இலக்கிய வாசகனின் தொடர் கவனத்தில் இருக்கவேண்டிய இலக்கிய விழா 

Published by

on

நான்கு தென்னிந்திய மொழிகளின் படைப்புகளையும் படைப்பாளுமைகளையும் கொண்டாடவும் சிறப்பிக்கவும்  பெங்களூரில் 2024 ஆகஸ்ட் 9,10, 11, தேதிகளில்  Book Brahma Literature Festival முதன் முதலாக நடந்தேறியது.  ஆரம்பமே அட்டகாசம் எனும் வகையில், அந்த விழாவிற்கே உரித்தான தனித்தன்மையால் இலக்கிய ஆர்வலர்களை ஈர்த்தது.  

  • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் சுழற்சி முறை அடிப்படையில் ஒரு மொழிக்கான வாழ் நாள் சாதனையாளர் விருதை வழங்குவது.
  • மூன்று நாட்களில் 90 கலந்துரையாடல்கள். அதுவும் அந்தந்த படைப்பாளிகளின் மொழிகளில் மற்றும் அனைத்து மொழி பார்வையாளர்களையும் சென்றடைய ஆங்கிலத்தில் உடனுக்குடன் மொழியாக்கம்.
  • பார்வையாளர்களுக்கு இணையாக படைப்பாளிகள். உலகெங்கிலிருந்தும் பங்குகொண்ட 450 எழுத்தாளர்கள் . 
  • பங்கேற்பாளர்களை கிராமத்து திருவிழாக்கள் மன நிலையில் வைத்திருக்க நிகழ்த்துக்கலை,  இசைக்கச்சேரி, நாடகங்கள் என நிகழ்வுகள். 

விழா முடிந்து அழைக்கப்பட்டவர்கள்  மகிழ்வாகவும், அழைக்கப்படாதவர்கள் ஏக்கமாகவும், விழாவை ஒருங்கமைத்த சதீஸ் சபாரிகே ஆளுமை குறித்தும் உலகெங்கும் ஒரே பேச்சு. அப்படித்தான் அயல் நாட்டில் வாழ்பவனான எனக்கு இப்படி ஒரு இலக்கிய விழா நடந்திருக்கிறது என்ற செய்தி வந்து சேர்ந்தது.  தமிழிலிருந்து யாரெல்லாம் அழைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருப்பார்கள் என அறிய, சுனில் கிருஷ்ணன் சுடச்சுட எழுதிய பதிவை வாசித்துப் புரிந்துகொண்டேன். விழாவில் தான் சந்தித்த, பேசிய ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் சுவாரஷ்யமான ஒரு வரி குறிப்பையும் கொடுத்திருந்தார். பணி ஓய்வுக்குப் பின் மொழியாக்கம் செய்யத் தொடங்கி பத்தாண்டுகளுக்குள் ஐம்பத்தி மூன்று நூல்கள் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்குமாக மொழிபெயர்க்கம் செய்யும் நல்லதம்பியை இந்தப் பதிவின் மூலமே அறிந்துகொண்டேன்.   நிகழ்வின் கலந்துரையாடல்களை  யூட்யூப்பில் புக் பிரம்மா வெளியிட்ட காணொளிகளாக காணக்கிடைக்கின்றன.  தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை தற்போதைய நடப்பை இந்த ஐந்து காணொளிகளை வைத்து வேற்று மொழிக்காரரோ, புதிதாக உருவாகிவரும் வாசகரோ புரிந்துகொள்ளலாம்.  

சு. வேணுகோபாலுக்கு எங்கு சென்றாலும் நடுவர் பதிவு கொடுத்துவிடுவார்கள் என்று சுனில் அவரது பதிவில் எழுதியிருந்தார். சு.வேணுகோபால்,  தமிழ் நாவல்: விரிவடையும் புதிய எழுத்துக்களம் என்ற கலந்துரையாடலை கலைச்செல்வி மற்றும் கடலூர் சீனுவுடன் இணைந்து நடத்துகிறார்.  அழகிய பெரியவன் வந்திருக்கவேண்டியவர் , தவிர்க்கமுடியாத நிலையில் கலந்துகொள்ளவில்லை என சு. வேணுகோபால் குறிப்பிடுகிறார். தனது முன்னுரையில், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, ராஜம் ஐயர், மாதவய்யா வரிசையில் ஆரம்பித்து, பொழுது போக்கு நாவல்களிலிருந்து பிரித்தெடுக்க நாவல் கலை பற்றிப் பேசி ஆகச்சிறந்த நாவல்களை பட்டியிலிட்ட க.நா.சு, இன்று வெவ்வேறு களங்களில் எழுதப்படும் நாவல்களை (உதாரணம் : சயந்தனின் ஆதிரை) குறிப்பிட்டு தமிழ் நாவல் வரலாற்றை குறித்து ஒரு குறுக்குச் சால் (சு. வேணுகோபாலின் விளக்கம்) ஓட்டுகிறார்.  அவருடைய, மெய்யியல் சார்ந்து தமிழில் வந்த நாவல்கள் குறித்த கேள்விக்கு கலைச்செல்வி, மெய்யியல் என்பது வாழ்க்கையில் தத்துவார்த்தமான அகத்தேடதல்களைச் சொல்லும்,  அதற்கான பதில்களை அலசும் நாவல்கள் என்ற தனது விளக்கத்தை முன்வைத்துவிட்டு, ஜெயமோகனின் விஷ்ணுபுரம், கொற்றவை, வெண்முரசு நாவல்களின் மையத்தை விளக்குவதன் வழியாக அவற்றில் உள்ள மெய்யியல் பார்வையை நிறுவுகிறார். சு.வேணுகோபாலனின் வாசகனுடனான கேளிக்கை நாவல்களின் பங்கு குறித்து கடலூர் சீனுவிடம் தனது இரண்டாவது கேள்வியை முன்வைக்கிறார். கடலூர் சீனு , வாசகனின் பகல் கனவிற்குத் தீனிபோடும் கேளிக்கை எழுத்திலிருந்து வேறுபட்டு வாழ்க்கைக்கு மிக அருகில் நின்று பேசும் நாவல்களை வெகுமக்கள் எழுத்து என்று வரையறுத்து அதன் வாசிப்பு பரப்பு அதிகம் என்கிறார். ஒரு அணைகட்டுவதன் வழியாக சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் என பேசும் அ. வெண்ணிலாவின்  ‘நீரதிகாரம்’, ஈழப் பிரச்சனையை பேசும் அகரமுதல்வனின் ‘கடவுள், பிசாசு,  நிலம்’  என்ற இரு நாவல்களையும் அந்த வகையில் வெகுவாக வாசிக்கப்பட்ட நாவல்கள் என்கிறார். 

மேற்கண்ட காணொளியின் வழியாக தமிழ் நாவல்கள் குறித்து ஒரு ஒட்டு மொத்தச் சித்திரம்  கிடைக்கப் பெற்ற வாசகன், பெருமாள் முருகனுடன், பாவண்ணனும், எம். கோபாலகிருஷ்ணனும் நடத்திய உரையாடலை கூர்ந்து கேட்டால் அவற்றைப் படைப்பவர்களின் உலகை புரிந்து கொள்ளலாம்.   நூறு சிறுகதைகள் எழுதி எழுதி தான் மதிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு, பெருமாள் முருகன் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார். கடைசியாக, அவரது ஆசிபெற்ற, அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ‘‘நிகழ்வு’ என்ற கதையை கணையாழிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆறு மாதக் காத்திருத்தலுக்குப் பிறகு, அசோகமித்தரனிடமிருந்து, உங்கள் கதை மிகவும் பிடித்திருந்தது என்று போஸ்ட் கார்ட் வந்துள்ளது. இளமைக்கால அடையாளமாக எழுதப்பட்ட , ட்ரையாலஜி என்று வகைப்படத்தலாம் என ‘ஏறு வெயில்’, ‘நிழல் முற்றம்’, ‘கூள மாதேரி’ நாவல்கள் குறித்த எம். கோபாலகிருஷ்ணனின் கேள்விக்கான பதிலில் பெருமாள் முருகனின் மானாவாரி நிலம் சார்ந்த சம்சாரிகளின் வாழ்வியலை புரிந்து கொள்ளும்படியாக இருந்தது. பெண் சிசு கொலை என்பது வறுமையின் பொறுட்டும், வரதட்சணையும்தான் காரணம் என்பது உசிலம்பட்டி போன்ற கிராமங்கள் வழியாக நாம் அறிந்த காரணங்கள். சொத்துக்கள் பிரிக்கப்பட்டுவிடும் என்று இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒருவரைக் கொன்றுவிடும் வழக்கம் சேலம் மாவட்டத்தில் இருந்துள்ளது. பெருமாள் முருகனின் ‘கங்கணம்’ கதையை குறித்தான கேள்விக்கு இந்த பதிலைக் கேட்டு பாவண்ணனே அதிர்ச்சியாகிறார்.  பாவண்ணன் ஒவ்வொரு கேள்வியையும், பதிலையும் ஆங்கிலத்தில் உடனுக்குடன் மொழியாக்கம் செய்ததால், ஒரு மணி நேரத்தில் பெருமாள் முருகனின் படைப்புலகத்தை இதில் பங்குபெற்ற மற்ற மொழிக்காரர்களும் புரிந்துகொண்டிருப்பார்கள்.

சிறுகதைகள்: புதிய தருணங்கள் புதிய அனுபவங்கள்” தலைப்பில் நடந்த விவாதத்தை எம். கோபாலகிருஷ்ணன் ஒருங்கமைக்கிறார். கார்த்திக் பாலசுப்பிரமணியன், சுனில் கிருஷ்ணன், ஜா. தீபா அவர்கள் கவனித்துவரும் சமூகத்தையும் அவற்றை பிரதிபலிக்கும் கதைகளையும் தங்கள் பதில்களில் பகிர்கிறார்கள். தமிழில் வந்த முதல் சிறுகதை , பாரதியாரின் ‘ஆறில் ஒரு பங்கு’, 1913-ல் வெளிவந்தது எனக்குறிப்பிட்டு தமிழ்ச் சிறுகதைகளின் வயது 110 ஆண்டுகள் எனவும், தமிழ்ச்சிறுகதைகளுக்கு அனைத்துவிதமான முன்னுதராணங்களையும் விட்டுச் சென்ற புதுமைப்பித்தன் கதைகளின் நிழல் இன்று எழுதுபவர்களிடமும் உள்ளது எனவும்,  நடத்துனர் ஒரு சிற்றுரையாற்றி உலகமயமாக்கப்பட்ட பிறகு வெளிவரும் அல்லது 2000-ற்குப் பின் வெளிவரும் சிறுகதைகள் குறித்த கேள்விகளை முன்வைக்கிறார்.  லாவண்யா சுந்தரராஜனும், தானும் (கார்த்திக் பாலசுப்பிரமணியனும்) IT துறை சார்ந்த கதைகளையும், செந்தில் ஜெகன்நாதன் அவர் பணிபுரியும் சினிமாத் துறையை ஒட்டியும், திருச்செந்தாழை  வியாபாரச்சிக்கல்களை மையப்படுத்தியும் எழுதுகிறார்கள் என கார்த்திக் பாலசுப்பிரமணியம் பதில் அளித்தார். எந்தக் களங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தாலும் தத்துவார்த்தமான கேள்விகளையும் அவர்கள் கதைகளில் முன்வைக்கிறார்கள் என்று சுரேஷ் பிரதீப்பின் பெயரை நினைவு கூர்ந்தார். சுனில் கிருஷ்ணன் இதற்கான பதிலில் சிங்கப்பூர் லதா, மலேசியா நவீன், டோக்கியோ செந்தில், அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்ததால் வரும் அடையாளச் சிக்கல்கள், பண்பாட்டு ரீதியான சிக்கல்கள், அது சார்ந்த விசாரனைகள் சார்ந்து அவர்களது கதைகளின் பேசுபொருளாவதை குறிப்பிட்டார். ஆஸ்திரிலியா, UK என அவர் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எழுத்தாளரை உதாரணம் சொன்னார். நான் நினைவிலிருந்து இவர்கள்  நால்வரை பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.  காலத்தால் மாறிவரும் சிக்கல்கள் குறித்து எழுதப்படுகின்றன என குறிப்பிட்ட ஜா. தீபா இரண்டாயிரத்திற்கு முன் வரதட்சனையும் வறுமையும் கதைகளில் இடம்பெற்றன, இப்பொழுது திருமணம் அவசியமா, ஆண் பெண் உறவில் உள்ள சிக்கல் என ஆராய்கின்றன என்றார். மேலும் தொன்மங்களை குறித்தும் புலம்பெயர்ந்ததால் சொந்த ஊர் சார்ந்தும் எழுதுவதும் இரண்டாயிரத்திற்குப் பிறகு அதிகம் எனக் குறிப்பிட்டார். சுந்தரராமசாமியின், பள்ளம் சிறுகதை பற்றாக்குறையால் வரும் பள்ளத்தை பேசுவதாகவும், அதே கதையை நிறைவால் உருவாகிவரும் வெறுமை எனும் பள்ளத்தை பேசுவதாக இன்று எடுத்துக்கொள்ளலாம் என்று சுனில் கிருஷ்ணன் இரண்டாயிரத்திற்கு முன்னும் பின்னும் என பள்ளத்தையே இணைக்கும் கோடாகவும் பிரிக்கும் கோடாகவும் காட்டியது சிறப்பு. இன்று இருக்கும் இலக்கிய விமர்சர்களுக்கான பஞ்சத்தை குறித்து ஒவ்வொருவர் பகிர்ந்துகொண்டது கவனிக்கப்படவேண்டியவை. பெண்கள் எழுதாதற்கு காரணம் வாழ்வின் அன்றாடச் சிக்கல்கள் (குழந்தை வளர்த்தல், சமைத்தல்) அல்ல. பெண் எழுதியதால் என்பதாலேயே கேட்கப்படும் கேள்விகள் என்றார் தீபா. ஒரு பெண் எழுத்தாளரை , இது உன் வாழ்க்கையில் நடந்ததா , சொந்த அனுபவமா என்று கேட்பவர்கள் ஆண் எழுத்தாளரை கேட்பதில்லை என்றார். சுனில் கிருஷ்ணன், விமர்சனமாக இல்லாமல் கதை குறித்த கருத்துக்கள் கிசுகிசு-வாகத்தான் பரவுகிறது என்றார். கார்த்திக் பாலசுப்பிரமணியன், எடிட்டர் என்ற ஆளுமையே தமிழ்ச் சூழலில் இல்லாமல் ஆகிவிட்டது என்றார். “கதை இப்படி இந்த அளவில் வந்துள்ளது,  இதை இதை மாற்றவேண்டும் என்று சொல்லுமிடத்தில் ஒருவரும் இல்லை, அதைக் கேட்டு திருத்துபவரும் இல்லை” என்ற உண்மையை இந்த உரையாடல் பதிவு செய்துள்ளது. 

வாழ்நாள் சாதனைக்கான புக் பிரம்மா வழங்கிய முதல் விருதைப் பெற்றவர் , ஜெயமோகன்.  அவருடன் சுசித்ரா ராமச்சந்திரன் ஒரு கலந்துரையாடலை 2024 நிகழ்வில் நடத்தியுள்ளார். ஜெயமோகன் , ஆங்கில நூல்களை வாசிப்பவரான சுசித்ரா எப்படி அவரது நூல்களை கண்டடைந்தார் என ஒரு கேள்வியை கேட்டவரிடமே திருப்பிவிட, சுசித்ரா, கிளாசிக் கதைகளில் உள்ள பண்புகளை ஜெயமோகன் கதைகளில் இனம் கண்டு வந்ததாக சொன்னார். உண்மை சார்ந்த ஆழம், சந்தைப்படுத்தும் தன்மை இல்லாமை, ஒரு தொலைநோக்குப் பார்வை போன்ற பண்புகளால் ஜெயமோகன் கதைகள்,  தான் அதுவரை வாசித்துவந்த சந்தைமயப்படுத்தப்பட்ட கதைகளிலிருந்து வேறுபட்டிருந்தது என்றார்.  உணர்வுப்பூர்வமாகவும் எழுதமுடியும் என்ற ஜெயமோகன் கிளாசிக் தன்மையுடன் எப்படி எழுதுகிறார் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் : ஏற்றத்தையும் தாழ்வையும் ஒரே பார்வையில் பார்ப்பது கிளாசிக் சமநிலை. கடைப்பிடிக்கும் மூன்று வழிகள் :  Creating an archetype, juxtaposing opposites, and using an abstract form. 

ஆனந்த் டெல்டும்டே எழுதிய Mahad: The Making of the First Dalit நூலை தமிழில் மொழியாக்கம் (மஹத்: முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்) செய்த கமலாலயன், “தலித் இலக்கியம் : சவால்களும் சாதனையும்” என்ற கலந்துரையாடலை சுகிர்தராணியுடனும், ஸ்டாலின் ராஜாங்கத்துடனும் நடத்தியுள்ளார். விவாதத்தை ஆரம்பிக்கும் முன், கமலாலயன், தமிழில் தலித் இயக்கம் குறித்து வெளியான சில நூல்களின் பெயர்களை குறிப்பிட்டார். சில நூல்கள் பற்றிய குறிப்புகளை நான் அறிந்திருந்த விஷயங்களையும் இணைத்து இங்கே குறிப்பிடுகிறேன்.  130 வருடங்களுக்கு முன்னரே பெண் கல்வி குறித்துப் பேசிய சாவித்ரிபாய் மீது சமூகம் சாணியை கரைத்து ஊற்றியுள்ளது. அதற்குப் பதில் சொல்லும் விதமாக சாவித்ரிபாயின் மாணவி, முக்தா சால்வே,  தியோனதயா பத்திரிகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது தமிழில் ‘மகர்கள் மாங்கர்களின் துயரங்கள்’ என்று வெளியாகியுள்ளது. தகழி சங்கரப்பிள்ளையின் மலையாள நூல் , சுந்தரராமசாமி தமிழில் மொழியாக்கம் செய்த ‘தோட்டியின் மகன்’  மலம் அள்ளும் தொழிலாளியின் வாழ்வைப் புனைவாக்கி தலித் இலக்கியத்தில் முன்னொடியாக கருதப்படுகிறது. பாவண்ணன் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த புதைந்த காற்று என்ற தலித் இலக்கியத் தொகுப்பு கட்டுரைகள் கவிதைகள் அடங்கியது. ஸ்டாலின் ராஜங்கம் 1980/90-களில் உருவான தலித் தன் வரலாறுகள் ஒரு கதையாடலாக புனைவுபோல ஏற்றுக்கொள்ளப்பட்டன . அபுனைவுகளும் இலக்கியத்திற்கான தகுதியை அடைந்தன. அந்தப் பார்வையில் வைத்து 99-களின் இறுதியில்,  அயோத்திதாசர் என்ற சிந்தனையாளர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள்  ஞான அலாய்சியஸ் என்ற அறிஞரால் தொகுக்கப்பட அது தலித் இலக்கியத்தில் சொல்லத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார்.  ஜே. பாலசுப்பிரமணியனின் ‘உதய சூரியன் முதல் சூரியோதயம்’ வரை என்ற நூல், 1869 முதல் 1943 வரை வெளியான பத்திரிகை கட்டுரைகளின் தொகுப்பு. இது பத்திரிகைகளில் தலித்துகளின் பங்கை பேசும் முக்கியமான நூல் என்றார். வரலாறு என்பது தரவுகளுடன் நிரூபிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும், பொதுஜனப் பார்வையில், கதையும் வரலாறுதான். ஒரு கதையே சொல்லப்பட்டு சொல்லப்பட்டு வரலாறாக நிலை கொண்டுள்ளது என்று உதாரணங்களுடன் விளக்கினார். ஜெயமோகனின் வெள்ளையானையில் வரும் காத்தவராயன் அயோத்திதாஸ பண்டிதர் என்று இலக்கிய வாசகர்கள் அறிவர். ஸ்டாலின் ராஜங்கம் இந்த உரையில் குறிப்பிட்டதைக் கேட்டேன். சுகிர்தராணி, தமிழ் படித்த மாணவியாக கவிதையை தனது அணுக்கமான இலக்கிய வடிவமாக உணர்வதால் கவிதை எழுதுகிறேன் என்றார். குரலை உயர்த்திப் பேசும் கவிதைகளாக ஏன் படைக்கிறேன் என்று தன் வாழ்விலிருந்து உதாரணங்களை சொல்கிறார். அரசாங்க வேலை பார்க்கிறார், நன்றாக சம்பாரிக்கிறார், அழகாகவும் இருக்கிறார், இருந்தும் அவர் ஏன் கவிதை எழுதவேண்டும். எழுதினால் பாப்பாத்தியாகிவிடுவாயா என்றேல்லாம் கேட்கிறார்களாம். தலித்துகள் தலித் பற்றி எழுதவில்லையென்றால், தலித்துகள் பற்றி எழுதப்படமாலே போய்விடும் என்கிறார். 

சுழற்சி முறையில் கொடுக்கப்படும், புக் பிரம்மா வாழ்நாள் சாதனையாளர் விருது, 2025-ல் மலையாள எழுத்தாளர் K.R. மீராவிற்கு வழங்கப்பட்டது. சுசித்ரா இந்த வருடமும் கலந்துகொண்டு, Beyond Borders : Multilingual Sensibility in South Indian Literature என்ற கலந்துரையாடலை வழி நடத்தியுள்ளார். எழுத்தாளர்கள் ஜெயமோகன் (தமிழ்), K.R மீரா (மலையாளம்), மிருனாளினி (தெலுங்கு), ஜெய்ந்த ககய்னி (கன்னடம்), கர்லோஸ் தமிழவன் (தமிழ் / கன்னடம்) இதில் பங்குகொண்டு சுசித்ராவின் எம்மொழிக்கும் பொறுத்தமான இலக்கியத்தரமான கேள்விகளுக்குப் பதில் கூறுகிறார்கள். இந்த ஆண்டில் நடந்த விவாதங்களில் நான் ஆர்வமுடன் கேட்ட இன்னொரு கலந்துரையாடல்,  2025-ற்கான புக்கர் பரிசு பெற்ற பானு முஸ்டாக் பங்கு கொண்டது. அவரது பரிசு பெற்ற கன்னட நூலை (ஹார்ட் லேம்ப்) ஆங்கில மொழியாக்கம் செய்த, புக்கர் பரிசை இணைந்து வாங்கிய தீபா பாஸ்தியும், இந்த நூலை வெளிக்கொணர்வதில் ஈடுபட்ட பதிப்பாளர் கனிஸ்கா குப்தாவும் இதில் கலந்துகொண்டு அவர்கள் அனுபவத்தை பகிர்ந்திருந்தார்கள். 

ஆக, புக் பிரம்மா இலக்கிய வாசகனின் தொடர் கவனத்தில் இருக்கவேண்டிய விழாவாக இருக்கும் பட்சத்தில், இந்த வருடம் ஆகஸ்ட் 21, 22, 23 தேதிகளில் நடக்கும் விழாவிற்கு, யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்று அவர்கள் தளத்தில் வெளியிட்டிருக்கும் கால அட்டவணையை பார்த்தேன்.  ஜெயமோகனும், சுசித்ரா ராமச்சந்திரனும் தொடர்ந்து மூன்றாவது வருடமாக பங்குகொள்கிறார்கள். ஜக்கர்நாட் வெளியிட்டுள்ள அவரது ஆங்கில மொழியாக்க நூல்களை (One Million Steps, Daughter of Kumari)  முன்வைத்து கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யுவன் சந்திரசேகரன், ஆனந்த் குமார், சம்யுக்தா மாயா, எம். கோபாலகிருஷ்ணன், ஜா. ராஜகோபாலன் என பெயர்களை பார்க்க, தமிழ் இலக்கியத்திற்காக நடக்கும் கலந்துரையாடல்களின் பட்டியலை தொகுத்தால் ,  விழாவிற்குச் செல்லும் நண்பர்கள், எவற்றிலெல்லாம் பங்குகொள்ளவேண்டும் என்று திட்டமிட உதவலாம் என அவர்களின் வசதிக்காக நாள் , நேரம் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன். (கவனிக்க : இது எனக்குக் கிடைத்த தகவலின்படி – ஆகஸ்ட் 19, 2025 – 10:00 PM CST. விழாவிற்கான தளத்தில் மாற்றம் இருக்கலாம்).

முதல் நாள் (ஆகஸ்ட் 21, 2026) 

  1. 12:00 PM to 12:50 PM IST  ; MATHANA

நவீன கவிதை மாறிவரும் அழகியல் – கண்டராதித்தன், சம்யுக்தா மாயா, பூவிதழ் உமேஷ், க. மோகனரங்கன்

2. 1:00 PM to 1:50 PM IST  ; AKSHARA

என்னைக் கவர்ந்த புத்தகங்களின் வாசிப்பனுபவம் – ரமேஷ் கல்யாண், சவீதா, T. சிவக்குமார், பா. சகாதேவன் (பழனி கிருஷ்ணசாமி)

3. 1:00 PM to 1:30 PM IST  ; MUKHAMUKHI

Yuvan Chandrasekhar

4. 2:00 PM to 2:25 PM IST  ; ANAVARANA

Kalachuvadu – Pathippu Parimananka Editor: S. Rajaram, Perumal Murugan in conversation with A. Munavarkhan 

5. 2:00 PM to 2:50 PM IST  ;NEWGEN

Masterclass by N. Sukumaran – The Epic Imagination : Bringing Classical Lore and Modern Storytelling 

6. 3:00 PM to 3:50 PM IST  ; MATHANA

நாட்டார் கதைகளும் சமூக வரலாறும் – A. கலையரசி, N. ராமச்சந்திரன், N. வடிவேலன், R. காமராசு

இரண்டாம் நாள் (ஆகஸ்ட் 22, 2026) : 

  1. 11:00 AM to 11:50 AM IST  ; MATHANA

எனது நாவல் : கனவு நனவான கதை  – N. ஶ்ரீராம்,  மு. குலசேகரன்,  எம். கோபாலகிருஷ்ணன், ஹரிஷங்கர் 

2. 12:00 PM to 12:50 PM IST  ; AKSHARA

தமிழில் நவீன பயண இலக்கியம்  –  கடற்கரய், இராயகிரி சங்கர்,   ஈ. தங்கமணி, சிவப்பிரசாத், S. கந்தசுப்ரமணியம் (தொகுப்பாளர்)  

3. 2:00 PM to 2:50 PM IST  ; MATHANA

என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள்  – சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர், சித்தார்த்தன் சுந்தரம், அக்குளூர் இரவி, S. கயல்  

4. 2:00 PM to 2:50 PM IST  ; PoeTTree

Yuvan Chandrasekar – Mangayarkarasi College of Arts and Science For Women

5. 2:30 PM to 2:55 PM IST  ; ANAVARANA

One Million Steps (Book Launch – Jaggernauht)  – B. Jeyamohan in Conversation with Iswarya V

6. 3:00 PM to 3:50 PM IST  ; PoeTTree

S. Kayal – Mangayarkarasi College of Arts and Science For Women

7. 3:00 PM to 3:30 PM IST  ; MUKHAMUKHI

Perumal Murugan

மூன்றாம் நாள்(ஆகஸ்ட் 23, 2026): 

  1. 12:00 PM to 12:50 PM IST  ; PoeTTree

Rathna Venkat – Maharani Cluster University

2. 12:00 PM to 12:50 PM IST  ; CHINNARA LOKA

Smalla friends, big hugs – Storytelling with Pooja Sagar – Tamil, all ages

3. 1:00 PM to 1:50 PM IST  ; MATHANA

புதிய தமிழ்ச் சிறுகதைகளின் போக்குகள்  –  பா. திருச்செந்தாழை, சுஜாதா செல்வராஜ், சுஷில் குமார், விக்னேஷ் ஹரிஹரன் (தொகுப்பாளர்) 

4. 2:00 PM to 2:50 PM IST  ; AKSHARA

நூல்கள் வழியாக தமிழக நகரங்களின் வரலாற்றுத் தடங்கள்  – விஜயானந்தலட்சுமி, மணி மாறன், குமாரநந்தன், ஜா. ராஜகோபாலன் (தொகுப்பாளர்) 

5. 2:30 PM to 2:55 PM IST  ; ANAVARANA

காலச்சுவடு – இது நம் சினிமா – S. தியடோர் பாஸ்கரன்  –  சுகுமாரன், பெருமாள் முருகனுடன் கலந்துரையாடல்

6. 3:30 PM to 3:55 PM IST  ; ANAVARANA

Daughter of Kumari (Book Launch – Jaggernauht)  – B. Jeyamohan in Conversation with Suchithra Ramachandran 

7. 4:00 PM to 4:50 PM IST  ; MATHANA

அயல்மொழிக் கவிதைகள் : ஆழமும் அனுபவமும்  – ஆனந்த் குமார், இரா. கவியரசு, அ. முனவர்கான், அனுராதா ஆனந்த் (தொகுப்பாளர்) 

இதை தொகுக்கும் சமயத்தில் நான் மதிக்கும், தமிழ் இலக்கிய கலந்துரையாடல்களின் பின்னனியாக இருக்கும் பாவண்ணன் அவர்களை அன்புடனும் வணக்கத்துடனும் நினைவுகூறுகிறேன். இந்த வருட விருது தெலுங்கிற்கா கன்னடத்திற்கா என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

Leave a comment