தெரிந்தது இரண்டு தெரியாதது எட்டு

Published by

on

Crape Myrtle

ஒரு மகன் வெளியூர் சென்று சம்பாதிக்கவேண்டும் என தன்  தாயிடம் மன்றாடுகிறான். தாயிற்கோ மகனைப் பிரிய இஷ்டம் இல்லை. சென்றே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகனுக்கு கட்டுச்சாதம் கட்டி அனுப்பி வைக்கும்பொழுது, தாய், “போகும் வழியில் புளியமரத்தின் அடியில் சாப்பிட்டு ஓய்விடு, ஊருக்குத் திரும்பி வரும் வழியில் வேப்பம் மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறு” என்கிறாள். அன்னையின் ஆணைப்படி, செல்லும் வழியில் புளியம் மரங்களை கண்டு ஓய்வு எடுக்கிறான். சரியான உறக்கமில்லை.சாப்பிட்டது செரிக்கவில்லை. பிடித்த பிணி என்ன என்று தெரியவில்லை.  உடல் இளைத்து, அம்மாவின் நினைவு வருகிறது. ஊருக்குத் திரும்ப முடிவெடுத்து,  திரும்பும் வழியில் இருக்கும் வேப்பமரங்களின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்கிறான். வீடு வந்து சேரும் முன்னரே உடலும் தேறிவிடுகிறது. வேப்பம் மரத்தின் மருத்துவ குணம் இந்தக் கதையின் வழியாக அறிய வந்தேன்.

மாடுகளும் கன்றுகளுமாக நிறைந்த எங்கள் நிலத்தை கிளுவை மரங்கள்தான் நான்கு பக்கங்களும்  நிறைந்து நின்று வேலியென காவல் காட்கும். கிளுவன் இலையை சாப்பிட்டால் காது கேட்காது என்று அம்மா எத்தனையோ முறை சொல்லியிருப்பார். அம்மா பார்க்காத கணங்களில்,  நானோ அதை மிக விரும்பிச் சாப்பிட்டேன். கிணற்றில் கல்லெறிந்தால் கல்யாணம் ஆகாது என்று என் தாய்மாமன் சொன்னப் பொய்யைப் போல, அவர் அக்கா சொன்னதும் பொய்தான் போல.  

PeacockFlower
PeacockFlower

என் தந்தை , ஏகாதேசி விருதம் இருந்து, விரதத்தை முறிக்கும் காலை, ஊரெல்லாம் கூட்டி விருந்து கொடுப்பார்.  பதின்ம வயதில் இருந்த என் மூத்த சகோதரி, பதினாறு வகையான கீரை , காய்கறி வகைகளை விருந்திற்கான சமையலை பொறுப்பேற்படுத்துச் செய்வார். என்னைத்தான், “சாமி, போய் பிரண்டை, மின்ன மிஷ்டையெல்லாம் பிடுங்கிக் கொண்டுவா”  என்று அனுப்பிவிடுவார். தைப் பொங்கலின்போது,  போகிப்பண்டிகையன்று மாலை, காப்புக் கட்டுவதற்கு , ஆவாரம் பூவையும், பின்னப் பூவையும், வேப்பங்கொத்துகளையும் பறித்துவரும் வேலையும் எனக்குத்தான். 

பெயரைக்கூட சொல்லமாட்டோம், நானும் பக்கத்துவிட்டுக் குழந்தைகளும் மலர்ந்து நிற்கும் அவற்றைப் பார்த்தவுடன்,  “தாத்தா தாத்தா காசு கொடு, இல்லைனா, தலையை வெட்டி விடுவோம்,” என்று பெருவிரலையும் ஆள்காட்டிவிரலையும் கூட்டிவைத்து கூர் நகத்தால் அந்தப் பூக்களை கொய்துவிடுவோம். காலிலோ கையிலோ நீண்ட நாள் ஆறாத புண்ணிருந்தால், குப்பைமேணி இலையை உறித்து, புண்ணின் மேல் அதன் சாற்றைப் பிழிவோம். எரியும், அப்படி எரியும். புண் ஆற ஆற எரிவது குறையும். காட்டிலும் மேட்டிலும் விளையாடும் எங்களுக்கு, காலில் வேலான் மரங்களின் முட்கள் ஏறிவிடும்.  எருக்கஞ்செடியின் இலை ஒடித்து அதன் பாலை ஊற்ற, ஏறிய முள்ளை இன்னொரு முள்ளால் இலகுவாக எடுக்க வைக்கும். பஸ் பிடிக்க மூன்று மைல் நடக்கவேண்டும் என்ற வசதியுள்ள எங்கள் கிராமத்தில் வேலைபார்க்க வந்த அந்த பாவப்பட்ட வாத்தியார், ” பசங்களா, இந்தப் போர்டை ஊமத்தம் இலை தேய்த்துக் கழுவுங்கடா!” என்று ஆணையிடுவார்.   

Four-Nerve Daisy

கதையாகவும், விளையாட்டு நண்பனாகவும், உணவாகவும், மருந்தாகவும் அறிந்த மரங்களையும், செடிகளையும், கொடிகளையும், பூக்களையும், இலைகளையும் நட்பெனவும் உறவெனவும் நினைத்தவன், வாழவந்த இடத்தில் இருக்கும் செடிகளையும் கொடிகளையும் அறியாதவனாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது நடந்து இருபது இருபத்திரண்டு வருடங்கள் இருக்கலாம்.அலுவலக நண்பர்களுடன், ஆஸ்டினில் எம்மா லாங்க் பீச் எனும் இடத்தில் மானேஜர் லஞ்ச் என்று சிறு சிற்றுலா சென்றிருந்தேன். பீச் எனச் சொல்லப்படும் இது , நகரில் எங்கு சென்றாலும் பார்க்க நேரிடும் கோலராடோ ஆற்றின் கரை. அந்த ஆற்றில் கிரா̀ஃபிஸ் பிடித்து, அங்கேயே மானேஜர்கள் க்ரில்லில் சுட்டு உடன் பணிபுரிவவர்களுக்குப் பரிமாறுவார்கள். லாப்ஸ்டர் வகையைச் சேர்ந்த அதை ஓட்டைப் பிய்த்தெடுத்துவிட்டு  சுடுசதையை சாப்பிடவேண்டும். உஃப் உஃப் என்று ஊதி வாயில் அடக்கிக்கொண்டு, கரை முழுக்க அடர்ந்திருந்த மரங்களை காண்பித்து, அதன் பெயர் என்ன? இதன் பெயர் என்ன? என வெவ்வேறு நண்பர்களை கேட்டேன். எவர் ஒருவரும் ஓக் மரத்தின் பெயரை தவிர மற்ற எதற்கும் சரியான பெயர் குறிப்பிட்டு அடையாளம் சொல்லவில்லை. ஆஸ்டின் முழுக்க ஓக் மரங்களும் சீடர் (ceder)  மரங்களும்தான். அந்த இரண்டு மரங்களையும் அறிந்துகொள்ள அவை கொடுக்கும் சளியும் இருமலும் போதும். ஆஸ்டின் நகருடன் ரத்தமும் சதையுமாக உறவாட முடியாமல், சீடர் மர மகரந்தத்தின் அலர்ஜியால் கண்ணில் நீர்வடிய  ஓரிரு மாதங்களில் வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் உண்டு.   வீட்டிற்குப் பின் உள்ள தோட்டத்தில் மரங்களை நடவந்த பெண்ணிடம், என்ன மரம், குளிர் காலத்தில் இலை உதிர்ந்துவிடுமா போன்ற கேள்விகளுடன், “You know, there is a tree. After one finishes outside walking, it smells like fish. Do you know what tree causes it?” என்ற கஸ்டமான கேள்விகளுக்கும் அவள் பதில் சொன்னாள். எல்லாவற்றையும் எழுதி வைக்கும் நான் அவற்றை குறிப்பு எடுக்காமல் இருப்பேனா? அம்மா அப்பா சொன்ன புளியமரம் வேப்பம் மரம் கதை போல எதுவும் அவள் சொல்லதாதலோ என்னவோ எந்த மரத்தின் பெயரும் நினைவில் இல்லை. 

கடந்த ஐந்து வருடங்களாக, தொடர்ந்து நடைப் பயணம் செல்வதால் இருக்கலாம். பெயர் தெரிகிறதோ இல்லையோ. வழி நெடுக இருக்கும் மரங்கள் என் அகத்தில் படிந்துவிட்டன என அறிகிறேன். மூன்று சாலைகள் இணையும் இடத்தில் உள்ள ஒரு மரம், இந்த வருடம் குலுங்க குலுங்கப் பூத்திருக்கிறது.  சென்ற வருடம் பூக்கள் இருக்கவேண்டிய இடத்தில் இலைகள் மட்டுமே கொண்டிருந்தன என அறிந்திருக்கிறேன். புற்களுடன் ஒன்றி வளரும் அந்தச் செடியின் பூக்கள் (Four-neve Daisy) பரிச்சயமானவை போல ராதாவையும் என்னையும் பார்த்துச் சிரிக்கின்றன. 2036-ல் Graduate ஆக இருக்கும் குழந்தையின் படம்போட்ட விளம்பர அட்டை நடப்பட்ட வீட்டின் முன் உள்ள மரத்தை உற்று நோக்கி, இந்த மரமும் பூக்கும் என்று அதிசயக்கிறேன். அமெச்சூர் ஓவியன் வரையும் மரத்தைப் போல,  நடுமரத்திலிருந்து ஒன்று போல பிரிந்து செல்லும் ஐந்து கிளைகள் கொண்ட மரமும், உட்கார்ந்து ஊசலாடலாம் என இரு கிளைகள் கொண்ட பெருமரமும் எந்தத் தெருவில் எந்த இடத்தில் எனக்காக காத்திருக்கும் என்று சொல்லமுடியும்.

Trumpet Creeper

நடைப்பயணத்தில்,  Trumpet Creeper பூக்களை பார்க்கிறேன். போனில் போட்டோ எடுக்க , தொழில் நுட்பத்தின் உதவியால்தான் பெயர் தெரியவருகிறது. செந்தில் ஜெகன்நாதன், ‘அனாகத நாதம்’ , சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல  நானும் புன்னகைக்கிறேன்.  அவரது நூலிலிருந்து –  “என் தந்தை வீட்டுக் கொல்லையில் வேலி முழுக்க செம்பருத்திச் செடிகள் நிறைய வளர்த்தார். ஒரு நாள் காலை தூக்கம் கலைந்து எழுந்து வந்து பார்க்கும்போது வேலியோரத்தில் நின்றிருந்த அத்தனை செடிகளிலும் செம்பருத்திப்பூக்கள் மலர்ந்திருந்தன . பூக்கள் காற்றில் ஆடி மேலும் கீழுமாய் அசையும்போது என் செவியில் நாதஸ்வர இசை ஒலித்தது.” 

நான் மரங்களை உற்றுப் பார்ப்பதைப் போல , சந்திரா தங்கராஜின், ‘கனவிலிருந்து புறப்பட்ட மஞ்கள்நிற முகங்கள்’  நாவலில், வீட்டு முற்றத்தில் அமரும் புறா ஒன்று, அரைமணி நேரம் அசையாமல், எதிர்த்திசையில் உள்ள மரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்.  நடைப் பயணத்தில், என்னை மகிழ்வித்தப் பூக்களை WhatsApp status- வைக்க, Lantana என  நான் குறிப்பிட்ட பூவை பார்த்துவிட்டு, சந்திரா, இதை உன்னிச்செடி என்று ஊரில் சொல்வார்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பினார். மற்ற செடி கொடிகளுடன், உன்னிச்செடியையும் தனது நாவலில் வளரவிடும் சந்திரா, இதுல கறுப்பு நிறத்தில் பழம் வரும், இனிப்பாக இருக்கும். சாப்பிடலாம்.  லாண்டனா பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது, உன்னிச்செடிக்களின் பூக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரே இனத்தைச் சேர்ந்தது என்று கூடுதல் தகவல்களும் சொன்னார். 

Lantana
Lantana

இரண்டு Crape Myrtle மரங்கள் எங்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ளன. சிவப்பு, பிங்க், வெள்ளை, ஊதா என பல வண்ணங்களில் மலர்கள் பூக்கும் இந்த மரங்களை புதிதாக உருவாகிவரும் கம்யூனிட்டிகளில்தான் சாலையின் இருமருங்கிலும் நிரையாக நட்டு வைத்திருப்பதை பார்க்கிறேன்.  எங்கள் நடைப் பயணத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும். எனக்கும் ராதாவிற்கும், பூக்காத Crape Myrtle மரங்கள் எங்கங்கே உள்ளன எனத் தேடுவதும் என்னவாக இருக்கும் என்று ஆராயும் ஆவல் உண்டு. பாட்டி தாத்தாவோடு இந்த ஊரில் வளர்ந்தவர்களுக்கு அவர்கள் சொல்லியே தெரிந்திருக்கும். 

மல்லிகை, செம்பருத்தி, ரோஜா – இதுவெல்லாம் வைத்துக்கொள்வதில் என்ன திரில், இந்தப் பூவை இப்பொழுதே வாங்கிக்கொடுங்கள் என்று, ராதா, ஒரு ஷாப்பிங்கின்பொழுது,  ‘Mandevilla’ என்று லேபல் தாங்கிய ஊதாப்பூக்கள் நிறைந்த செடியை ஒன்றி நின்றுகொண்டார். அதுவும் இப்பொழுது எங்கள் வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்கிறது. Rock-Trumpet என்று பொதுவான பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அதில் வந்து தேன் குடிக்கும் சுட்டு விரல் அளவுள்ள ஹம்மிங் பேர்டை புகைப்படத்தில் அடைத்துவைக்க முயுன்று, ராதாவும் நானும் பலமுறை தோற்றுவிட்டோம். 

Rocktrumpet
Rocktrumpet

பூத்துக் குலுங்கும் செடியைப் பார்த்ததும், peacock flower, Mealycup Sage, Daisy-யில் இது Four-Nerve என்று இனம் கண்டறியாத எனக்குத் தெரிந்தது இரண்டு, தெரியாதது எட்டு. ஐயோ, புதிதாக வந்திருக்கிற அந்த நாலு பேருகிட்டத்தான் கேட்கனுமா ? 

Leave a comment