உள்ளத்தால் ஒடுங்கிவிட்ட, வெளியாருடன் பேசத் தயங்கும், எந்த நேரமும் அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்படும் என்னை அப்படியே பிரதிபலிக்கிறாள் இந்த நாவலின் கதாநாயகி செலீனா, என்று T.Kingfisher-ன் Snake-Eater நாவல் குறித்து அதிமிகு புனைவுகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர் பாராட்டிப் பேசினார். Kingfisher நாவலை ஒன்று விடாமல் வாசிக்கும் வாசகர் என்பதால் அப்படிச் சொல்கிறார் என்று என்னால் அவரது கூற்றை ஒதுக்கிவிடமுடியவில்லை. நல்ல வாசகர் அவர். அதிமிகு புனைவுகள் எதுவும் சமீபத்தில் வாசிக்காத நான், இந்த நாவலை வாசித்துப் பார்ப்போமே என்று முடிவு செய்தேன். Speculative Fiction-ற்கு கொடுக்கப்படும் Hugo Award வாங்கிய எழுத்தாளர் T. Kingfisher என்ற தகவலும் வாசிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கைத் தன்மையை கொடுத்தது.
270 பக்கங்கள்தான் என்பதாலும், அடுத்து அடுத்து என வாசிக்க வைத்த கதையின் சுவாரஸ்யத்தாலும், ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன். பரிந்துரைத்த வாசகர், இந்த நாவலுக்கு, உங்களின் மதிப்பீடு என்ன என்று கேட்டார். ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று என் நண்பன் துரையன் சொல்வான். அது என் காலத்தில் நம்ம ஊர் பாஸ் மார்க். அமெரிக்காவில் எழுபதுதான் பாஸ் மார்க். ஆதலால், அமெரிக்கா-வின் இரண்டாம் தலைமுறை வாசகரிடம், ஐந்திற்கு மூன்று அல்லது மூன்றரை கொடுப்பேன் என்றேன். அவரது மதிப்பீட்டில் இதற்கு நான்கு என்றார். என்னால் நீங்கள் நினைத்ததைப் போல அந்த செலீனா பாத்திரத்தை நானென உணரமுடியவில்லை என்றேன். எங்களது உரையாடலை ஒரு அதிமிகு புனைவு வாசகருக்கும் யதார்த்த நாவலை வாசிக்கும் வாசகருக்கும் நடப்பதாக மேலும் நீட்டிக்கிறேன்.
அ.மி.பு. வாசகர் : உடன் இருப்பவர்களால், உடல்ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்ணின் வலியைப் புரிந்துகொள்ளும் உங்களால், உற்றாரால் உறவினரால், உள்ளத்தால் காயப்படுத்தப்படும், பேசத்தயங்கும் பெண்ணின் அகவலியை அவளென உணர முடியவில்லை என நினைக்கிறேன்.
யதார்த்த வாசகர் : இல்லையே , அசோகமித்திரனின் கதைகளில் வரும் எத்தனை சாதாரண பெண்களை நினைத்து வருந்தியிருக்கிறேன். பாலை, ஒரு முறைகூட பொங்கவிடாமல், அடுப்பிலிருந்து இறக்கமுடியாத ஒரு பெண் பற்றிய ஒரு சிறுகதை இருக்கும். அந்தப் பெண்ணின் நிலையை நான் உணர்ந்திருக்கிறேனே. ஷெர்லி ஜாக்ஷனின் , Haunting of Hill House-ல் வரும் Elaine எனக்கு அறிமுகமான ஒரு பெண்ணைப்போலத்தானே உணர்கிறேன். அப்படியெனில் , செலீனாவை நான் உணர்ந்திருக்க வேண்டுமல்லவா ?
அ.மி.பு. வாசகர் : பேசத்தயங்கும் ஒரு பெண்ணை , அவளது சூழலில் எப்படி கஷ்டப்படுகிறாள் என்று நாவல் கட்டமைக்கப்பட்டிருந்தால், நீங்கள் உடனே உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நாவல், அவள் என்ன பேசினாலும், செய்தாலும், குறை காணும் , காதலினிடமிருந்து விலகி ஓடி , அவளுக்கு சுகமாக , அவளை ஏற்றுக்கொண்ட நண்பர்கள் சூழ, அதிமிகு புனைவுக்கே உரித்தான ஒரு கற்பனை நகரில் வாழ்வது போல கட்டமைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் அவளை உணரவில்லை என நினைக்கிறேன். அவள் அந்தப் பாலைவன நகருக்கு (Quartz Creek), அத்தையின் ஊருக்குச் செல்கிறேன் என்று முடிவு எடுக்கிறாள். உணவகத்தில் தனது வேலையை ராஜினமா செய்கிறேன் என்று சொன்னதும், அவளது மேனேஜர் , “ஓ அவனிடமிருந்து தப்பி ஓடுகிறாயா, அப்படியென்றால், சென்றுவிடு, திரும்பி வந்தால் உனக்கு வேலை இருக்கும்” என்கிறாள். செலீனாவோ, “அது எப்படி உங்களுக்குத் தெரியும்” என்கிறாள். “அவன் உடன் இருக்கும்பொழுது , “நீ , நீயாக இருப்பதில்லை” என்று மேனேஜர் சொல்கிறாள். இதைக் கவனித்தீர்களா ?
யதார்த்த வாசகர் : இல்லை. ஆனால், நாவலை முழுதாக கிரகித்த பின்பு, செலீனா-வை புரிந்துகொள்ள, அந்த வசனம் எவ்வளவு முக்கியத்துவம் என இப்பொழுது புரிகிறது.
அ.மி.பு. வாசகர் : இப்படி யோசித்துப் பாருங்கள். என்னைப் போன்றவர்களுக்கு, கேள்வியே கேட்காத, ஜட்ஜ்மெண்டலா பார்க்காத நண்பர்களால் சூழப்பட்ட ஒரு உலகம் இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட கற்பனைதானே எங்களை முன் நகர்த்தும். இந்த நாவலில் , செலீனா செல்லும் நகரத்தில், அவள், உறைவிடம் எனத் தேடிச் சென்ற அத்தை அமீலியா இறந்துவிடுகிறாள். அந்த நகரின் மேயர் , எந்தவிதமான சோதனை கேள்விகளையும் கேட்காமல், உங்க அத்தை-யோட வீட்டுல இருந்துக்க, புதன் கிழமையும், சனிக்கிழமையும் சர்ச்சில இலவசமா சாப்பாடு போடுவாங்க என்று இருக்க ஒரு இடமும், சாப்பாடு கிடைக்கிற வழியையும் சொல்கிறார். புதிதாக ஒரு இடத்திற்குப் போகிறோம், அதுவும் ஒரு பாட் லக் நடக்கும் இடத்திற்கு. என்ன செய்கிறாய், எதற்கு இங்கு வந்தாய் என்று ஒவ்வொருவரும் கேட்டதையே கேட்பார்கள். நாவலின் ஆசிரியர், செலீனா மனதில் நினைப்பதையெல்லாம் , இட்டாலிக்ஸில் போட்டிருப்பார். (ஐயோ, யாரும் எதுவும் கேட்கக்கூடாதே!) . சர்ச் பாட் லக்கில் , யாரும் மறந்தும்கூட இவளை சாப்பிடு என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் கேட்கமாட்டார்கள். உடன் இவள் நாயையும் இட்டுச் சென்றிருப்பாள். நாயை ஏனம்மா இங்கு கூட்டி வந்தாய் என்றும் கேட்கமாட்டார்கள்.
யதார்த்த வாசகர் : செலீனா, அத்தை இறந்து ஒரு வருடமாக, யாரும் வாழ்ந்து கூட்டிப் பெருக்காத அந்த வீட்டில் குடியிருக்கவேண்டும். பாம்பு இருக்கலாம், கரப்பான் பூச்சி இருக்கலாம். அடுப்பறையில் பார்க்கும் தேளை, உதவி செய்யவந்த பாட்டி பில்லி கொடுத்த வடைச்சட்டியில் பிடித்து அப்படியே வெளியே கொண்டு சென்று உயிருடன் விட்டுவிடுவாள். அவள் நினைத்திருந்தால் கையில் வைத்திருந்த துடைப்பத்தால் அடித்துக்கொன்றிருக்கலாம். ஒரு உயிரைக் கொல்வதில் அவளுக்கு விருப்பமில்லையென வெளிப்படும் இடம்.

அ.மி.பு. வாசகர் : அந்த தேளிற்கு, கிளைமாக்ஸில் முக்கிய வேலை இருக்கிறது என்று முதல் வாசிப்பிலேயே இனம் கண்டீர்களா ?
யதார்த்த வாசகர் : இல்லை.
அ.மி.பு. வாசகர் :அதிமிகு புனைவுகளை அதிகம் வாசித்த ஒரு வாசகர் ஒருவருக்கு அங்கே ஒரு குழு கிடைத்திருக்கும். இங்கு புழு பூச்சிகள் பேசும். தேவையெனில் உங்களுக்காக சண்டைபோடும், தன் உயிரையும் கொடுக்கும்.
யதார்த்த வாசகர் : ஒத்துக்கொள்கிறேன். தீடிரென்று செலீனாவின் பின் தோட்டத்தில் வரும் Squash God-ம் , Snake-Eater வில்லனாக மாறும்பொழுது காப்பாற்றும் Merv எனும் மயிலும் அவைகள் என்ன செய்கின்றன என நான் உணர்வதற்கு சிறிது நேரம் ஆகிறது.
அ.மி.பு. வாசகர் : பொதுவாக நம்மிடம் மிருகங்களை பற்றித்தான் பயமிருக்கும். நம்மைக் கொல்லும் அளவு சக்திகொண்ட பறவைகள் உள்ளன என்று நினைப்பதில்லை. கார்ட்டூனில் பார்த்துப் பழகிய ரோட்ரன்னருக்கும், இந்த நாவலின் ரோட்ரன்னருக்கும் எவ்வளவு வேறுபாடு. நாவலின் ஆசிரியர், பறவைகளைப் பற்றி அறிந்தவர். அவருக்கு ரோட்ரன்னரின் உண்மையான முகம் தெரியும். ரோட் ரன்னரை ஒரு ட்ரேகன் என்றுதான் நாவலில் வர்ணிப்பார். நீங்கள் கவனித்திருக்கலாம்.
யதார்த்த வாசகர் : லூனி ட்யூனில் வரும் அந்தப் பறவை குறித்த என் எண்ணமே மாறிவிட்டது. அரிசோனா மாநிலத்தின் நிலக்காட்சிதான் நான் அதிகபட்சம் பார்த்த பாலைவனம். Saguaro, Pale Verde இந்த இரண்டு மரங்களும் என் நினைவில் நிற்கும் மரங்களாகிவிட்டன. Saguaro-வை கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரம் எனவே பார்க்கலாம்.
அ.மி.பு. வாசகர் : உங்களுக்கே தெரியும் எனக்கு எண்கள் என்றால் ஒரு அலர்ஜி. இந்த நாவலில், வீட்டிற்கு அடையாளம் எண்கள் இல்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பெயர் இருக்கும். இப்பொழுது சொல்லுங்கள், Kingfisher எங்களைப் போன்றவர்களை தெரிந்து வைத்திருக்கிறார்தானே ?
யதார்த்த வாசகர் : ஆம் , செலினாவின் அத்தை வீட்டிற்கு , “Jack Rabbit Hole House” என்று பெயரிட்டிருக்கும். சர்ச்சிற்கு, “House of Our Lady of the Pale Verde” என்று பொருத்தமாக இருக்கும். அதற்கு இடது புறம் இருக்கும் வீட்டிற்கு, “Left-of-the-Church House” என்று பெயரிட்டிருப்பார்கள். வலது புறம் இருக்கும் வீட்டிற்கு, “Bougainvilla House” என்று இருப்பதை பார்த்து, செலீனா, அப்படியொன்றும் இவர்கள் யோசித்து வைப்பதில்லை என்று சொல்லிக்கொள்வாள்.
இந்த நாவலின் எனக்குப் பிடித்த தலையாய அம்சம், செலீனாவின், புற அழகை ஒரு இடத்தில் கூட வர்ணித்திருக்கமாட்டார்கள். எத்தனை முறைதான் நீண்ட தலைமுடியும், பெருங்கண்களும் கொண்ட வர்ணனைகளை படிப்பது. கதையின் நாயகி அழகாகத்தான் இருக்கவேண்டும் என்று கதைகளை வாசித்தாலே சலிப்பின் எல்லைக்கு வந்துவிட்டேன். அந்த வகையில் இந்த நாவல் எனக்கு ஒரு ஆசுவாசமாக இருந்தது. இந்த நாவல் முழுக்க செலீனா-வின் அகம்தான் நமக்கு வெளிப்படுகிறது.
அ.மி.பு. வாசகர் : இந்த நாவல் என்னதான் படர்க்கையில் எழுதப்பட்டிருந்தாலும், செலீனா-வின் பார்வையில்தான் நடக்கிறது. அவளே அவளைப் பற்றி எழுதினால் நன்றாக இருக்காது என்பதனாலும் இருக்கலாம்.
யதார்த்த வாசகர் : செலீனா-வுடன் பயணிக்கும் அவளது செல்லப் பிராணியான லெப்ராடர் நாய், காப்பர் பற்றியும் சொல்லியாக வேண்டும். அதற்குக் கிடைக்கும் உணவை எப்படி சாப்பிடுகிறது என்றும், காதிற்கு கீழே சொறிந்துவிடுபவர்களை பிடித்துப்போவதும் என அங்கங்கே குறிப்பிட்டு , தனது எஜமானி சோர்வுறும்பொழுது அதை அறிந்து நடப்பதுமென இருக்கும் காப்பருக்கும், Kingfisher நாவலில் அதற்கான இடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
நடு நிலைப் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த நாவலை பரிந்துரைக்கலாமா ?
அ.மி.பு. வாசகர் : இல்லை. Snake-Eater செலீனாவின் படுக்கையறையில் இருக்கும் காட்சிகள் இருக்கின்றன என்று இருப்பதை சொல்லி பெற்றோர்களின் கவனத்திற்கு விட்டுவிடலாம்.
அடுத்து நீங்கள் இன்னும் T. Kingfisher நாவலை தொடர்ந்து வாசிப்பீர்களா ?
யதார்த்த வாசகர் : அமேசானில் இந்த நாவலுக்கு மட்டும் 11241 வாடிக்கையாளர்கள் ரேட்டிங்க் செய்துள்ளார்கள். 682 வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறியுள்ளார்கள். அவரது வாசகர்களின் கணக்குப்படியும், உங்களின் இதுவரையிலானா எண்ணங்களையும் கருத்தில் கொண்டு இனியும் ஓரிரு நாவல்களை வாசித்துவிட்டு எனக்கான அவதானிப்பை உருவாக்கிக்கொள்வேன்.

Leave a comment