தலைவர் தம்பி தலைமையில் – வழமையிலிருந்து விலகிய படம்

Published by

on

தமிழின் முதல் நாவலான, மாயூரம் வேதநாயகம் பிள்ளையின்  பிரதாப முதலியார் சரித்திரத்தில், கதாநாயகன் பிரதாப முதலிக்கும் அவரது மாமன் பெண் ஞானம்பாளுக்கும் நிச்சயக்கப்படவிருக்கும் திருமணம், ஞானம்பாளின் அப்பா, மாப்பிள்ளை திருமணத்திற்குப் பிறகு பெண்வீட்டில்தான் தங்கவேண்டும் என்று சொல்ல, திருமணம் நின்று விடும். பிறகு பிரதாப முதலியாரின் தகப்பனாரும், ஞானம்பால் தகப்பனாரும் ஆணவத்தினால் வெவ்வேறு இடத்தில் சம்பந்தம் பேசி ஒரே நாளில், பூங்காவூர் என்ற ஊரில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் வடபாதியில் ஒரு திருமணமும் தென்பாதியில் இன்னொரு திருமணமும் ஒரே மூகூர்த்தத்தில் என தீர்மானிப்பார்கள். தலைவர் தம்பி தலைமையில் படத்தில் இரு பக்கத்துவீட்டுக்காரர்கள் ஆணவத்தில் குறித்த நேரத்தில்தான் தங்களுடைய காரியம் நடக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். சிக்கல் என்னவென்றால் இளவரசு (இளவரசு) வீட்டில் மகள் சௌமியின் கல்யாணம். அவர் பகையாளி பக்கத்துவீட்டு மணி (தம்பி ராமையா) வீட்டில் அவரது தகப்பனார் செல்லப்பன் மரணம். இளவரசு, வெள்ளையும் சுள்ளையுமாக இருக்கிற தலைவர் தம்பி ஜீவா-விடம் , ‘கல்யாணம் நிக்கட்டும்னே அவன் கொன்னுருப்பானுப்பா’ என்கிறார். ஜீவா-வும் “அப்படியெல்லாம் இருக்காதுண்ணே, நான் பேசிப் பார்க்கிறேன்”  என்கிறார். பகையென்றால் பகை, பாத்திரம் கழுவிய நீர்கூட அடுத்தவீட்டிற்குச் செல்லக்கூடாது. கதைப்படியும் ஜீவா-வாக வரும் ஜீவா, அவர்களை எப்படி சம்மதிக்கவைக்கிறார், சமாளிக்கிறார் என்பது ஒரு புதுவிதமான நாயகனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. வாழைப்பழத் தாரை சுமந்து செல்லும் பெரியவரை “வா என் ஜூப்பில்” என்று லி̀ஃப்ட் கொடுக்கிறார்.  பெரியவர் இறங்கும் சமயம், வாழைத்தாரில் பாதிப் பழங்கள் சகபயணிகளால் சாப்பிடப்பட்டு பாதியாக இருக்கிறது.  அவரது நல்லகுணத்தையும், தீர்வையும் சொல்ல இந்த ஒரு காட்சி போதும். 

மணப்பெண் சௌமியாக வரும் பிரதானா நாதன், அண்ணன் ஜீவா கொடுக்கும் கல்யாணப்பரிசு கொடுக்கும்பொழுது அகமகிழ்ந்து சிரிப்பது, திருமணத்திற்காக மேக்கப் போட்டுக்கொண்டு திரும்பி வரும் வழியில் வழியும் கிராமத்து இளைஞனிடம் காட்டும் எரிச்சல், காதில் தோட்டை போட்டுக்கொண்டே மணமகன் கன்னீஸுடன் இளமுருவலுடன் பேசுவது என யதார்த்தமாக நடித்துள்ளார். 

எத்தனை பெண் பார்த்திருப்போம், இவள்தான் என்னை ஏற்றுக்கொண்டாள் என்று ஒரு இளைஞனுக்குள்ள ஜொள்ளுடன், மணகள் சௌமிக்குப் பிடித்த கலர் என்பதால் பச்சைக் கலர் ஜூஸ் ஆர்டர் செய்யும் கன்னீஸாக வரும் சுபாஸ் கண்ணனும் ரசிக்க வைக்கிறார். 

யூட்யூப் நாடகங்களில் பார்க்கும் முகங்கள் சின்ன சின்னப் பாத்திரங்களாக வந்தாலும், கதாப்பாத்திரங்களாக மிளிர்கிறார்கள். இவர்களுடன், மணிக்கும், இளவரசுவுக்குமுள்ள பகைக்குமான காரணம், கல்யாணப் பெண் காணோம், கதை முடித்துவைக்கும் கிளைமாக்ஸ் என எல்லாவற்றிகும் கிராமத்து தண்ணீர் டேங்கிற்கு பங்கு உண்டு என்பதை காமிரா முக்கிய பாத்திரமென காட்சிப்படுத்தியுள்ளது.  

வெகு எளிமையாக எடுக்கப்பட்டதுபோல் எடுத்து எப்படி வெட்டி எப்படிக் கோர்த்துள்ளார்கள் என்று  நினைத்துப் பார்த்தால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.  படத்தின் ஆரம்பத்தில், வெள்ளை உடைகள் காயப்போட்டிருக்கும் கொடி, ஒரு பெரிய வீட்டின் பின்பக்கம் அது அழகாக பின்னால் இணைக்கப்படுகிறது. ஒரு காட்சியில்,  மணமகளிடம் அவள் அம்மா, ‘யாருடி போன்ல?’ என்கிறார். “லவ்வருக்கிட்ட எப்ப ஓடிபோலம்னு” என்கிறார். மணப்பெண் காதலருடன் ஓடப்போவதெல்லாம் இல்லை. இரண்டாவது பார்வையில் இந்த வசனம் வெகு இயல்பாக முக்கியத்துவமானதாகிறது. ஜீவாவின் ஜீப்பில் வரும் இரு இளைஞர்களில் ஒருவன்,  தார்சாலையிலிருந்து மணல் பாதை பிரியும் இடத்தில் , ‘நாங்க ரெண்டு பேரும் ஒன்றாக வந்தால் பிரச்சனை’ என்று இறங்கிக்கொள்கிறான்.அவர்கள் இருவர் யார், பின்னனி எல்லாம் காட்சிகளின் வழியாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. 

பேசாத தண்ணீர் டேங்கையே கதையின் பாத்திரமாக்கும் படத்தில் மணி (தம்பி ராமையா) சாமியாடுவதுபோல அதிகப்படுத்தப்படும் காட்சிகள் இல்லாமல் இல்லை. நிறைகள் நிறைய, குறைகள் குறைச்சல் என ஏற்றுக்கொள்ளலாம். 

பாடல்களும் இசையும் கதைக்குத் தேவையான அளவு. கதைதான் கதாநாயகன். சம்பிரதாயமான கதாநாயகியில்லாமல் கதையின் அச்சாணியாக நகர்த்தமட்டும் கதாநாயகன். ஜீவா அதை உணர்ந்து பஞ்சாயத்து போர்ட் எலெக்ஷனில்  நிற்கவிருக்கும் வேட்பாளராக இயல்பாக மக்களோடு மக்களாக விரும்பப்படுவராக இருக்கிறார். அந்தக் கிராமத்து மக்கள் வோட்டுப் போடுவார்களோ இல்லையோ, நடிகனாக அவர் நம் ஓட்டில் ஜெயிக்கிறார்.

அடுத்து என்ன என்பதற்காக ஒரு வெட்டு , ஒரு குத்து என்று எடுக்கப்படும் வழமையான படங்களிலிருந்து விலகி ரசிக்கும்படியாகவும்,  நம்பும்படியாகவும் ஒரு படத்தைக் கொடுத்ததற்காக இயக்குனர் நித்தீஸ் சகாதேவை பாராட்டலாம். 

Leave a comment