மணல் கடிகை – வாழ்க்கை

Published by

on

எம். கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை நாவலில் கதாநாயகன் இல்லை. வாழ்க்கைதான் கதாநாயகன். வில்லன் இல்லை. வாழ்க்கைதான் வில்லன். மையப்பாத்திரங்களாக, ஐந்து  திருப்பூர் நண்பர்களைப் பற்றி சுழலும் யதார்த்தவாத நாவலில் வாழ்க்கை சூறாவளி மேலும் ஐநூறு / அறுநூறு பாத்திரங்களை உள் இழுத்துக்கொள்கிறது.  சிவா-விற்கு தொட்டதெல்லாம் வெற்றி, உழைப்பவனெனினும், சமயம் சந்தர்ப்பங்கள் எல்லாம் வாய்க்கப்பெற்று மற்றவர்கள் பார்வையில் பொறாமைப்படும் வாழ்க்கை. ஆனால், சிவா அப்படி நினைக்கவில்லை. (நான் பொதுவாக வாசிக்கும்பொழுது நிகழ்கால சினிமா நடிகர்களை அந்தப் பாத்திரத்தில் பொறுத்திப் பார்க்கமாட்டேன். ஆனால், இந்த பாத்திரத்தை விஜய் சேதுபதியின் உடல்மொழி உடன்வர கற்பனையில் வாசித்தேன். ) அன்பழகன் – அப்படியே சிவாவளவு திறமை உள்ளவன் எனினும் , திருப்பூர் பனியன் ஜட்டி பிரா தயாரிக்கும் கம்பெனிகளில் அவன் பெரிய ஆள் ஆகவே முடியவில்லை. திருப்பூர் என்றால் அந்த குறிப்பிட்ட ஜாதிதான் ஜெயிக்கும் என்ற பார்வையில் இவன் அந்தக்குடியில் பிறக்காதவன் என்பதால் தோல்வியடைகிறான் என்று ஒரு வாசிப்பைக் கொடுக்குமிடம்,  என் கல்லூரி நண்பர்கள் இந்த நகரில் பனியன் கம்பேனி ஆரம்பித்து அதே காரணத்தால் தலையெடுக்கமுடியாமல் போனதை நினைவுகூர்ந்தேன்.  பரந்தாமன் – பரிதாபத்திலும் பரிதாபம் இவன் வாழ்க்கைதான். வேலையும் அமைவதில்லை. மனைவிகளும் அமையவில்லை. இவனுக்கு சிவா-வை பார்த்தால் எப்படி இருக்கும் ? திரு – ஐவரில் இவனே நல்லவன். +2-விற்கு அப்புறம் கல்லூரி சென்ற ஒரே ஒருவன். நல்லவனுக்கு வரும் சோதனைகளை சந்திக்கிறான். சண்முகம் – கவிஞன் , எழுத்தாளர். பேன்ஸி ஸ்டோர் கடை வைத்துக்கொண்டு, ஒன்றல்ல இரண்டல்ல என 25 பெண்கள் என்று கணக்குப் போட்டு பெருமை கொள்பவன். இதையெல்லாமாடா பெருமையா சொல்வாங்க என்று சிவா-விடம் திட்டு வாங்குபவன்.  இவர்களை வைத்து திருப்பூர் நகரின் வளர்ச்சியையும் அதனால் அழிந்த சுற்றப்புற அழிவையும் பேசுவதால் சூழியல் நாவல் எனவும் முத்திரை குத்தலாம்.  நாவலில் இரு பாத்திரங்கள், ரத்னவேல் செட்டியார் – எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது பார் என்கிறார். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சம்பாதிக்கிறார்கள் என்கிறார். அவரது நண்பர் – பக்கத்துக் கிராமத்தில் குடிக்கவே முடியாத தண்ணீரையும், முகம், கை கால் என புண்களாக இருக்கும் குழந்தைகளையும் சுட்டிக்காட்டுகிறார்.

பணம் புழுங்கும் இடத்தில் காமம் அத்துமீறிதானே நடனமாடும். பாத்திரங்கள் ஒரு இரவில் எத்தனை ஆம்லெட்டுகள் (10 லட்சம்) திருப்பூர் நகரில் சாப்பிடப்படுகின்றன என்று சொல்வதோடு நிரோத் கணக்கையும் சொல்லிச் சிரிக்கிறார்கள். இதே ஊரில், கையை எடுடா என்று சொல்லும் சாம்பங்கியும் வருகிறார். தாடி வண்ணான் பெண்ணாக வீடுகளின் படியேறிச் சென்று சட்டியேந்தி உணவை வாங்கியவள், திருப்பூரின் மிகச்சிறந்த தொழிலதபர் என பரிசு வாங்கும் அளவு வளர்கிறாள். சிவா-வே அவள் வளர்ந்ததை உழைப்பு என்றுதானே சொல்லவேண்டும். அதிர்ஷ்டம் என்று சொல்லமுடியாதல்லவா என்கிறான்.

நாவல் கடக்கும் காலம் – அலைகள் ஓய்வதில்லை வந்த காலத்திலிருந்து (1981) ஆரம்பித்து இந்திரா காந்தி கொலை, எம்.ஜி.ஆர் மரணம் என வரலாற்று நிகழ்வுடன் நகர்ந்து 2000-ங்களை தொட்டுவிடுகிறது. பாத்திரங்களின் அகம் / புறம் இரண்டின் வளர்ச்சிகளையும் பார்க்கமுடிகிறது.

நாவலில் ஒரு இலகு தன்மை வரக்கூட , மாய யாதர்த்த கதைகளோ, நாட்டுப்புறக் கதைகளோ இல்லை. ஆதலால் ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்த கலைப்பு. என் திருப்பூர் நண்பனுக்கு , மச்சி , இது நல்ல நாவல்தான், ஆனா நீ படிக்கவேண்டாம் என்று சொன்னேன். அவன் சுரேஷ் பிரதிப்பின், இந்த நாவல் பற்றிய குறிப்பை தமிழ் விக்கியில் வாசித்துவிட்டு, அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார். நான் வாசித்து மேலும் கஷ்டப்படபோவதில்லை என்றான்.

நான் , இரா. முருகனின் அரசூர் வம்சம் , மாய யதார்த்த நாவலை மீள் வாசிப்பு செய்து கொஞ்சம் சிரிக்கலாம் என உள்ளேன்.

இவ்வளவு காத்திரமான (நியாயமான) நாவலில் , ஐந்து நண்பர்களும் ஏற்றத்திலும் தாழ்விலும் கடைசிவரை அதே நட்புடன் இருப்பது ஒரு ஆறுதல். சிவா-வின் மனைவி சித்ரா-வும் திருவின் மனைவி மேனகா-வும் அணுக்கமாக இருப்பார்கள். திரு-மேனகா-வின் குழந்தை சங்கரி பெரியவளாய், சிவா-சித்ரா மகன் (குழந்தை) அரவிந்தனை கொஞ்சுவது என மானுடத்தின் இனிமைகளையும் சேர்ப்பதற்கு நாவல் தவறவில்லை.

குறிப்பு – இதை மார்ச் 28, 2025-ல் நாவல் வாசித்து முடித்தவுடன், கைபேசியின் நோட்டில் குறிப்பாக எழுதிவைத்திருந்தேன்

Leave a Reply