கணையாழியில் கவிதைகள் எழுதி எழுத்துலகுக்கு அறிமுகமானவர் என்று இரா. முருகனை வாசித்துப் பழகிய பின்னர் அறிந்துகொண்டேன். நான் அறிந்தது என்னவோ அவரது “மூன்று விரல்” நாவல் குறித்து தமிழ் ஹிந்துவில் வந்த கட்டுரை ஒன்றின் மூலம்தான். கணினித் துறையை சார்ந்தவன் என்பதால், அந்த துறை சம்பந்தமாக தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற வகையில் இந்த நூலை வாங்கி ஒரு இளைய எழுத்தாளர் என்று வாசித்தேன். அப்புறம்தான் தெரிந்தது இவர் எனக்கு பத்து வயது மூத்த அண்ணன் என. நான் அமெரிக்கா வந்தபொழுது , என்னை வேலைக்கு எடுத்த கம்பேனி , பாடி ஷாப்பிங்கின் வழியாக இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்ய வைத்து அவர்களுக்கென ஒரு பெரிய கமிஷனை எடுத்துக்கொண்டு, சொற்பமாக நமக்கு ஒரு சம்பளத்தை தருவார்கள். 1990-களில் கணினியில் ஏதோ தெரிந்தவர்களெல்லாம் வெளி நாடு சென்றதை , அடிமாடுகளாக வேலை பார்த்ததை , நாவலாக மாற்றியவர் இரா. முருகன்-தான். இந்த நாவலில் கதா நாயகனும் அவன் நண்பர்களும் தாய்லாந்து செல்வார்கள். நான் அமெரிக்கா வந்தேன். மற்றபடி வித்தியாசம் எதுவும் இல்லை. மேலாளர் , உப்புச் சப்பில்லாத வேலைக்கெல்லாம் சனி ஞாயிறுகளில் வேலை செய்யக் கொடுக்கும் அழுத்தம், எழுதிய கட்டளைகளில் சிறு திருத்தம் செய்ய பெரிய பிரச்சனைக்கு தீர்வாவது, விசா காலாவதியாகும் நாள் நெருங்க நெருங்க பதட்டமாவது எல்லாவற்றையும் ஆவணப்படுத்திய நாவல் என சொல்லலாம். கொஞ்சம் வணிக பாணியில் எழுதப்பட்ட நாவல் என்று வகைப்படுத்தலாம் எனினும், Ctl+Alt-Del பட்டன்களை குறியீடாகக் கொண்டு “மூன்று விரல்” என்று தலைப்பிட்டதை இவர் ஒரு இலக்கியவாதி எனக் காட்டும்.
அவர் நாவல்களில் போலவே, நேர் பேச்சிலும் நகைச்சுவையாக பேசுபவர். ஒரு எடுத்துக்காட்டாக இதை சொல்லலாம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), க.நா.சு அரங்கில் இவரை அழைத்து ஜனவரி 2023-ல் சிறப்பித்தது. அந்த நிகழ்வில் ஒருங்கமைப்பாளர் ஜா. ராஜகோபலன், அவர் கணையாழியில் எழுதிய பகடிக் கவிதைகள் குறித்துக் கேட்டார். அதற்கு அவரது பதில், புதுக்கவிதைகள் வெளிவந்திருந்த காலத்தில், பகடியாக எழுதி அனுப்பினால் கணையாழியில் பிரசுரிப்பார்களாம். மூன்று மாதமாகியும் கணையாழியில் வரவில்லையென்றால், அதே கவிதையை சோகமாக மாற்றி தீபம் இதழுக்கு அனுப்பி விடுவாராம். பகடி என்பது அவருக்கு கைவந்த கலை. தனது படைப்புகளில் தீர்வு எதையும் சொல்லாமல் பகடியை ஒரு உத்தியாக கையாண்டு, அதில் வாசகனை விடை தேடவைத்துவிடுவது இரா. முருகனின் பாணி.
சாண்டில்யன், கல்கி நாவல்களின் வழியாக வரலாறை புனைவு மொழியில் அறிந்தவர்கள், இரா. முருகனின் நாவலில் வரும் ராணியையும் ராஜா-வையும் பேச்சுமொழியில் வாசித்தால் அதிர்ச்சியடைவார்கள். அரசூர் வம்சத்தில் வரும் ராணிக்கு மலச்சிக்கல் உண்டு. சாதாரணக் குடிமகனுக்கும் அரசர் குடும்பத்தினருக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அரசூர் வம்சம், நான்கு தலைமுறையினர் உரையாடும் நாவல். என்னுடைய பதிவு , பெயரை அழைப்பதில் இருக்கிறது – நட்சத்திர உரையாடல், அரசூர் வம்ச நாவல் வாசகனாக எழுதியதுதான். இராமோஜியம் நாவலில் மூன்று ராமோஜிகள் மூன்று நூற்றாண்டுகளில் வருவார்கள். அவர்களின் மனைவி பெயர், காதலியின் பெயரும் மூன்று நூற்றாண்டுகளாக ரத்னா, புவனா என்றே இருக்கும். வரலாற்றை சிதைத்து எழுதும் இவரது நாவல்களை வாசிக்க கொஞ்சம் பயிற்சி வேண்டும். அரசூர் வம்சம் நாவலை இந்தியா-விற்கு சென்று விட்டு திரும்பி வரும்பொழுது வாங்கினேன். விமானப்பயணம் முழுக்க வாசித்ததால், எதிரில் இருக்கும் சின்னத்திரையில் என்ன ஓடுகிறது என்றுகூடப் பார்க்கவில்லை. நூறு நூறு ஆண்டுகளாக காலத்தில் முன்னரும் பின்னரும் பயணம் செய்யும் வாய்ப்பையும் நாவல் இலவசமாக வழங்கியது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கமைப்பாளனாக அவரிடம் பேச ஆரம்பித்து, நட்பாகவும் உரையாடும் அளவுக்கு பழகிவிட்டிருந்தேன். 2024-ல் விஷ்ணுபுரம் விருது அவருக்கென அறிவித்தபொழுது, அவரே என்னை போனில் அழைத்து, விழாவிற்கு வாருங்கள் என அன்புடன் அழைத்தார். அந்த விழாவில், எம். கோபாலகிருஷ்ணன் இவரது படைப்புகள் குறித்துப் பேசுவதை புதிய வாசகர்கள் கேட்டால், இர. முருகன் குறித்து மொத்தச் சித்திரம் கிடைக்கும்.
பார்கின்ஷன் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார் என்று அறிந்து 2026 ஜனவரியில் ஊரில் இருந்தபொழுது அவரை மகன் சஹாவுடன் சென்று நேரில் பார்த்தேன். லட்சுமணன் என்ற உதவியாளர் பார்த்துக்கொள்வதற்கெனவே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். அவரை தொடர்புகொண்டுதான் பார்க்கச் சென்றிருந்தேன். புத்தக கண்காட்சியில் தமிழக அரசு அவரை அழைத்துச் சிறப்பித்ததாக சொன்னார். கமல்ஹாசன் அவர்கள் இரா. முருகனின் நண்பர் என்பது உள்வட்டத்தில் தெரிந்த விஷயம். கமல்ஹாசன் , வாரம் ஒருமுறையாவது அழைத்து நலம் விசாரித்துவிட்டு, நீண்ட நேரம் உரையாடுவார் என அவரது உதவியாளர் சொன்னார். ‘வாழும் தமிழ்’ இலக்கிய விழா நியூ யார்க்கில் நடக்கவிருப்பதை அறிந்து வைத்திருந்தார். அது நடப்பது குறித்து மிகவும் சந்தோஷப்பட்டார். பார்ப்பதற்கு பார்கின்ஷன் நோயின் பாதிப்புத் தெரிந்தாலும், எழுதுவதை நிறுத்தவில்லை என்று அறிந்துகொண்டேன். ஆனாலும், இன்றைய அவரது இறப்புச் செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. நாவல்களின் பாத்திரங்களை காலம் கடந்து உரையாட வைக்கும் அவர், தனது நாவல்களின் வழியாக நூறு நூறு ஆண்டுகளாக வாசகனுடன் உரையாடுவார்.
எழுத்தாளர் இரா. முருகனுக்கு என் அஞ்சலி. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Leave a Reply