது . இந்த இரு மனைவிகள் வரலாறு எனக்குத் தெரியாது. சிறு பாத்திரம் என்றாலும், தான் நடிக்கும் படத்தில் கவனிக்க வைத்திருக்கும் துஷாரா விஜயன், இரண்டாவது மனைவி ரங்கநாயகியாக வந்து படத்திற்கு பலம் சேர்க்கிறார். நிஜ வாழ்வில் ராமையா பிள்ளை, அம்பலாபாரா கிருஷ்ணன்  ஆளுமைகளை பற்றி நான் கேள்விபட்டதில்லை. சத்யராஜின் நக்கலும் கிண்டலும், ராமையா பிள்ளை பாத்திரத்திற்கு நல்ல தேர்வு. ஜெயராம், கடமை தவறாத அம்பலாபாரா கிருஷ்ணனாக நம்மை வெறுக்க வைக்கிறார். Casting படத்தை தூக்கிப் பிடிக்கிறது.

நாயுடு அரசாங்கத்தை ஏமாற்றுவதற்காகத்தான் மொத்த மூளையையும் செலவிடுகிறார் என ஒற்றை வரி விமர்சனத்தைத்தான் கேட்டு வளர்ந்தேன். அம்பலாபாரா கிருஷ்ணனின் பாத்திரமும், படத்தில் வரும் நாடகீயமான காட்சிகளும்  நாட்டுப் பற்று நிறைந்த , பண்பாட்டை நிலை நாட்ட நினைக்கும் நாயுடுவை அறிமுகப்படுத்துகிறது. 

கோவை சமுதாயம் கல்விக்கொடை கொடுப்பதிலும், மக்களுக்கு  உதவுவதிலும் தயவு தாட்சணையம் பார்க்காதவர்கள். வலக்கை கொடுப்பதை இடக்கை அறியக்கூடாது என்று குழந்தைகளுக்குச் சொல்லி வளர்ப்பவர்கள். கணவன் மனைவி இருவரது கைகளும் இணைந்தே கொடுக்கும் என்பதை கண்கூடாக அறிந்தவன். நாயுடு வாழ்க்கையின் அந்தத் துளிகளை படமாக்கியதற்கு, படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். 

கோவைக்குச் செல்லும் பொதுமக்களில் எத்தனைபேர் அவிநாசி ரோட்டில் இருக்கும், G.D.N அறிவியல் காட்சியகத்தைப் பார்க்க ஆர்வம் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை.  கடைசியில் பெயர்கள் ரோலாகும்பொழுது, அருங்காட்சியகத்தை காண்பித்திருக்கலாம். குறை நிறை எப்படியிருப்பினும், உலகம் அறியட்டும் என அதிகம் அறியப்படாத அறிவியலாளர்களின் வாழ்வை படமாக்கும் R மாதவனின் சேவை இன்றையத் தேவை !

Leave a comment