வாசிக்கவைக்கும் அப்பாக்கள்

Published by

on

சேட்பாட்டிடம் ஒரு கேள்வியை கேட்க, அது தன்னை ஜட்ஜ் பண்ணும் என்ற கவலையில்லை. நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.   AI-ஐ தனது நண்பனென பாவிக்கும் , எல்லாமே அதற்குத் தெரியும் என்று நினைக்கும் நண்பர் ஒருவர்,  “Why do we celebrate Father’s Day ?”  என்று கேட்டுக்கொண்டிருக்கலாம். எனக்கு நண்பன் எல்லாமே புத்தகம்தான். எனக்கான எண்ணற்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் புத்தகங்களில் ஒன்றான, ‘நாலு மூலை’ என்ற ரா.கி. ரங்கராஜனின் கட்டுரை தொகுப்பில்தான், தந்தையர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை அறிந்தேன். ‘தந்தையர் தின’த்துக்கு மவசு இல்லை என்ற கட்டுரையில், அன்னையர் தினத்துக்கு வாழ்த்துக்களாக சொல்பவர்கள், தனக்கு கேவலம் ஒரு கார்டு கூட வரவில்லை என்று ஒரு முத்தாய்ப்பை வைத்துவிட்டு, காரணத்தையும், அய்யாசாமி என்பவர், கால் இழந்த தனது மகனை எப்படி பார்த்துக்கொள்கிறார் எனவும் உருக்கமாக எழுதியிருப்பார். நூலிலிருந்து – 

//’தந்தையர் தினம்’ எப்படி ஏற்பட்டது ? அமெரிக்காவில் வாஷிங்டன் நகருக்கு அருகே உள்ள ஸ்போகன் என்ற சிற்றூரில், வில்லியம் ஸ்மார்ட்ட என்பவர், தாரம் இழந்தவர், தனது ஆறு குழந்தைகளை ஒண்டியாகவே வளர்த்து முன்னுக்குக் கொண்டு வந்தார். அவருடைய மகள் லூயிடாட் என்ற பெண்மணிக்கு அவருடைய நினைவைப் போற்ற வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. தந்தை இறந்த ஜூன் மாதத்தில் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்குப் பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார். ‘தந்தையர் தினம்’ என்று ஒன்று கொண்டாடப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். மேயர் மூலமாக ஜனாதிபதி வரை அந்தக் கோரிக்கை சென்று, ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையை ‘தந்தையர் தினம்’ என்று அமெரிக்காவில் அறிவித்தார்கள். மற்ற நாடுகளிலும், விரைவில் இது பரவி விட்டது. //

ரா.கி. ரங்கராஜனைப் போல், நான் கவலைப்படத்தேவையில்லை. எனக்கு வாழ்த்துக்கள் வந்து குவியும். சஹா, எனக்குப் புத்தகம் ஒன்று பரிசளிப்பார். இந்த வருடம், ‘Devotions’ என்ற மேரி ஆலிவரின் தேர்ந்தெடுத்த கவிதைகள் உள்ள தொகுப்பு நூலை பரிசளித்துள்ளார். காலையில் எழுந்தவுடன் வானத்தைப் பார்த்து  நாளை துவக்கும் எனக்கு,  இயற்கையை கொண்டாடும் மேரி ஆலிவரின் கவிதைகள்  நான் வாசித்து மகிழும் தொகுப்புத்தான்.

நூறு வருடம் வாழ்ந்து  நிறைவு வாழ்க்கை வாழ்ந்து சென்ற என் தந்தையை நினைத்துப் பார்க்க அதற்கென்று ஒரு நாள் தேவையில்லை. அவரையும், ஞானத் தந்தைகளையும் இன்றைய நினைவில் தொகுத்துக் கொள்கையில், கி.ரா-வின் ஒரு கதை , அ.முத்துலிங்கத்தின் ஒரு கதை வாசித்து நாளை ஆரம்பிக்கலாம் என்று ரேண்டமாக தேர்வு செய்து வாசித்தேன். 

கி.ரா-வின், ‘கறிவேப்பிலைகள்’ என்ற கதையை, ‘மாயமான்’ தொகுப்பிலிருந்து வாசித்தேன். நீர்ப்பாங்கான நிலத்தில் வெட்டப்பட்ட ஊற்றில் பொங்கிப் பொங்கி வரும் நீரைப் போல, பப்பு தாத்தா, பப்பு பாட்டி-களின் தோல் சுருக்கங்களை விவரித்திருக்கும் விதம் முதல் முறை வாசிப்பதுபோல அதிசயக்க வைக்கிறது. கூலிவேலை செய்து, தனக்கான மண்வீட்டை தானே கட்டிக்கொள்ளும் அந்தப் பெரியவர்களின் வாழ்வை, என்னுடைய முப்பாட்டன்களின் வாழ்வோடு வரிக்குவரி ஒப்பிட்டுப் பார்க்கமுடியும். அத்தனை தந்தைகளை என் கண்முன்னர் கொண்டுவந்த கதையென இன்றைக்கான எனது அவதானிப்பு !

அ. முத்துலிங்கத்தின், ‘தோற்றவர் வரலாறு’ தொகுப்பை எடுத்து, விரல் தொட்டுப் பிரிதெடுக்க, ‘ராஜ வீதி’ முன்னர் வந்து நின்றது. 2013-ல் நாஞ்சில்  நாடனை விமான நிலையத்திலிருந்து அழைப்பதற்காக அவர் காத்திருக்கும் நிகழ்வுடன் கட்டுரை ஆரம்பம். சுந்தர ராமசாமி சொல்லித்தான் நாஞ்சில் நாடனை வாசித்ததாக குறிப்பிட்டு, ‘கொங்குதேர் வாழ்க்கை’ கதையை உலகத்தரமானது என்று பாராட்டியிருந்தார்.  வாழ்நாள் சாதனையாளுருக்கான அந்த வருடத்திற்கான ‘இயல் விருது’ வாங்க வந்திருந்த நாஞ்சில் நாடன்,  ஒரு வாரம் கம்பராமயாணம் உரை நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் இலக்கியம் எனும் ராஜவீதியில் பயணிப்பவர் எனக் கட்டுரையை முடிக்க முடிக்க, தமிழ் இலக்கியத் தந்தைகள் சுந்தர ராமசாமி-யையும்,  நாஞ்சில் நாடனையும் இந்தக் கட்டுரைத் தொட்டுச் சென்றது எதேச்சையல்ல எனத் தோன்றுகிறது. இன்றைய நாள் முடியும் முன் அவர்கள் சிறுகதைகளில் ஒன்றையாவது வாசிக்க வேண்டும்.

Leave a comment