என்றுமில்லாத திரு நாளாக, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வானத்தைப் பார்த்தால், அப்பா நட்சத்திரத்தின் அருகில் இருக்கும் அம்மா நட்சத்திரத்தைக் காணோம். என்றைக்கும் விட இன்றைக்கு அப்பா நட்சத்திரத்தை சுற்றிலும், பெரும் நட்சத்திரங்களின் கூட்டம். அத்தனை நட்சத்திரங்களும், என்னைப் பார்த்து கண் சிமிட்டின. என்னிடம் அவைகளுக்கு சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்று எத்தனித்தன.
“அய்யா, எங்க அம்மாவைக் காணோம்? “ என்றேன்.
“நீ , என் பேரு சொல்லி எழுதிட்டேனு அம்மாக்கு கோபம். ப்ராக்ரெஸ் ரிப்போர்ட்டில உங்க கையெழுத்த அவனே போட்டுக்கிட்டு உங்ககிட்டயே சொல்வான். அப்பவும் ஒண்ணும் சொல்லமாட்டீங்க. இப்ப மட்டும் என்ன சொல்லப்போறீங்க. ராதாகிட்ட சொல்லி, உப்பில்லாம சோறு போடச் சொல்லனும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.” என்றது அப்பா நட்சத்திரம்.
அம்மா நட்சத்திரத்தால் தன் சின்ன மகனை பார்த்தும் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. நகர்ந்து முன்னால் வந்தது.
“இங்க வந்தும் அய்யாவிற்கு கிண்டலும் நக்கலும் போகல சாமி. அவனே ப்ரட்டு தின்னுக்கிட்டு இருக்கான். இதுல உப்பு இல்லாம சோறு போடறதாம். அவன் என்ன, நீ போட்ட பழைய சோறை தின்னுட்டு ஸ்கூலுக்குப் போனவன் நினைச்சயா, உப்பில்லாமா தின்கிறதுக்கு?” என்றது அம்மா நட்சத்திரம்.
“என்னம்மா, என்னென்னமோ சொல்லிக்கிட்டு? “ என்றேன் கண்களை மறைக்கும் கண்ணீருடன்.
“உங்க திண்டுக்கல் சித்தப்பனுக்கு அவரை பத்தி ஒண்ணும் சொல்லலேனு கோபம். நம்ம வீட்டிலேயே, நான் தான் அவன் லெட்டரை அடுத்த லெட்டர் வர்ர வரைக்கும் திருப்பி திருப்பி படிப்பேன். டெல்லில இருந்து வந்தா என்னைப் பார்த்துட்டுத்தான அண்ணனையே போய் பார்ப்பான். அவன் எனக்குத்தான் எழுதியிருக்கனும்னு ஒரே சண்டை. திண்டுக்கல்லு சின்னம்மா, இவன் என்னைக் கும்பிட்டுட்டுத்தான எல்லாப் பக்கமும் போவான். எனக்குத்தான எழுதியிருக்கனும்னு மூஞ்சைத் தூக்கி வைச்சியிருக்கா. கிருஷ்ணசாமி சித்தப்பா, இவன் இப்ப நல்லா இருக்கிறதுக்கு காரணம், ராதாவை நான் பார்த்து வைச்சதாலதான். இவன் எனக்குத்தான் எழுதியிருக்கனும்னு அவங்க அண்ணன்கிட்ட சண்டை “ என்றது அம்மா நட்சத்திரம்.
“எங்க மாமானுரு ஒண்ணும் சொல்லலாயா ?” என்றேன்.
“வேலுத் தம்பிதான் எல்லாரையும் சமாதனப் படுத்துனாரு. மாப்பிள்ளை லெட்டர் போட்டிருக்காரில்ல. இதில யாருக்கு வந்தா என்னானு சிரிச்சிக்கிட்டே பதட்டப்படமா சொன்னாரு. உங்க வர்க்கத்துக்குத்தான் எப்பவும் மூக்குமேல கோபம்.” என்றது அம்மா நட்சத்திரம்.
“ஏ சௌந்தரு, பெரியாரு ஒருக்க திண்டுக்கல்லுக்கு வந்தப்ப ஒரு குழந்தைக்கு பேர் வைக்கச் சொன்னாங்க. பழனி, மதுரைனெல்லாம் பேரு வைக்கீறிங்க, ஏன் திண்டுக்கல்லுனு பேரு வைக்கக்கூடாதானு கேட்டுட்டு, திண்டுக்கல்-னு பேரு வைச்சத இந்த இடத்தில சொன்னா சரியா இருக்கும்தான?” என்று டாபிக்கை ட்ரேக்குக்குள் கொண்டு வந்தார் சித்தப்பா நட்சத்திரம்.
“திண்டுக்கல்லுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கனு. அந்தப் பிள்ளையை ஸ்கூலில் கிண்டல் பண்ணப்போறாங்கனு நாம பேசிக்கிட்டோமல்ல” என்றேன்.
“கோயம்புத்தூர்ல NIC office இருக்குனு எனக்குக் காண்பிச்சுட்டு, திரும்பி பஸ்ல உடுமலைப்பேட்டை வர்ரப்ப, பஸ்ல பின்னாடி சீட்ல உட்கார்ந்துக்கிட்டு, நீங்க டெல்லில உங்க பேரு பட்ட பாட்டை சொன்னீங்க. Industry Minister பிஏ, சுந்தரராஜன், சுந்தரராஜன் மூணு நாலு முறை சொன்னாரு. ஹிந்தில சொன்னதால, உங்களுக்கு வேற எதுவும் புரியலனு சொன்னீங்கல்ல, அதை இங்க சொல்லலாம்.” என்றது சகலை வேணு நட்சத்திரம்.
“இதுக்குத்தான் வாத்தியார் வேணும்கிறது. Industry Ministers அலுவலகத்தை கம்ப்யூட்டர் மயமாக்கறது, NIC-யில டெக்னிக்கல் டைரக்டரா இருந்த எங்க பாஸ் விகே குப்தாவோட பொறுப்பு. ரங்கராஜன் குமரமங்கலம் பீரியடா, பி ஜே குரியன் பீரியடானு மறந்துட்டேன். Minister பொறுப்பு ஏற்றுக்கொண்டவுடன், எங்க பாஸ், ப்ரோக்ரமார இருந்த என்னைப் போய் பிஏ-வை பார்த்துப் பேசிட்டு வானு அனுப்புனாரு. போனா, அவரு, மானிட்டர்ல ஒண்ணும் வர்ல பாருங்கனாரு. நான் நெட்வொர்க் கேபிள், பவர் கேபிள்னு எல்லாத்தையும் ஆட்டிப் பார்த்து ஒண்ணும் வரல. உடனே, அந்தப் பிஏ, சுந்தரராஜன்னு என் பேரை மூன்று நாலு முறை சொல்லி, ஏதோ ஹிந்தில சொன்னாரு. சுற்றி இருக்கறவங்க எல்லாம் சிரிச்சாங்க. நான் மட்டும் மண்ணு மாதிரி பேந்தப் பேந்த முழிச்சிக்கிட்டு நின்னேன். அப்புறம் அவர் ஆங்கிலத்தில் சொன்னார். உன்னுடைய பாஸ், சுந்தரராஜனால முடியாத காரியமே இல்லை என்று சொன்னார். ஆனால், இப்பொழுது இந்தப் பிரச்சனை சரியாகததால், நீங்கள் சுந்தரராஜன் இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன் என்றார். “
“ஏ சாமி, பொம்மக்காவும் இங்க வந்திருக்குப் பாத்தியா? அமெரிக்கா போய்கூட, சவுந்தல்ராசுக்கு என் ஞாபகம் இருக்குனு அதுக்கு ஒரே சந்தோஷம்.” என்றது அம்மா நட்சத்திரம்.
“அந்த அக்காவை எப்படிம்மா மறக்க முடியும். அப்பல்லாம், நம்ம வீட்டில யாருக்காவது பிள்ளை பிறக்குதுனா, அந்த அக்காதான மருத்துவம் பார்க்கும். கண்ணன், ஆனந்த் பிறக்கறப்பல்லாம், நான்தான் ஓடிப்போய் கூட்டிக்கிட்டு வந்தேன்.” என்றேன்.
பொம்மக்கா நட்சத்திரம் அம்மாவின் அருகில் வந்து நின்று வெட்கமாக சிரித்தது. ஏட்டு மாமா, வல்லப்பம்பட்டி ராமசாமி மாமா, ரங்கசாமி மாமா, சின்ன மாமா பெருமாள், சின்னக்கா, என்று அம்மா வீட்டுச் சொந்தம் முழுக்க சுற்றி நின்று மின்னிக்கொண்டு இருந்தார்கள்.
“அய்யா, ஏட்டு மாமாவைப் பார்த்ததும், இது ஞாபகம் வந்திருச்சு. வெங்கிடுசாமினு பேரு உள்ளவங்களையெல்லாம், ஏட்டுனு கூப்பிடுவீங்க. அது என்ன கணக்குனு தெரியல. பால்சாமினு உங்க யாருக்கும் சொல்ல வராது. வால்சாமினு கூப்பிடுவீங்க. அமெரிக்காவிலேயும், இப்படி ஒரு வழக்கம் இருக்கு. Robert-ஐ Bob-னு கூப்பிடறதும், Willam-ஐ Bill-னு கூப்பிடறதும் சகஜம்.” என்றேன்.
“மனுசப்பசங்க எங்க இருந்தாலும் ஒரே மாதிரித்தான் யோசிப்பாங்க. ஆயிரம் செய்யட்டும். ஆயிரத்து தொள்ளாயிரம் செய்யட்டும். AI-யால இதையெல்லாம் யோசிக்கமுடியாது.” என்றது கிருஷ்ணசாமி சித்தப்பா நட்சத்திரம்.
“ஏ மாப்பிள, நம்ம சொந்த பந்தத்திலேயே நீதான் குலம் கோத்திரம்னு எல்லா தெரிஞ்சு வைச்சிருப்ப. சிட்டிசன்சிப்ப மாறரப்ப, அமெரிக்காவில பேரை மாற்றிக்கலாம்னு ஒரு முறை இருக்குல்ல. உங்க குலத்தைப் பேர, கடைசிப் பெயரா வைக்கலாம்னு, சஹா சொன்ன மாதிரி மாற்றியிருக்கலாமல்ல?” என்றது மாமா ராமானுஜம் நட்சத்திரம்.
“அட மாமா, நீங்களும் இங்க இருக்கீங்களா? அப்பவே பியூசி படிச்சவரு நீங்க. அதான் இதெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க. ஆமாம் மாமா அந்த வாய்ப்பை விட்டுட்டோம். எனக்குத் தெரிஞ்சு டாலஸ்ல எனக்கு சகலைப் பட்டம் வர்ர ஒரு தம்பி அப்படி பண்ணியிருக்காரு. அவரைப் பார்த்ததும்தான், நாமலும் பண்ணியிருக்கலாமோனு தோணுச்சு.” என்றேன்.
“மாப்பிள, நான் செத்தப்ப , நீ எழுதனுயே ஒரு லெட்டரு, அதுதான் என்னைப் பற்றின ஒரு ஆவணம். வேறு யாரும் என்னைப் பற்றி ஒண்ணுமே சொல்லவும் இல்லை, எழுதி வைக்கவும் இல்ல. அதுக்கு நன்றி சொல்லலாம்னுதான் இன்னைக்கு வந்தேன்.” என்றது ராமானுஜம் மாமா நட்சத்திரம்.
“மாமா, உங்க காதை கொடுங்களேன். நான் ஏற்கனவே உங்களை பற்றி சூப்பரா கதை எழுதி வைச்சிருக்கேன். அது வெளியான பின்னாடி படிச்சா, யாருக்குப் புரியுதோ இல்லையோ உங்களுக்குப் புரியும்.” என்றேன்.
ராமானுஜம் மாமா நட்சத்திரத்தின் ஒளி மற்ற அனைத்து நட்சத்திரங்களின் ஒளியை மிஞ்சியது. அவரது மனைவி தம்பக்கா நட்சத்திரமும் மின்னியதுபோல் பட்டது. மாமா நட்சத்திரத்தின் காதில்தானே சொன்னேன். இந்த அக்கா நட்சத்திரத்திற்கு எப்படிக் கேட்டது என்று குழம்பினேன்.
“உங்கூட அரவக்குறிச்சில படிச்ச ஒரு ப்ரெண்டை , குருவினு நீங்க எல்லாரும் கூப்பிடுவீங்க, நீங்க கூப்பிடறதால, ஒரு நாள் ஹெட்மாஸ்டரே குருவினு கூப்பிட்டாருனு சொன்ன இல்ல?” என்றது அப்பா நட்சத்திரம்.
“பேருல என்ன இருக்குதுனு சொன்னது நீங்க. கூப்பிடறதுலதான் இருக்குனு கட்சி கட்டறது நானு. இப்ப என்னடானு, எடுத்துக் குடுக்குறதே நீங்க.” என்றேன்.
“ஒரு வருஷப் பிறப்புக்கு ஊருக்கு வரமுடியலனு, குருவியோட அம்மா அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு, உனக்கு சாப்பாடு போட்டங்கல்ல, சாமி! “ என்றது அம்மா நட்சத்திரம்.
“என்னம்மா நீயும் அவனைக் குருவினே சொல்ற. எனக்கு அவனோட உண்மையான பேரு , ஞாபகம் வரமாட்டேங்குது. ஒரு நாள் அப்படித்தான், அவனை கூப்பிடறதுக்கு அவன் வீட்டுக்கு நானும் இன்னொரு ப்ரெண்டு, சதாசிவம்னு நினைக்கிறேன். போனோம். ரெண்டு பேருக்குமே, அவன் பேரு ஞாபகம் வரல. அம்மா, குருவி இருக்கானானு கேட்டோம். அந்த அம்மா கோபமா வந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் ஓட்டம் பிடிச்சிட்டோம். “ என்றேன்.
தேவராஜ் சகலை நட்சத்திரத்தின் சிரிப்பும் கிருஷ்ணசாமி சித்தப்பாவின் சத்தமும் மற்ற நட்சத்திரங்களின் சிரிப்புச் சத்தத்தை இல்லாமல் பண்ணியது. வேணு சகலை நட்சத்திரம் சத்தம் வராமல் சிரித்தார். திண்டுக்கல் சித்தப்பா நட்சத்திரம் எங்க சௌந்தரு குறும்புக்கார பையன் என்று இதற்கும் பெருமை பட்டுக்கொண்டு உள்ளுக்குள் சிரித்தார்.
“சௌந்தரு, ராஜாமணிக்கு கண்ணன் பிறந்தப்ப, அவனுக்குப் பேரு எப்படி வைச்சோம்னு சொல்லலாமா? “ என்றது அப்பா வரதப்பா நட்சத்திரம்.
“அய்யா, அன்றைக்குத்தான் உங்களோட இந்த வாதம் ஆரம்பிச்சது. பேர்ல என்ன இருக்குதுனு கேட்டீங்க. அண்ணன், சித்தப்பா, அக்கா எல்லாரும் சேர்ந்து ஊரே கொஞ்சற மாதிரி ஒரு பேரை வைக்கனும்னு சொன்னாங்க. கண்ணன்-னு பேரு வைப்போம். ஊரே எல்லாம் , கண்ணா, கண்ணா-னு கொஞ்சும் என்று முடிவு பண்ணினோம்.” என்றேன்.
“அப்ப நான் அஞ்சாப்பு. ஒண்ணும் சொல்லல. அதை வைச்சு, நான் காப்பி ரைட் பண்ற மாதிரி பின்னாடி ஒரு ஜோக் சொல்ல ஆரம்பிச்சுட்டேன். இப்ப சொல்லட்டா. இதை ஒருக்க நான் நாஞ்சில் நாடன்கிட்ட சொன்னேன். சிரி,சிரினு சிரிச்சாரு. பப்லு-கிட்ட இதைச் சொல்ல வாயெடுத்தாலே, பட்டுனு புரிஞ்சுக்கிட்டு, ‘அய்யோ டாடினு’ காதைப் பொத்திக்குவா. கான்செப்ட் புரியாம இதுல என்ன இருக்குனு சொல்றவங்களும் இருக்காங்க” என்றேன்.
“நீ என் பிள்ளையாச்சே, எப்படி யோசிப்பேனு எனக்குத் தெரியும். சொல்லு. சொல்லு. இப்பக் கூட்டமா எல்லாரும் மினிக்கிகிட்டு இருக்காங்க.” என்றது அப்பா நட்சத்திரம்.
“உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் முக்கியம் என்கிறோம். கண்ணன், மூக்கன் என்று பெயர் வைக்கிறோம். ஏன் மற்ற உறுப்புகளின் பெயரில் வைக்கக் கூடாது என்று கேட்டுவிட்டு, ஒரு உதாரணம் சொன்னேன். ஒரு உறுப்பின் பெயரைச் சொல்லி, அப்படி பெயர் வைத்தால், ‘ ‘-க்கு வேலை கிடைச்சிருச்சு, , ‘ ‘- அமெரிக்கா போய்ட்டான். ‘-’க்குப் பொண்ணுப் பார்க்கனும். ‘ -;க்கு கல்யாணம். ‘-’க்குப் பிள்ளை பிறந்திருக்கு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். நாஞ்சில் சாரும், கி.ரா-வும் வார்த்தைகளில் நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்துபவர்கள். ஆதலால், நாஞ்சில் சாரிடம் இதைச் சொல்ல வாய்ப்பு அமைந்தது.” என்றேன்.
ராதாவின் அம்மா கமலா நட்சத்திரம், அம்மா எல்லம்மா நட்சத்திரம், சின்னம்மா எல்லம்மா நட்சத்திரங்களைத் தவிர மற்ற எல்லா நட்சத்திரங்களும் மினுக்மினுக்கென்று சிரித்தன.. ராதாவின் பெரிய அக்காவான செல்வி நட்சத்திரம், என் அக்கா பேபி நட்சத்திரத்திடம், இந்தக் கூட்டத்துல, ஏக்கா இவரு இதையெல்லாம் சொல்றாரு என்று சொல்வது என் காதில் விழுந்தது. பேபி அக்கா நட்சத்திரம் “வாண்டு அட்டதாம்மா! மனசுல ஒயிட்டும் பெட்டுக்க மாட்டண்டு” என்றது.
“பேபியக்கா, உன் பேரை நீயே வைச்சுக்கிட்டேன்கிறது ஒரு கதைதான் இல்ல. வணஞ்சலோசனும்னு அய்யாவங்க உனக்குப் பேரு வைச்சப்ப, நீ, அது என்ன மைனர் மக பேரு மட்டும், பேபி? என் பேரும் பேபிதானு நீயே வைச்சுக்கிட்ட. நீ இருக்கும் காலம்வரை நாங்கள் எல்லோரும் உன்னை பேபி என்றே அழைத்தோம். எல்லா வயதிலும் நீ பேபி என்று சொல்லி சிரித்தோம்.” சொல்ல சொல்ல என் கண்ணில் நீர் கட்டியது.
“நீ அழாத சாமி. நீதான் எல்லாரையும் இழுக்கனும். நீ எப்பவுமே நம்ம வீட்டு சாமி. அழாத சாமி! “ என்றது பேபி நட்சத்திரம்.
“ஆமாக்கா, நீ இதெ வசனத்தை, குஜிலியம்பாறை தோட்டத்தை குத்தகைக்கு போடறப்ப சொல்லியிருக்க.டெல்லியிலிருந்து வந்து சஹாவிற்கு மொட்டை அடிக்க உன்னை கூப்பிட வந்திருந்தேன். நீ, கிழிஞ்ச சேலையோட தோட்டத்துல வேலை செஞ்சிக்கிட்டு இருந்த. பாவா என் கண்ணுல படல. நான் உடனே அழ ஆரம்பிச்சிட்டேன். நீ, அழாத சாமி, அக்கா, தோட்டத்துல வேலை செய்றப்ப , போனது பட்டதுனு கட்டிக்குவேன். நான் நல்லா இருக்கேன் சாமி என்றாய்.” என்றேன்
பழையதை நினைவு கூற, இந்தக் கதை எங்களுக்குத் தெரியாதே என்று அம்மா எல்லம்மாள் நட்சத்திரம் முறைக்க ஆரம்பித்துவிட்டது. நட்சத்திரம் முறைக்கும்பொழுது எப்படி மின்னும் என்று இன்று நேரில் கண்டேன்.
“சாமி, சஹா என்னைப் பற்றி ஒரு கதை எழுதியிருகாருல்ல, அதை நான் ஒரு நாளைக்கு ஒருக்கவாவது படிச்சிருவேன்.” என்றது சகலை தேவராஜ் நட்சத்திரம்.
“ஆமா, இவரு படிச்சுக் கிழிச்சாரு. நான் படிப்பேன். இவரு கேட்பாரு.” என்றது அண்ணி செல்வி நட்சத்திரம். அண்ணி நாங்கள் நன்றாக வாழும் காலத்தை நேரில் பார்த்ததே இல்லை என்பது நினைவுக்கு வர ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ட்ரேக் மாறவேண்டாம் என்று அடக்கிக்கொண்டேன்.
“நம்ம வீட்டில விவசாயம் பண்ணியிருக்கோம். தரகு கடை வைச்சிருக்கோம். கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கிறோம். கொண்டப்ப அண்ணன் , பாகப்பிரிவினை படம் எடுக்கறப்ப, சிவாஜி கூட இருந்திருக்கான். நீ சினிமாவுக்குப் பாட்டு எழுதனும்கிற உன் கனவை புதைச்சிட்டு எல்லாத்தையும் இழுக்கனும்னு கம்ப்யூட்டர் வேலைக்குப் போன. சஹா, அதை நீ சொல்லாமலேயே புரிஞ்சிக்கிட்டு முழு நேரமா எழுதறான். எழுதட்டும் எழுதட்டும், சாமி! ” என்றது அப்பா வரதப்பா நட்சத்திரம்.
“நம்ம குடும்பத்தில, வீட்டுல ஒருத்தருக்கு வரதராஜன்னு பேரு இருக்கனும்னு, சஹா பிறந்தப்ப, வரதராஜ்னு , மூணு முறை கிருஷ்ணசாமி சித்தப்பா காதுல சொன்னாரு. சஹா எழுதுவாரு. அவரது எழுத்தால, வரதராஜ் எனும் குடும்பப் பெயர் எப்பவும் நிற்கும். உங்கள் ஆசிகள் வேண்டும்” என்றேன்.
“பாவா, டீ ரெடி. சளிப் பிடிச்சிருக்கு. காலங்காத்தல வெளியில என்ன பண்றீங்க, உள்ள வாங்க!” என்றார் ராதா.
பின்கதவை மூடியும் மூடாமல் , பேந்த பேந்த விழிகளுடன் நுழைந்த என்னைப் பார்த்த ராதா, “என்னங்க உங்க சட்டை நட்சத்திரம் மாதிரி மின்னுது ? பூக்கள் பொழிந்த மாதிரியும் தெரிகிறது.” என்றார்.
“பெயரை அழைப்பதில் இருக்கிறது” என்றேன்.
“வீட்டில், இரண்டு கிறுக்குகளை மேய்ப்பதே என் வேலை.” என்று டீ கப்பை என் அருகில் வைத்தார்.

Leave a comment