ரீபா தொடரில் ரீபா, டாலி மேஜர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம், வேலை பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவார். இரண்டு நாட்களில் அவருடனான நேர்முகம் இருக்க, டாலி மேஜர்ஸ் ரீபா-வின் வீட்டிற்கு நேரிலேயே வந்துவிடுவார். அந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வுருபவர் டாலி பார்டன். தன் வீட்டில் தனது கனவு நாயகியை பார்த்த ரீபாவிற்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அந்த ரீபாவின் உணர்வுடனும் படபடப்புடனும் தான், டாலி பார்டனுடன் பாடும் பாடகர்களும், ரசிகர்களும் அவரை அணுகுவார்கள். தனது பாடல்களால், மாறாத நகைச்சுவையால், தாராளகுணத்தால் நாயகியாக கொண்டாடப்பட்ட டாலி பார்டனின் மரணம் அவரது உறவினர் பிரையன் சீவரால் சமூக ஊடகங்களில் இன்று அறிவிக்கப்பட்டது.
புதுமணத் தம்பதிகளாக இருக்கும்பொழுது , டாலியின் கணவர் கார்ல் டீன் அவர்கள் வசித்த சிறு நகரிலிருந்த வங்கிக்கு அடிக்கடி செல்கிறார். “நம்மிடம் இருக்கும் பணத்தைவிட , நீங்கள் அந்த வங்கிக்கு அதிகமாக செல்கிறீர்கள்” என்று டாலி விளையாட்டாக கணவரிடம் சொல்வாராம். அந்த வங்கியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணும் இவர் கணவரிடம் ஜொல்லு விடுவதைப் பார்த்துவிட்டு இவர் பொறாமையாக எழுதிய பாட்டை, இன்று அவரது மறைவுச் செய்தியை அறிந்த ரசிகர்கள் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். அந்தப் பாடலுக்கு அவர் தேர்ந்தெடுத்த ஜாலின் எனும் பெயரை அவர் சொல்லும் விதமே ரீபிட் மோடில் கேட்க வைக்கும்.
இளம்பாடகியாக மைலி சைரஸ் பிரபலமாகியபொழுது, புறம் பேசும் சமுதாயத்தை எதிர்கொள்ள துணை நின்றவர், டாலி பார்டன். மைலி சைரஸ் வழிகாட்டியான டாலி பார்டனுக்கு, I will miss you Dolly பாடலில் அஞ்சலி செலுத்துகிறார். அவர் தனக்கு என்னவாகவெல்லாம் இருந்தார் என்று அவர் பாடும் இந்தப் பாடலும் கேட்பவரை கண்கலங்கவைக்கும்.
நான் டாலி பார்டனை வழிகாட்டியாக பார்ப்பது, பிறந்தது முதல் ஐந்து வயதாகும் குழந்தைகளுக்கு மாதா மாதம் பரிசாக புத்தகம் வழங்கும் ஒரு சேவை நிறுவனத்தை நிறுவியது. பில்லியன் டாலர்களை வைத்துக்கொண்டு, குழந்தைகளைக் கொல்லும் போருக்கு கொடுக்கவில்லை, ட்விட்டரில் அனியாயமாக செய்தி அனுப்புவதில்லை, ஒரு பாலினத்தவரை நிந்திப்பதில்லை, பாருங்கள், அவர் இறந்த இன்று கூட, அவரது நிறுவனம் அனுப்பிய புத்தகம் என் குழந்தைக்கு வந்தது என்று அவரது ரசிகர் ஒருவர் insta-வில் பதிவு போட்டிருந்தார். அவரது லாப நோக்கமற்ற நிறுவனமான Dolly Patron’s Imagination Library குறித்து அவர் கூறியது, “எனது இதயம், செவி மற்றும் கண்களை எப்போதும் திறந்த நிலையில் வைத்திருக்க நான் முயல்கிறேன். எனது Imagination Library எனும் திட்டம் ஒரு உண்மையான பின்னணியிலிருந்து உருவானது; எழுதப்படிக்கத் தெரியாத என் தந்தையிடமிருந்தே அது தொடங்கியது. எங்கள் சொந்த ஊரிலேயே ஏதேனும் ஒரு விஷயத்தில் என் தந்தையை ஈடுபடுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். காலப்போக்கில் அது வளர்ந்து ஒரு அற்புதமான முயற்சியாக மாறியுள்ளது; என் தந்தையும் நீண்ட காலம் வாழ்ந்து அது செயல்புரிவதை நேரில் காணமுடிந்தது. நான் மிகவும் நேசிக்கும் அந்தத் தொண்டு நிறுவனத்திற்காக அயராது உழைக்க என்னால் முடிகிறது; ஏனெனில், அது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயமாகும்.”
அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, யுனைடட் கிங்க்டம், ஆஸ்திரேலியா என ஐந்து நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. ஜனவரி 2026-ல் முப்பதாண்டுகளை நிறைவு செய்யும் இந்த நிறுவனம், 2025-ல் 304,539,509 மில்லியன் புத்தகங்களை குழந்தைகளுக்கு நன்கொடையாக அனுப்பியுள்ளது.
டாலி பார்டன் கடைசியாக அனுப்பிய காணொளி செய்தி, டைலர் ஸ்விப்ட்டிற்கும் அவர் ஜூலை 3-ல் திருமணம் செய்யவிருக்கும் ட்ராவிஸ் கெல்ஸிக்கும் அவர்கள் கொடுத்த 2 மில்லியன் டாலர்கள் நன்கொடைக்கு நன்றி சொல்வதற்காகத்தானாம்.
அறிவுக் கொடை கொடுத்த நாயகி டாலி பார்டனுக்கு அஞ்சலி !

Leave a comment