பண்பாட்டைக் கண்டடைதல்

Published by

on

நான் மிகவும் தாழ்வு மனப்பான்மையாக உணர்ந்த தருணம் அதுதான். வேலை பார்க்கும் அலுவகலத்திலேயே, ஒரே வேலையை பல வருடமாக செய்து சலித்துப்போய், இன்னொரு துறைக்கு மாற்றிக்கொண்டு சென்றிருந்தேன். புதிய குழுவில் அறிமுகமான நண்பர் சேடிடம், சம்பிரதாயமான குடும்பம் குடித்தனம் கேள்விகள் வந்த பொழுது, அவருக்கு ஒன்பது குழந்தைகள் என்றார். எட்டுப் பெண்கள் ஒரு பையன். “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்,” என்ற கேள்விக்கு, ஒரே பையன் என்று சொன்னால் சாதனையாளனாக இருக்காது. “உப்பு உளதா என்றால், பருப்பு உளது” எனச் சொல்லும் வணிகன் போல, “என் தந்தைக்கு ஐந்து குழந்தைகள் “ என்று சொல்லலாம் என சில நொடிகள் நினைத்தேன்.  “எங்களுக்குப் பிறந்த குழந்தை ஒன்று , இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்திருக்கிறோம்,” என்றேன்.   

இந்தக் காலத்தில இத்தனை பிள்ளைகளா என்று அவன் மதத்தை ஊகிக்கும் பார்வை என்னிடம் இல்லை, நான் வேறுவிதமாக எடுத்துக்கொண்டு பதில் சொன்னது அவருக்குப் பிடித்திருந்தது. இருவரும் குடும்பமாக சந்திக்கும் நண்பர்களாக ஆனோம். என் தந்தை அமெரிக்கா வந்திருந்தபொழுது, அவரும் அவரது குழந்தைகளும் வந்து வரிசையாக நின்று, கைகூப்பி வணக்கம் சொல்லி எங்கள் வீட்டில் நுழைந்தார்கள். ராதாவும் நானும் , ஃபங்க் தம்பதிகளுக்குப் பத்தாவதாக பிறந்த பெண் குழந்தையைப் பார்க்க பரிசுப் பொருட்களுடன் சென்றோம். “இதுவெல்லாம் எதற்கு? “ என்றார். எங்கள் வழக்கத்தில் ஒருவரைப் பார்க்கச் செல்லும்பொழுது வெறும் கையுடன் செல்வதில்லை என்றோம்.  “என்னைப் பார்க்க வந்தால் உனக்குச் செலவு அதிகம் , “ என்றார்.  “நாங்கள் ஐந்து பேர், ராதா-விற்கு இரு சகோதரிகள்,  அவர்கள் குழந்தைகள்.  எங்களுக்கு இதுவொன்றும் புதிதல்ல.”  என்றேன். அந்தப் பத்தாவது குழந்தையின் பெயர் மாயா. 

சேட், ஒரு நாள், நெற்றியில் கருப்பு நிறத்தில் விபூதிபோல் வைத்திருந்தார். “ நீதான், பராசக்தியை வணங்கிவிட்டு, சிகப்பு பொட்டு வைப்பாயா, எங்களுக்கும் பொட்டு வைக்கும் வழக்கம் உண்டு”  என்றார். ஈஸ்டர் நாட்களில் அவர் குடும்பம் கடைப்பிடிக்கும் ஆஸ் வெட்னெஸ்டே பற்றி  விளக்கம் கொடுக்க, சிவன், முருகன், திரு நீறு என்று  நான் பேச, எல்லோரும் ஒரு வகையில் பூமியுடன் சேரும் தூசு-தான் என்று அவரவர் நம்பிக்கைகளை பரிமாறிக்கொண்டோம்.

நானும் சேடும், ஒரே குழு. இந்தியா-வில் இருக்கும் குழுவுடன், காலையில் இணைய சந்திப்பு நடத்துவோம். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்திய, இந்தியா டீம் லீட்,she just passed out , sir என்றார்.  என்னுடன் இந்தப் பக்கம் Webex-ல் இருந்த சேடும், டானும் அதிர்ச்சியாக, ‘what happened?’ என்று கவலையாகிவிட்டார்கள். புரிதலில் என்ன தவறு நடந்திருக்கிறது எனத் தெரிந்து நான், ‘Don’t worry. She has graduated just recently. He meant to say she is a fresh graduate out of the college’ என்று விளக்கினேன்.  அதற்கு அப்புறம் சேடும் டானும் என்னிடமிருந்து நிறைய இந்திய ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொண்டார்கள். Yogurt தெரிந்த அவர்களுக்கு Curd தெரிந்திருக்கவில்லை என்பதைவிட அன்றாட வழக்கத்தில் இல்லை எனலாம். நீங்கள் எப்படி வெளியே போய்விட்டு வந்து , சமைப்பதற்கு  நேரமில்லை என்றால், இரண்டு ப்ரெட்டுக்கு இடையில் காயோ கறியோ வைத்து சாண்ட்விச் என்று சாப்பிடுவீர்களோ, நாங்கள் அப்படித் தயிர் சாதம் செய்வோம் என்று கூடுதல் தகவலும் கொடுப்பேன். சேட் , தயிர்சாதம் செய்முறையைக் கேட்டுக்கொண்டு, அவர் வீட்டிலும் செய்து பார்த்தார்.  

சேடும், டானும்தான் எனக்கு Fantasy Football பற்றிச் சொல்லிக்கொடுத்தார்கள்.  ஒன்பதாம் வகுப்பில் இருப்பவனை freshman, பத்தாம் வகுப்பு படிப்பவனை sophomore பதினொன்றாம் வகுப்பு படிப்பவனை junior, பனிரெண்டாம் வகுப்பு படிப்பவனை Senior என்றும், திரும்பவும் காலேஜில், முதலாம் வருடம் படிப்பவனை Freshman என்று ஆரம்பித்து அதே சுற்று வரும் என்று கற்பித்தவர்களும் இவ்விருவரே. “என்னடா சொல்றீங்க, திரும்பவும் Freshman-ஆ? ஒரே கன்பூயூசிங்கா இருக்கே?” என்று சேடிடம் அங்கலாய்த்தேன். மேல்பார்வைக்கு, வேலையே செய்யாதவன் போல் இருக்கும் டான் குறித்து “உன்னால் நம்பமுடியுமா, டான், அவனது பள்ளியில் வேலடிக்டோரியன்,  “ என்றார் சேட்.  “அதுலென்ன கழுதை கிடக்கு ?” எனக் கேட்கும் முன் பள்ளி இறுதியில் முதலாம் இடத்தில் வருபவர்களுக்கு இந்தப் பெயர் உண்டு எனத் தெரிந்து நாக்கைக் கடித்துக்கொண்டேன்.

சேடிடம், எனது அமெரிக்க வாழ்வியல் புரிதல்களை பகிர்ந்த வண்ணம் இருப்பேன். நான் அமெரிக்கா குடிபெயர்ந்து ஐந்து மாதத்தில், ஹாலோவின் வந்தது. மாலை நேரத்தில், ஒரு சிறு பெண், அழகிய கூடையுடன், எங்கள் வீட்டைக் கதவைத் தட்டி Trick or Treat என்று சொல்லியது. அவளது கூடை நிறைய சாக்லெட் இருந்தது. அந்தப் பெண் , எங்களுக்குச் சாக்லெட் கொடுக்க வந்துள்ளாள் என்று நினைத்தேன். நல்ல வேளை, அது சமயம், TV-யில், கிட்டத்தட்ட அதைப் போல சீன் வந்தது. அதில் வீட்டில் இருந்தவர்கள் வீடு தேடி வரும் குழந்தைகளுக்கு சாக்லெட்களை அள்ளி அள்ளி கொடுத்தார்கள். இது எனக்கு எதேச்சையாக கற்றுக்கொண்ட புரிதல். இதை சேடிடம் சொல்லியிருக்கிறேன். இந்த என் அனுபவத்தை, சேட், கொஞ்சம் மாற்றி, “You know what, Rajan tried to steal the candy from that kid, instead of offering her” என்பான்.

Friends, How I Met Your Mother, Everybody loves Raymond, Gilmore Girls என்று TV Series பார்ப்பதை சொன்னால் சேட் திட்டுவான். அதில் உங்கள் வாழ்க்கை முறைகளை புரிந்துகொள்ளலாம் அல்லவா என்பேன். அதற்கும் நிகழ் வாழ்க்கைக்கும் நிறைய வேற்றுமை உண்டு என்பான். 

எனக்கும் சேடிற்கும் மேலாளராக இருந்த மைக்கேல் மற்றும் சில நண்பர்களும், தனியாக சின்னதாக இன்னொரு  நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். நான் அவர்களுடன் இணைந்தேன். சேடும் அவரது மனைவியும், ஹூஸ்டன் அருகில் உள்ள அவர்களது சொந்த ஊரான குறு நகருக்கு, சென்றார்கள். காரணம், அவர்களுக்கு அவர்கள் பெற்றோர்களின் அருகில் இருக்கவேண்டும். இந்த இடத்தில் அவர்களும் நம்மைப்போல என்று உணரமுடிகிறது அல்லவா ?

எனக்கு மேலாளராக இருந்தவர்களில்  மைக்கேல், என் ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். அவருடனான உரையாடல்களும் பண்பாட்டு ரீதியாக சுவாரஸ்யமனதாக இருக்கும்.  ஒரு வாராந்திர நேருக்கு நேர் சந்திப்பில், எனக்கும் ராதாவிற்கும் 25-ஆண்டு நிறைவு நாள் (25th anniversary) என்றேன். “ஒன்றாக வாழ ஆரம்பித்தா, திருமணமாகியா?,” என்று மேல்விளக்கம் கேட்டார். “அடப் பாவி, இவ்வளவு நாள் என்னோட பழகி, கல்யாணத்திற்கு முன்னால் எல்லாம் நாங்கள் ஒன்றாக வாழமாட்டோம்” என்று உனக்குத் தெரியும்தானே என்றேன்.  “உனக்குத் தெரியும்தானே, நானும், அவளும் கல்யாணத்திற்கு முன்னால் இரு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம்! “ என்றார்.  நான் ஒவ்வொரு முறை இந்தியப் பயணத்திற்கு ஆயுத்தமாகும்பொழுதும், யாருக்கு என்ன வாங்கியிருக்கிறாய் என்று கேட்டுவிட்டு, “அப்பராணிப் பயலே, இந்தக் காசில் நான் இரண்டு முறை யூரோப்  ட்ரிப் போய்விட்டு வந்துவிடுவேன்”  என்பார்.  அலுவலகம்  நடத்தும் கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு, “Would you bring your significant other?”  என அவர் அறிவித்தபொழுதுதான், பொலிட்டகல் கரெக்ட்னெஸ் உணர்ந்த தருணம். 

நான் பத்தாம் வகுப்புப் படிக்கும் பொழுது டானும் பத்தாம் வகுப்பு  படித்தவன் என்று ஒரு நாள் புரிந்துகொண்டேன்.  நான் மைக்குடன் வேறு அலுவலகத்தில் இணைந்த பிறகு, வலுக்கட்டாயமாக டானை அழைத்து என்னிடம் வேலை பார்க்க அமர்த்திக்கொண்டேன். அவனுக்கு மேலாளர் ஆகவேண்டும் என்ற கவலையெல்லாம் இல்லை. சொன்னதை மிகச்சரியாக மிகவேகமாகவும் செய்வான்.  அவனுக்கு கல்யாணமே ஆகவில்லையே என, நான்தான் கவலைப்படுவேன். இந்த வருடமாவது கல்யாணம் ஆகட்டும் என்று கார்ட் எல்லாம் கொடுப்பேன். அவன் தனிவீடு வாங்கி தனியாக மகிழ்வாகவே வாழ்ந்தான்.  

சஹா,  அப்பொழுது நடு நிலைப் பள்ளி மாணவனாக இருந்தார். வீட்டில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களாகத்தான் ஓடிக்கொண்டிருக்கும்.  நாங்கள் அறிமுகப்படுத்தாமலேயே ‘ஷ்ரேயா கோஷல்’ பாடுவது பிடிக்கிறது என்றார். இது தெரிந்த சேட், “நீ வேணும்னா பாரு, ஹை ஸ்கூல் ஜுனியர் ஆகறப்பெல்லாம், அவன் இங்கிலீஸ் பாட்டு மட்டும்தான், கேட்பான்” என்றார்.  ராக், மெட்டல், ப்ளுஸ், ஜாஸ், பாப் என்று கேட்டவுடன் இனம் பிரிப்பவராகவும், தனக்கு என்ன பேண்ட் பிடிக்கும் என்ற ரசிகனாகவும் சஹா மாறியதில் எனக்கு இன்றும் ஆச்சரியம்தான். சஹாவால், Green Day, Kiltro  என்று எனக்கான லிஸ்டும் ஓரளவுக்கு வைத்துள்ளேன். இசையும், ரசனையும், உணவும், எப்படி  வாழும் இடம் சார்ந்து மனிதனுக்குள் ஊறிவிடுகிறது என சஹா மூலம் அறிந்துகொண்டேன். சஹா , டேட்டூ போட்டுக்கொண்டபொழுது கொஞ்சம் ஷாக்-தான். என் அம்மாவும் நெற்றியில் பொட்டு, கையில் ஒரு மயில் என பச்சை குத்தியிருந்தார். பாட்டியைப் போல பேரன் என சமாதானம் செய்துகொண்டேன். 

சஹாவால், நான் 100 டிகிரி பாரன்ஹீட் வெய்யிலிலும் டீ குடிப்பதை அறிவியல் பூர்வமாக புரிந்துகொள்ளமுடிவதில்லை. காலை பதினொரு மணிக்கு , சூரியன் இனி சிறிது நேரத்தில் தலை உச்சிக்கு மேல் வரும் முன், “ஏ சாமி, அய்யாவுக்கு இந்தக் காப்பித் தண்ணியக் கொண்டு போய் கொடுக்கறயா? “ என்று என் அன்னை, உழுதுகொண்டிருக்கும் என் தந்தைக்கு கொடுக்கச் சொல்லி கட்டளையிடுவார் என்ற எனது வாழ்வியலைத் தெரிந்தவராக,  மதியத்தில் காப்பிக் கடைக்குச் சென்றால், எனக்கு ப்ளாக் காப்பியும் அவருக்கு குளிர்ந்த பானமும் ஒன்றும் வாங்கிக் கொள்வார் சஹா.  இளைஞர்களை பார்த்தவுடன், வேலை, சம்பளம், கல்யாணம் என்றெல்லாம் கேட்கக் கூடாது என்பதை அவரிடமும், அவர் நண்பர்களிடமும் கற்றுக்கொண்டேன். 

நண்பன் ஜேஸன், வேலை பார்ப்பது ஆஸ்டின் என்றாலும், நீண்ட விடுமுறை வரும்பொழுது , வடக்கே முன்னூறு மைல் தொலைவில் ஓக்லஹாமா போகும் வழியில் உள்ள அவன் அம்மா, அப்பா வாழும் ஊருக்குச் செல்வான். பணி ஓய்வு பெற்று வாழும் அவன் , அம்மா, அப்பா-விற்கு, TV, computer செட் பண்ணிக்கொடுப்பதிலேயே நேரங்கள் செலவாகும். பெரும் வலுவான வேலைகள் இவன் வரும்வரை காத்திருக்கும். வார இறுதி முடிந்து வரும் ஜேஸன், மதியம் சாப்பிட்டுக்கொண்டே அத்தனை கதைகளையும் சொல்வான். 

என் குழுவில் இருந்த பாப் (பெயர் மாற்றி உள்ளேன்) , “நீ சொல்வதைச் செய்கிறேன்” என்று கட்டளைகள் எழுதும் கோடராகவே இருக்க முடிவெடுத்து,  என் குழுவில் இருந்தார். அங்கு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வருடங்களில், இங்கு UT ஆஸ்டினில், கணினித் துறை மாணவராக இருந்துள்ளார். . சேரில் அமர்ந்திருந்தால்கூட என் உயரம் இருப்பார். நேருக்கு நேர் சந்திப்பில் சேரை உயரம் குறைத்து அமர்ந்து கொள்வார். மனைவியை , அவரது சகோதரிகளின் பெயர்களில் ஒன்று சொல்லி அழைத்து மாட்டித் திட்டு வாங்குவார். நான் வேற்று மனிதன், மேலாளர் என்று அறிந்தும் என் முன்னால் தேம்பி தேம்பி அழுதுகொண்டு சொல்லும் சூழல் ஒன்று அவருக்கு வந்தது.  வாழ்வின் வலி மொழி கடந்தது. 

முப்பது வருடங்களை எட்டும் என் அமெரிக்க வாழ்வில், எத்தனை நினைத்துப் பார்த்தாலும், என்னுடன் வாழும் சக மனிதனின் பண்பாட்டை , வரலாறை, தொன்மத்தை,  நம்பிக்கைகளை, வெறும் உரையாடல்களால் மட்டும் கண்டடையமுடியவில்லை என்பது நிதர்சனம்.  மேலும் மேலும் கண்டடைய நூல்களை சார்ந்தே உள்ளேன். போலவே, எனது தொன்மத்தை, வெய்யில் வாழ்க்கையை அறிந்து கொள்ள, எந்த எந்த தமிழ்ப் புனைவுகளின் ஆங்கில மொழியாக்கங்கள் (நூல்கள்) வரிசையை, அவர்களுக்கு , சஹா போன்ற அடுத்த தலைமுறையினருக்கு உதவும் என, என் ரசனையின் அடிப்படையில் தொகுத்துக்கொண்டுள்ளேன்.  உதாரணத்திற்கு,  சி.சு. செல்லப்பாவின், வாடிவாசல், கல்யாண் ராமனின் ஆங்கில மொழியாக்கத்தில் வந்துள்ள  நூல் குறித்து , இந்தத் தொடரின் முதல் பதிவு இருக்கும். 

2 responses to “பண்பாட்டைக் கண்டடைதல்”

  1. Saravanan Avatar
    Saravanan

    சார்! வணக்கம். சிறப்பு. நல்லதொரு தொடக்கமாக இது அமையும். வாழ்த்துகள். – முனைவர் ப. சரவணன், மதுரை, இந்தியா.

    Like

  2. Austin Soundar Avatar

    வணக்கம் சரவணன் சார் ! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தாங்கள் , சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் குறித்து எழுதிய கட்டுரை , எனது வரவிருக்கும் கட்டுரைக்கு, முத்தாய்ப்பாக அமைந்தது என்று இங்கு பதிவு செய்துகொள்கிறேன். வாடிவாசல் குறித்து , அதில் உள்ள பண்பாட்டுத் தாக்குதலை மிக விரிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. நண்பர்கள் யாரேனும், அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து , ஆங்கில இதழ்களில் பிரசுரிக்கலாம்.

    Like

Leave a comment