பண்பாட்டைக் கண்டடைதல் – ஜல்லிக்கட்டு

Published by

on

அலங்காநல்லூரிலும் அவினாயபுரத்திலும் நடக்கும் ஜல்லிக்கட்டில்,  வாடிவாசல் வழியே துள்ளி வரும் காளையை அடக்க,  ஜீன்ஸும் டீசர்ட்டும் அணிந்த இன்றைய இளைஞர்களில், எத்தனை சதவீதத்தினருக்கு,  அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் முன்னோர்கள் மேல்சட்டை கூடப் போடாமல் நடுமுதுகில் வியர்வை ஆறென ஓட,  காளையை அணைவார்கள் எனத் தெரியும்? காளையின் திமிலைப் பிடிக்க முயற்சி செய்து வழுக்கி விழும் இளைஞன் ஒருவனைப் பார்த்து,  “காளையின் கொம்புகளை கண்டு அஞ்சுபவனை மறுபிறவியிலும் தொடமாட்டேன்”  என்று சொன்ன ஆயர் குடி வந்தவளின் பேத்திகளில் ஒருவள்தான் தான் எனத் தெரியாமல் வேடிக்கை பார்க்கும் சின்னஞ்சிறுபெண் கைதட்டிச் சிரிக்கலாம். முன்னோர் வரலாறு தெரியாத அவர்களும், தமிழர்களின் வீரவிளையாட்டில் ஜல்லிக்கட்டும் ஒன்றென ஒற்றை வரிப்பெருமையில் நிறைவு  கொள்பவர்களும், அவர்களது உற்றாரும், உறவினரும்,  ஜல்லிக்கட்டின் முழுப்பாரம்பரியத்தை அறியவும், 1950-களில் நடந்த ஜல்லிக்கட்டு ஒன்றை நேரில் கண்டதுபோல் ரசிக்கவும் வாசிக்கவேண்டிய நூல் , சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல். 

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட வாடிவாசல் நாவலில், பெருமாள் முருகனின் முன்னுரை, கலித்தொகை , கமலாம்பாள் சரித்திரம், கு.ப. ராஜகோபாலனின் சிறுகதை வீரம்மாளின் காளை என தமிழ் இலக்கியம் ஏறு தழுவதலிலிருந்து ஜல்லிக்கட்டான இடங்களைத் தொட்டுச் செல்கிறது. தமிழை தாய்மொழியாகவும், ஆங்கிலத்தை வாசிப்பு மொழியாகவும் கொண்ட வாசகர்களுக்கு, இருக்கவே இருக்கிறது,  Simon & Schuster India வெளியிட்டுள்ள, கல்யாண் ராமன் மொழிபெயர்ப்பில்,  Vaadivaassal (The Arena). இந்த ஆங்கில மொழியாக்கத்தில், பி.ஏ. கிருஷ்ணனின் முன்னுரையும், ஏறு தழுவதலைப் பாடும் கலித்தொகை செய்யுள்களை குறிப்பிடுகின்றன.  காளையின் திமிலைத் தழுவி அடக்கி வெற்றிபெறுபவனுக்கு, தனிமையில் பெண்ணொன்றின் தோள் தழுவ காத்திருக்கிறது என்ற கலித்தொகை 101-அம் செய்யுளின் ஏ.கே. ராமானுஜத்தின் ஆங்கில மொழியாக்கம் முன்னுரையில் வாசிக்கக் கிடைக்கிறது. சிந்து சமவெளியில் கிடைத்த ஏறு தழுவதல் குறித்த சான்று, ரிக் வேதத்தில் காளையை போற்றுதல் என மேலும் தகவல்கள் அடுக்கப்பட்டுள்ளது. 

 நாட்டார் வழக்கில் மாடு சந்தையில் விலை போக நல்ல சுழி முக்கியம் என்பார்கள். அது போல, மொழியாக்க நாவலுக்கும், செறிவான முன்னுரை ஒன்று கூடுதல் வாசகர்களைப் பெற்றுத் தரும், பி.ஏ. கிருஷ்ணனின் முன்னுரை , கல்யாண் ராமன் மொழியாக்கத்தில் கிடைக்கும் ஆங்கிலப் பிரதிக்கு நல்ல அடித்தளம் அமைக்துக்கொடுக்கிறது.  எழுத்தாளருக்கு வாடிவாசல் எழுத , எர்னெஸ்ட் ஹெமிங்க்வேயின் , undeafted கதை ஊக்குவித்த பின்னனி, தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சி.சு. செல்லப்பாவின் முக்கியத்துவம், தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்திற்கும், புதுக்கவிதையின் ஆரம்ப கால வளர்ச்சிக்கும் அவர் தொடங்கிய எழுத்துப் பத்திரிகையின் பங்கு, என்று ஒரு புதிய வாசகன் அறியத் தேவையான அடிப்படை விபரங்களை பி.ஏ. கிருஷ்ணன் ஒரு ஆவணக்கட்டுரையென வடிவமைத்துள்ளார்.  

கதையில் காணப்படும் முரண்களை வகைப்படுத்தி நல்ல விவாதத்திற்கான தளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த முன்னுரையை, சுவாரஸ்யம் கருதி கதையின் முடிவை அறிய விரும்பாத வாசகர்களும், தங்களுக்கான அவதானிப்பை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் வாசகர்களும், வாசித்தபிறகு வாசிக்கலாம் என்ற எச்சரிக்கையையும் முன்வைக்கிறேன்.  

தான் நடத்திய எழுத்துப் பத்திரிகையில், சி.சு.செல்லப்பா, வாடிவாசல் நாவலுக்கு கொடுத்த விளம்பரத்தில் ஜல்லிக்கட்டு இப்படி விவரிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு.  இங்கு மனிதன் விளையாடுவது மிருகத்துடன். மிருகத்துக்குத் தெரியாது தான் விளையாடுவது மனிதனுடன். அவனது உயிர் பற்றிய அக்கறை மிருகத்திற்கு இல்லை. தன் எதிரில் மரணம் காத்திருக்கிறது என்று தெரிந்தும் விளையாடும் மனிதன். இந்த நாவலில், தன் தந்தையைக் கொன்ற காரி காளைக்கும், அதை அணைய வந்திருக்கும் பிச்சிக்கும் போட்டி. அவன் உடன் துணைக்கு அவன் மச்சான் மருது. இவர்களுக்கு காளையின் போக்கையும், குணத்தையும் சொல்ல வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலிருந்து ஒரு கிழவன். கிராமத்து மொழியில் இவர்களுக்குள் நடக்கும் உரையாடல் நாவலின் பாத்திரங்களின் உணர்வுகளை உணர வழிவகுக்கும். இந்த நாட்டார் மொழியே ஆங்கில மொழியாக்கத்தின்பொழுது, தான் எதிர்கொண்ட மூன்று முக்கிய சவால்களில் ஒன்றென கல்யாண் ராமன் சொல்கிறார். கிழவன், பிச்சியையும், மருதுவையும், ‘கிளக்கத்தி ஆளுங்களா?’ என்று கேட்கிறார். தமிழில் வாசிக்கும் வாசகன் புரிந்துகொள்ளும் கிழக்கு திசை , ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திலிருந்து எனப் புரிந்துகொள்வான். ‘கிளக்கித்தியான்கள்’ என்று கேட்பதில் ஒரு ஏளனமும் இருக்கும். வெளியூர் ஆள் என்றால் தன்னைவிட இளைத்தவன் என்ற மனப்பாங்கு. ஆங்கிலத்தில் Easteners என்று வரும்பொழுது அந்த மனப்பாங்கு கடத்தப்பட வாய்ப்பில்லை. ஆங்கில வாசகனுக்கு அது ஒரு பெரிய இழப்பும் இல்லை. 

சி.சு. செல்லப்பா ஒரு நல்ல புகைப்படக் கலைஞரும் கூட. பிச்சி , காரியை பிடிக்க மூன்று முறை முயல்வான். ஒவ்வொரு முறையும் மாடு எப்படித் தாவுகிறது, பிச்சி எப்படிப் பிடிக்கிறான், அதனோடு இணைந்து உடலோடு உடலாக அந்தரத்தில் பறக்கிறான் என்பதை மிக அழகாக காட்சிப் படுத்தியிருப்பார். ஆங்கில மொழியாக்கமும் அந்தக் காட்சிகளை சிறிதும் குறையில்லாமல் வாசகனின் கண்முன் நிறுத்துகிறது.    

மேல் ஜாதிக்கும் கீழ் ஜாதிக்கும் நடக்கும் போட்டி-யாகவும் இந்த நாவலின் உள்ளடக்கத்தை வாசிப்பவர்கள் உண்டு.  மொழியாக்கத்தில் விடுபட்டுவிடும் விஷயங்களுக்காக நான் இங்கே இதை குறிப்புணர்த்துகிறேன்.  வாடிவாசல் நாவலில் , அன்றைய வழக்கப்படி, கிராமங்களில் பட்டவர்த்தனமாக தெரியும் ஜாதிய, பொருளாதார பாகுபாடுகளை, காரியின் உரிமையாளர் பெரியபட்டி ஜமீன்தாருக்கும், பிச்சிக்கும் நடக்கும் உரையாடல்களிலேயே தமிழ் வாசகன் கண்டு அறிய முடியும். மொழியாக்கத்தை வாசிக்கும் வாசகனோ,  பிச்சி, ஜமின்தாரிடம், குனிந்து வணங்கி பரிசு வாங்கும் செயல்களின் வழியே அதை அறிந்துகொள்வான்.    

தமிழ் மொழியின் பண்பாட்டின் கூறுகளில் ஒன்றை பேசுபொருளாக கொண்டு விறுவிறுப்பாக சொல்லப்பட்ட கதை, அதன் வரலாற்றுப் பின்னனியைச் சொல்லும் முன்னுரை, நூலாசிரியர் , மொழிபெயர்ப்பாளர் பற்றிய அத்தியாவிசயமான குறிப்புகள் அடங்கிய நூறு பக்கங்களுக்கும் குறைவான Vaadivaasal  நூல், தமிழ் பேசும் ஆங்கிலம் வாசிக்கும் வாசகர்கள் கை தொடும் இடத்தில் இருக்கட்டும். கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்கமாட்டார்கள் என்ற உத்திரவாதத்தையும் தருகிறேன். 

எனது வாசிப்பு அனுபவத்தில் இருந்து,  பண்பாட்டைக் கண்டடைதல் வரிசையில், இந்தப் புனைவுகளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாம், என்ற என் விருப்பத்திற்காகவும் பதிவு செய்கிறேன். கி.ராஜ நாராயணின், கோபல்ல கிராமத்து மக்கள் நாவலில் , கிட்டப்பா அடக்கும் காளையின் பெயரும் காரிதான். சந்திரா தங்கராஜ், தேனி வட்டார மொழி கலந்த நடையில் எழுதி  2025-ல் வெளிவந்த மலையேற்றம் நாவலில், கதைசொல்லியின் தாய்வழிப் பாட்டி, ஜல்லிக்கட்டு பார்க்க சென்று அங்கு மாடு அணைபவனைப் பார்த்து காதல் வயப்படுகிறாள். கந்தர்வனின் கொம்பன் கதையில், ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனை இல்லை. ஆனால்,மனிதர்கள் மந்தை மாடுகளைக் கொண்டு வந்து மூக்கணாங்கயிறு கட்டி, கொம்புகளுக்கு சாயம் பூசி, கட்டுத்தறியில் கட்டி உழவு மாடுகளாக்கும் சித்திரம் ஆவணமெனப் பதிந்துள்ளது.  

 நியூ யார்க்கில் நடந்த வாழும் தமிழ் இலக்கிய விழாவில், விமர்சகராக தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய அவர் பரிந்துரைக்கும் படைப்புகள் பற்றிய கேள்விக்கு , எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், தமிழில் எழுதப்பட்டிருக்கும் இலக்கிய விமர்சனங்களை மொழியாக்கம் செய்வதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில் முனைவர் ப. சரவணன், மயிர் இதழில் வெளியான ‘வாடிவாசல்’ நாவல் குறித்த பதிவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாம். நாவலை அவர் அலசியிருக்கும் விதமும், ஜல்லிக்கட்டு குறித்த அவரது பார்வையும் விளக்கங்களும் வேற்றுமொழி வாசகனுக்கு கூடுதல் தகவல்களைக் கொடுக்கும்.

One response to “பண்பாட்டைக் கண்டடைதல் – ஜல்லிக்கட்டு”

  1. Saravanan Avatar
    Saravanan

    சார், வணக்கம் . நலமா? “முனைவர் ப. சரவணன், மயிர் இதழில் வெளியான ‘வாடிவாசல்’ நாவல் குறித்த பதிவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாம். ” – தங்களின் இந்தப் பரிந்துரைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். – முனைவர் ப. சரவணன், மதுரை, இந்தியா.

    Like

Leave a comment