நிலவைச் சுட்டும் விரல் – உரையாடலுக்கான தளம்

Published by

on

இரண்டு வருடங்களுக்கு முன் , டொரண்டாவில் தன் மகன் dரவிந்தன் வீட்டிற்கு வந்திருந்த யுவன் சந்திரசேகரை சந்திப்பதற்கும்,  அவருடன் சில நாட்கள் தங்கி அவரது அறிவை எப்படியாவது கேட்டு வாங்கிவந்துவிடவேண்டுமென்றும், அமெரிக்காவிலிருந்து ராதா, சஹா, பழனி ஜோதி, மஹேஷ்வரி. நான் என  பட்டாளமாகச் சென்றிருந்தோம். Airbnb-யில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து , அரவிந்தனிடம்  கடன் வாங்கி, யுவனை எங்களுடன் இரண்டு நாள் தங்கவைத்துக்கொண்டோம்.  கனடாவிலிருந்து நண்பர் வெங்கட் பிரசாத்தும், தன் மகளை பார்க்க வந்திருந்த சுப்பிரமணியனும் (திருலோக சீதாராமின் புதல்வர்) நாங்கள் வாங்கிய கடன் நாட்களில் கூட்டாக இணைந்துகொண்டார்கள். 

சர்வதேச கணக்குகள் எதுவும் எடுக்காமல், எனது அனுமானத்தின்படி, இலக்கிய வடிவங்களிலேயே, குறைவான வாசகர்களைக் கொண்டதும், சரியாக அடையாளம் காணப்படாததும், புரியவில்லையென சிலரை மிரள வைப்பதும் கவிதைதான். ஆதலால், இரவு இரண்டு மணி வரை நீளும் யுவனுடனான உரையாடல்களை,கவிதை குறித்த எங்கள் புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொண்டோம். இந்த உரையாடல்களின் சாராம்சம் குறித்து நண்பர் வெங்கட் பிரசாத் சொல்வனத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அந்த உரையாடலின் தொடர்ச்சியாகவே , யுவனின் ‘நிலவைச் சுட்டும் விரல்’  நூல் வாசிப்பை நான் பார்க்கிறேன். கவிதையை புரிந்துகொள்ள ஒரு கையேடு என்று இந்த நூலை ஒரு சிறு வரையறைக்குள் வைக்கலாம்தான். புதிய வாசகனுக்கு வேண்டுமெனில் இது கையேடுவாக இருக்கும். அந்த வாசகரே நூலை இரண்டாம் முறை வாசிக்கும்பொழுது தன்னுடனான உரையாடலாக மாறியிருப்பதை உணர்வார்.  கவிதை வாசிப்பவருக்கு முதல் சிக்கல், எது கவிதையில்லை என்று கண்டறிவது. சினிமாப் பாடல்களின் சில வரிகளை கவிதையென உணர்வெழுச்சிகொள்ளும் ஒருவர்,  கவிதையை இனம் காணும் இடத்தை அடைந்துவிட்டார் என்றால், இந்த நூல் கையேடு எனும் தளத்தில் இருந்து உரையாடல் தளமாக உயர்ந்துவிடும்.

கையேடு தளத்தில் இருக்கும் சில அத்தியாயங்களை, உதாரணங்களை குறிப்பிடவும் செய்கிறேன். தேர்ந்த வாசகனுக்கே கூட, மறு பரிசீலனை செய்துகொள்ள உதவும்.  புதிய வாசகனாக, இவையெல்லாம். கவிதையென நானும் திளைத்திருக்கிறேன் என்று அவர் குறு நகை புரியவும் கூடும். சிரிப்பது உடம்புக்கு நல்லதுதானே ? கேட்பவரை அதீத உணர்வுக்குள் கொண்டுசொல்லும் சினிமாப் பாடல்களென , யுவன் சொல்லும் உதாரணங்கள். 

நான் பேச நினைப்பெதல்லாம் நீ பேச வேண்டும்.

உன் கண்ணில் நீர் வழிந்தால் – என் நெஞ்சில் 

உதிரம் கொட்டுதடி 

வாசக மனதில் நகைச்சுவை துணுக்கு அளவு  சின்ன அதிர்வை ஏற்படுத்தும் சொற்கோவைகள் எல்லாம்,  கவிதையென புரிந்துகொள்ளும் இடத்தையும் நூல் தெளிவாக்குகிறது. ஒரு காலத்தில் சிறு பத்திரிகையில் எழுதி அங்கீகாரம் பெற்ற  நீலமணியின் கவிதை (?) ஒன்று. 

நிரோத் உபயோகியுங்கள் 

நிரோத் உபயோகியுங்கள் 

என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன 

வாயேன். 

இப்பொழுதும் FB-யில் இதுபோன்ற கவிதையென மயக்கம் கொள்ளச் செய்யும் துணுக்குகள் வந்தவண்ணம்தான் உள்ளன. ஆயிரக்கணக்கில் Likes வாங்குகின்றன. இத்தனைபேருக்கு விருப்பமாக உள்ளபொழுது எப்படி கவிதையில்லை என சொல்லலாம் என்ற தர்க்கத்தை ஜெயிக்கவே முடியாது.  ஓட்டுப் போட்டு வெற்றி பெறும் அரசியலில் கவிதையை கொண்டு நிறுத்தவேண்டுமா என்ன?

*

கவிதை குறித்துப் பேசும்பொழுதே அது அனுபவத்தை தருகிறதா என்பதே முக்கியமாக வைக்கப்படும் கேள்வி. நெருப்பு என்றவுடன் ஒருவர் சுடும் என நினைக்கலாம். எரித்து சாம்பலாக்கிவிடும் என்று யோசிப்பவரும் உண்டு. எல்லாவற்றையும் ஆக்கப்பூர்வமாக யோசிக்கும் ஒருவர் அது இல்லையேல் வெளிச்சம் எங்கிருந்து வரும் என்பார். நெருப்பு எனும் சொல்லே ஒவ்வொருவரது எண்ண ஓட்டத்தினில் இவ்வளவு வேறுபாடுகள் இருக்குமெனில், கவிதை கொடுக்கும் அனுபவம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்தானே?. அனுபவம் என்பது என்ன என்ற கேள்வியில் ஆரம்பித்து, எங்கிருந்து சொல்வது, எப்படிச் சொல்வது என கிளைக்கேள்விகளுடனும் அதற்கான விளக்கங்களுடனும் எழுதியிருக்கும் , ‘கவிதை என்னும் அனுபவம்’  அத்தியாயம், இள நிலை, இடை நிலை, முது நிலை என அனைத்து நிலை வாசகர்களுக்குமானது. அனுபவத்தை விளக்க , யுவன் , எல்லோருக்கும் குறைந்த பட்சம் இரு வரிகள் தெரிந்த ,கனியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தன்னளவில் விளக்கமாகவே உள்ள கவிதையை எடுத்துக்கொண்டு, 

மின்னொடு வானம் தண்துளி தளைஇ ஆனாது

கல்பொருது இரங்கும் அல்லல் போயாற்று 

என்ற இரு வரிகள் கொடுக்கும் காட்சி அனுபவம் கொடுக்கும் முக்கியத்துவத்தை விசாரணை செய்கிறார். 

மொத்த நூலிலும், யுவன் தமிழ்க் கவிதைகளுடன். சீனம், ஜப்பான் , ஆங்கிலம் என பலமொழிகளின் கவிதைகளையும் தான் எடுத்துக்கொள்ளும் விசாரணைகளுக்கு  துணைக்கு அழைத்துக்கொள்கிறார். இந்த அத்தியாயத்தில், சீனக் கவிஞர் வாங் வெய் எழுதிய கவிதை கொடுக்கும் அனுபவத் தொலைவை அறிமுகப்படுத்திகிறார். 

தொலைவிலுள்ள மாந்தருக்கு விழிகளில்லை

தொலைவிலுள்ள மரங்களுக்கு கிளைகள் இல்லை.

தொலைவிலுள்ள மலைகளில் கற்கள் இல்லை;

அவை நயமாகவும் மிருதுவாகவும் இருப்பவை,

புருவங்கள் போல,

தொலைவிலுள்ள நீரில் வளையங்கள் இல்லை,

மேகங்களை நோக்கி உயர்கிறது அது.

இவைதாம் ரகசியங்கள்.

*

தேர்ந்த வாசகரே படிமம் என்பதை உருவகம் என்று புரிந்துகொள்கிறார்  என்று படிமம் குறித்த அத்தியாயத்தை ஆரம்பித்து,  படிமங்களை மூடிய படிமம், திறந்த படிமம், முழுக்கத் திறந்த படிமம், சூட்சுமப் படிமம், பூடகப் படிமம் என வகைப்படுத்தி உதாரணக் கவிதைகளுடன் விளக்குகிறார். கவிதையைப் பொறுத்தவரை, படிமம் என்பதை, காட்சி என்பதற்கு நிகரான சொல் என்று விவரிக்கும் யுவன், முழக்கத் திறந்த படிமம் உள்ள கவிதையென இனம் காட்டுவது ஞானக்கூத்தனின் கவிதை ஒன்றை.

சரிவு 

சூளைச் செங்கல் குவியலிலே 

தனிக் கல் ஒன்று சரிகிறது.

கோட்பாடுகள், விருப்பங்கள் சார்ந்து ஒரு அந்நியமாதல் நிகழ்கையில் இதைப் பொறுத்திப் பார்த்து புரிந்துகொள்ள திறந்த வெளி காட்சியல்லவா இது. 

*

காலம் என்ற சொல்லை நேரம் என்ற பொருளில் தவறாகப் பயன்படுத்துகிறோம் என்கிறார் யுவன். மரணவீட்டில் மெதுவாக நகரும் காலம், காதலியுடன் இருக்கும்பொழுது மின்னலாக கடுகிப் பறக்கிறது என்று காலத்தை உணரமட்டுமே செய்யமுடியும், நேரத்தைப் போல அளக்கமுடியாது என்று மிக எளிமையான விளக்கம் ஒன்று தருகிறார். சி.மணி, கு.ப. ராஜகோபாலன், பிரம்மராஜன், சீனக் கவிஞர் லி போ எழுதிய கவிதைகளை உதாரணங்களாக கொடுத்துள்ளார். பிரம்மராஜன் கவிதையை மட்டும் இங்கே கொடுப்பதன் மூலம், காலம் பிரக்ஞைப் பூர்வமானது என புரிந்துவிடும். . 

ருத்ரப்பிரயாகையில் வெடிமருந்துக்குத் 

தப்பிய புலி இதோ ஜிம் கார்பெட் 

சப்தமின்றி உன் புத்தக அலமாரியில்.

வேட்டைக்காரனின் குண்டுக்குத் தப்பிய புலி, ஜிம் கார்பெட் புத்தக அலமாரியில் அடைக்கலம் புகுவதற்கான மாயத்தை (காலத்தை) வாசகனால் உணரத்தான் முடியும். தப்பிப்போன புலி வேட்டைக்காரனின்ஆழ்மனத்தில் உறுத்தலாக மீந்திருக்கும் என்ற வாசிப்பின் சாத்தியத்தையும், 1955-ல் இறந்துவிட்ட ஜிம் கார்பெட்டை கவிதைசொல்லி சந்திக்கும் வேளையையும் யோசிக்க வைக்கிறார். ‘நிலம் சுட்டும் விரல்’ கவிதை குறித்த புரிதலுக்கும் விவாதத்திற்கும் தளம் அமைத்துக்கொடுக்க இந்த ஒரு அத்தியாயம் போதும். 

*

கவிதைகளில் உள்ள புரியாத்தன்மையை  யுவன் இருண்மை என்கிறார். ஏற்கனவே தெரிந்த , பொது மனங்களில் ஊறிப் பழகிய விஷயங்களை நயம்பட சொல்லிவிட்டாலே கவிதை என புரிந்துகொள்ளப்படுவது. உதாரணம், கவிஞர் அவரது நண்பர் மிகவும் கொண்டாடித் தீர்த்ததாக சொல்லும் வரிகள்.

ஞாயிறு என்பது கண்ணாக

திங்கள் என்பது பெண்ணாக

செவ்வாய் கோவைப்பழமாக

ஆனால், நவீன கவிதைகள் சொற்களைக் கோக்கும் விதத்தில், அவைகளுக்கு இடையில் இலங்கும் விதத்தில் , அதைப் புரிந்துகொள்வதில் வாசகனுக்கு குறைந்தபட்ச கவிதை ஆர்வமும், நவீன வெளிப்பாட்டின் வரலாறு தொடங்குமிடத்தை அறிந்துகொள்ளும் அக்கறையும் வேண்டும் என யுவன் வாதிடுகிறார். வரிகளுக்கிடையேயான சிறு இடைவெளியை உருவாகும் மரபை ஒரு திருக்குறளின் உதவியோடு சொல்கிறார்.   

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றநின்

வல்வரவு வாழ்வார்க் குரை

“பிரியவே போவதில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல்லுங்கள், சென்றேதான் தீருவேன் என்று பிடிவாதம் பிடிப்பவராக இருந்தால், நீங்கள் திரும்பி வரும் சமயம் உயிரோட இருப்பார்களே, அவர்களிடம் சொல்லுங்கள்” என்று விரட்டும் குரலில் உள்ளது. அந்தப் பக்கம் இருப்பவர் ஆணா, பெண்ணா என்பதும் இல்லை, பிரிவால் உயிரை விட்டுவிடுவேன் என்ற பிரகடனும் வெளிப்படையாக இல்லை.   னி எனும் இதழில் வெளியான வாசகர் கடிதம் ஒன்று கவிதை வாசிப்பில் வெளிப்படும் மூன்று மௌனங்களை விளக்கியதாகவும், அதுவே இதுவரை யுவனுக்கு உதவியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். எனது பணி, உங்களுக்கு , ‘நிலவைச் சுட்டும் விரல்’ நூலில் அந்த மௌனங்களுக்கான விளக்கங்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு அமைதியாக இருப்பதே. 

*  

ஒருமையில் ஆரம்பித்து பன்மையில் முடியும் வரிகளுடன் இருக்கும் சமகாலக் கவிதைகளை காண முடிகிறது எனவும், காட்சி ஒழுங்கு தவறும் கவிதை என உதாரணம் ஒன்றை காட்டியும் வாசகன் எரிச்சலடையும் தருணங்களை புரிந்துகொள்வதாக சொல்கிறார். 

நீட்சி கொள்ளும் நாக்குடன்

காத்திருக்கிறது பல்லி

யாராவது பிடித்து இழுத்தால்தானே பல்லியின் நாக்கு நீட்சி கொள்ளும். இந்த இடத்தில் ‘நீளும்’ என்பதுதானே சரி.  

நவீனக் கவிதை துறந்தது இலக்கணத்தையல்ல யாப்பிலக்கணத்தையே என்கிறார். அந்தந்தக் காலகட்டத்தின் சமகாலக் கவிதையை நவீனக் கவிதையெனவும், நவீனத்துவம் என்ற இலக்கிய வகைமையை சார்ந்து எழுதப்படும் கவிதையை நவீனத்துவ கவிதையெனவும் சொல்லலாமென சொல்லும் கவிஞர், நவீனத்துவக் கவிதையின் உருவம் சிக்கனத்தை வலியுறுத்துவது என்கிறார். சொற்சிக்கனம் மட்டுமல்ல, காலமாற்றத்துக்கிசைய மொழியும் மொழிதலும் கொள்ளும் மாற்றங்களைத் தனக்குள் இழுத்துக்கொள்வது என்பதைச் சுட்டுவதற்கு சி.மணியின் அறைவெளி எனும் கவிதையின் கடைசி ஐந்து வரிகள் சொல்லும் விஷயத்தை, தேவதச்சன் இரு வரிகளுக்குள் அடுக்கும் உதாரணத்தை தருகிறார். 

மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்

தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்

வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்

கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்

எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.

– சி. மணி 

கம்பிகளில்லா

சிறைச்சாலை உலகம்

-தேவதச்சன் 

 *

எஸ். ராமகிருஷ்ணனின், சைக்கிள் கமலத்தின் தங்கை என்ற கவிதையில், கதைசொல்லி, திருவெல்லிக்கேணியில் ஞானக்கூத்தனின் வீட்டிற்கு செல்வதற்கு வழி கேட்பதே சைக்கிள் கமலத்தின் தங்கையிடம்தான் என்பதுபோல படைத்திருப்பார். தமிழ் வாசகன் நெஞ்சில் கதையில் வரும் பாத்திரமென பதிந்துவிட்டவள், வழியில் மாடுகள் எதிர்பட்டாலும், குழந்தைகள் எதிர்பட்டாலும், உடனடியாக இறங்கிக்கொள்ளும் ஞானக்கூத்தனின் சைக்கிள் கமலம் கவிதையில் வரும் சிறுமி. தெருவில் மட்டுமல்லாமல் கவிதைசொல்லியின் மீதும் சைக்கிளை ஒருமுறை விட்டுவிடுவாள். சைக்கிள் கமலம் ஒருமுறை தன்மீது விட்டபிறகு, கவிதைசொல்லிக்கும், அவளுக்குமான உறவு என்ன என புதிய சுவராஸ்யத்திற்கு வழி வகுத்து, கதைக்கவிதை என ஒரு வகைமையை பற்றி விளக்குகிறார் இந்த நூலில் யுவன்.  உலகில் எவ்வளவோ சமாச்சாரங்கள் இருக்க, ஒரு பெண் சைக்கிள் பழகுவதை மெனக்கெட்டு ஒருவர் கவிதை எழுதியிருக்கிறார் என்று நம்பமுடியாதவர்கள் அக்கவிதையை இணையத்தில் தேடி வாசிக்கலாம். கட்டுரையின் நீளம் கருதி அந்தக் கவிதையை இணைப்பாக கொடுக்கவில்லை. ஞானக்கூத்தனின் ‘விட்டுப்போன நரி’, ‘அழிவுப் பாதை’, ‘பாண்டூர் மாமியின் தமிழ்ப் பற்று’ கவிதைகளும் கதைக்கவிதைகளே என சொல்கிறார். அவற்றையும் சேர்த்து வாசித்தால், ஒரு குறுங்கதை தொகுப்பை வாசித்ததுபோலவும் ஆகும்.

*

கவிதை கதையென இருப்பதுபோல, உரைநடையாக சந்தமே இல்லாமல் இருக்கலாமா என்றால், இருக்கலாம் என்கிறார் யுவன். ‘வசன கவிதை’ என்ற தலைப்பில்  பாரதி எழுதியவையே உரைநடைக் கவிதைதானே, தமிழுக்கு இது புதிதல்ல என்கிறார். “தீ இனிது நீர் இனிது நிலம் இனிது” என்ற ஒரு வரி வாசகனுக்குள் கிளர்த்தும் உணர்வு அத்வைதக் கோட்பாடு வரை பாயக்கூடியது என்கிறார். முழுமையான காட்சி விவரிப்பின் வழியாக கவிதையின் இயல்பைக் காட்டியிருக்கும் ராணி திலக்கின் உரை நடைக் கவிதையொன்று உதாரணமாக.

அத்திசையிலிருந்து இத்திசைக்குப் பாடலைப் பறவைகள் அழைத்து

வருகின்றன. இலைகள் உதிர்வதைப் பூமிக்குள் இருக்கும் வேர்கள்

அறிவதேயில்லை. இப் பூமியில் சருகுகளோடு நிழல்களும் புதைவதை

இம் மரமும் அறியப் போவதில்லை, அதன் நிர்வாணத்தைத் தத்தம் 

சிறகுகளால் பறவைகள் மறைக்கின்றன. வாள்போன்ற புற்கள், இன்னும்

பனி நீராடவில்லை. அவ் வேளை, ஏரியின் நேசன், எவனோ ஒருவன்,

தன் உள்ளங்கையைக் கோப்பையாக்கி உறிஞ்சுகிறான். சூரியனை,

சிள்வண்டுகளிடம் கடிபடாத ரீங்காரத்தை, மின்மினிகள் சுமந்து காட்டும் 

வைரங்களை, பறவையின் பாடலை உறிஞ்சுகிறான், மறையும் சூரிய

வெளிச்சத்தில், அவன் தேகம் சிவப்படைகிறது. யாருக்கும் தெரியாமல்,

மரங்கொத்தி செதுக்கும் பொந்தில் வாழும் இருளைப் போன்ற, நிழலான,

அந்தியுள் அவன் தன்னை மெல்லக் கரைத்துக்கொள்கிறான். 

கருத்தாக இதில் எதுவும் திரண்டு வரவில்லை என்பதையும் கவிதையின் முக்கிய கூறாகப் பார்க்கப்படுகிறது. உரைநடைக்கவிதை எனக்கும் இன்னும் சரியாகப் பிடிபடவில்லை.  Ada Limon என்பவரது கவிதைகளை விரும்பி வாசிப்பேன். அவரது உரைநடைக்கவிதை Miracle Fish கவிதையில் உள்ள ஒரு மிஸ்டிக் தன்மை ஓரளவு பிடிபட்டுள்ளது. எனக்குள் இருக்கும் கடல்தான் என்னை மீனைப்போல நீந்தச் செய்கிறது என்பதாக புரிந்துவைத்துள்ளேன்.

*

நான் இளங்கலை மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்தபொழுது என் அம்மம்மா இறந்துவிட்டார். அப்பொழுது நான் வாசித்த நகுலன் கவிதை ஒன்று எனக்கெனவே எழுதப்பட்டதுபோல இருந்தது. எனது கல்லூரி விடுதியின் அலமாரியில் நகுலனின் இந்தக் கவிதையை சின்ன பேப்பரில் எழுதி ஒட்டி வைத்திருந்தேன் (Sticky Note இல்லாத காலம்).  

இருப்பதற் கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல் போகிறோம். 

கவிதைகள் பௌதீக மரணத்தை மற்றும் மட்டும் பேசுவதில்லை வேறு ஒரு உள்மடிப்பு உள்ளது என யுவன் இந்த நூலில் யோசிக்க வைக்கிறார். அவர் மொழிபெயர்த்த பெயரற்ற யாத்ரீகன் நூலிலுள்ள ஒரு கவிதையை மரணத்தைப் பேசுதல் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்தக் கவிதையை பல உரையாடல்களில் குறிப்பிடுவாராம். 

இறுதியில்

இந்தச் சாலையில்தான்

வந்து சேர்வேன் என 

நன்றாகத் தெரியும்

ஆனால்,

இன்றுதான் அந்த நாள் என்று 

எனக்குத் தெரியாது நேற்று. 

-நாரிஹிரா, ஜப்பான்

இதுகாறும், நான் தொகுத்த விஷயங்கள் எந்த அடிப்படையிலும் அடுக்கப்படவில்லை. நினைவின் தொகுப்பிலிருந்து எழுதப்பட்டவைகள். இந்த நூலில், கவிதையில் சொற்களுக்கான முக்கியத்துவம், தத்துவத்திற்கான தேவை, கவிதையின் பாடுபொருள்கள் – பிரிவு, ஆற்றாமை, போர்க்களம், தனிமை, பிரபஞ்சம், கவிஞர்களே கவிதை பற்றி எழுதுவது  என்று யுவன் தொட்டுச் செல்லும் வியாக்யானங்கள் ஒவ்வொரு கவிதை வாசகனும் ஒரு முறையேனும் வாசித்து அவனுக்குள்ளாகவேவும் விவாதித்துக்கொள்ள வேண்டியவை. தொட்டுச்செல்லும் வாசகக் குறிப்புதானே என்று, சில ஆழமான கவிதைகளையும் பாடுபொருள்களையும் கொஞ்சம் பிசகினால் தவறிவிடும் என்று எச்சரிக்கையாகவும் தவிர்த்துள்ளேன்.  நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களை குறித்த யுவனின் மதிப்பீடுகள் என்னவாக இருந்தன என்று அறிவதில் எனக்கு ஆர்வமமாக இருந்தன. உங்களுக்கும் இருக்கலாம். அதை பகிர்ந்துகொள்வதோடு, இந்த நூல் கவிதை வாசகனுக்கு விவாதிக்கும் தளம் அமைத்துக்கொடுத்து அவன் இலக்கிய அறிவை விரிவுபடுத்தும் என்று கூறி தாழ்மையுடன் முடித்துக்கொள்கிறேன். 

இசை: விளக்கம் தேவையே இல்லாத எளிமையும் நேரடித்தன்மையும் இசைக் கவிதையின் சிறப்பம்சம்.

போகன் சங்கர்: பகடியின் தொனியில் மூர்க்கமான விமர்சனத்தை வைப்பவை போகன் சங்கரின் கவிதைகள். பொதுப்பார்வை சார்ந்து புனிதமானவை என்றோ நேரானவை என்றோ சமூகம் நினைப்பவற்றை எதிர்முனையில் நிறுத்திக் காட்டுபவை.

பிரம்மராஜன் : நவீன தமிழ்க் கவிதைக்குள் தனித்துவமான கூறுமுறையை அறிமுகம் செய்த நால்வரில் ஒருவர் என்றே பிரம்மராஜனைக் கருதுகிறேன். மற்ற மூவர், நகுலன், பிரமிள், தேவதச்சன். அவர்கள் பேசப்பட்ட அளவு பேசப்படாதவர் பிரம்மராஜன். 

ஞானக்கூத்தன் : சமூகத்துடனான உறவை, தமது அரசியல் பார்வையை கேலியும் கிண்டலும் கட்டுப்பாடு கொண்ட சீற்றமுமாக நவீன கவிதையில் வெளிப்படுத்தியவர் ஞானக்கூத்தன். மரபுக் கவிதையில் ஆழமான பிடிப்பு உடையவர். நவீன கவிதை உருவ இலக்கணத்தை உதிர்த்தால் போதும்; சந்தத்தை முழுவுதுமாகத் துறக்கவேண்டியதில்லை என்று நம்பியவர்.

பழமலய்: தமிழ் யதார்த்தவாதக் கவிதையின் உச்சங்களில் ஒன்று பழமலய்யின் கவியுலகம் என்று சொல்லலாம். உரைநடைக்கு வெகு அருகில் சென்றுவிடும் கவிதைமொழி சிறுகதையில் அமரர் கி. ராஜநாரயணன் கட்டியெழுப்பிய உலகுக்கு நிகரானது பழமலய்யின் கவியுலகம். 

Leave a comment