அப்பா, தகப்பா, வரதப்பா, பிறந்த நேரம், நட்சத்திரம் குறிப்பிட்டு, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யாராவது உங்களிடம் யோசனை கேட்டால், பெயரில் என்ன இருக்கிறது ? கோடீஸ்வரன் என்று பெயர் வைத்தால் போதுமா, உழைச்சாத்தான பணக்காரனாக முடியும் என்பீர்கள். உங்க அப்பா சொன்னார் என்று எனக்கு சௌந்தரராஜன் என்று பெயர் வைத்தீர்கள். பௌதியம்மன் கோவில் திருவிழாவில் வாங்கியிருந்த ‘பட்டிக்காடா பட்டணமா’ பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, வீட்டின் முன்னால் கட்டியிருந்து எருமை மிரள மிரளப் பார்த்துக்கொண்டிருக்க, ஒரு படப்பாடல் என்று அறிவித்துவிட்டு, ஒவ்வொரு பாடலாக பாடிக்கொண்டிருந்தேன். கிணற்றிலிருந்து தண்ணீர் சுமந்து கொண்டு வந்த அம்மா, “யாருகிட்ட சாமி, சத்தமா பேசிக்கிட்டிருக்க” என்றார்கள். உடன் வந்த நீங்கள், “பெயரைக் கெடுக்கிறதுங்கிறது” இதுதான் என்றீர்கள்.
பெயரை கெடுப்பது நான் இல்லை. பெயரை சொல்லி அழைப்பவர்கள் என்று பின்னர் தெரிந்துகொண்டேன். நீங்கள் எல்லோரும் சௌந்தர் என்று சொல்லி சொல்லி வளர்த்தீர்கள். டெல்லியில் சௌ-ற்கும், சு-விற்கும் ஒலியால் இணைபிரித்து அறிய முடியாமல் சுந்தர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அமெரிக்காவில், என்னை முதல் வேலைக்கு எடுத்த ஹெதர் , ராஜன் என்று அனைவருக்கும் அறிமுகம் செய்ய, அமெரிக்காவில் ராஜன் வரதப்பன் ஆனேன். ஆனால் எது எப்படி இருந்தாலும், உங்கள் பெயர் கடைசி பெயராக அப்படியேதான். ராஜன் வரதப்பனும் நானே! சௌந்தரராஜன் வரதப்பனும் நானே !
உங்கள் வயதை ஒத்த கி.ராஜ நாராயணனைப் போல, மழைக்குக்கூட பள்ளிப் பக்கம் ஒதுங்காத, பொம்மக்கா, என்னை சவுந்தல்ராஜு என்று அழைப்பதை ஏற்றுக்கொண்டேன்.. பனிரெண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 200-ற்கு 198 எடுத்த அந்த மச்சுவீட்டு வகைரா பெண், சவுந்தர் என்று எழுதியதுதான் இன்று வரை உறுத்தலாக இருக்கிறது.
உடன் வேலை பார்த்த வேற்று நாட்டுப் பரதேசிகளுக்கு, ராஜன் என்று அழைப்பதும் அவ்வளவு சுலபமாக இல்லை. ரஜான் என்று அழைதார்கள். சௌந்தர், சுந்தர், ராஜன், ரஜான் என்று எல்லா அழைப்பிற்கும் என் காதும் மனமும் பழக்கப்பட்டுவிட்டது. குடும்பமாக சென்று எனக்குப் பெண்பார்த்த அன்று, ‘ராதா’ என்ற பெயர் எவ்வளவு அழகு என்று உடுமலைப்பேட்டையிலிருந்து பழனி வரை, அதாவது முப்பது கிலோமீட்டர் தூரம், பெயரை மெச்சியவண்ணம் வந்தீர்கள். என்னை ரஜான் ஆக்கிய அமெரிக்கப் பிரஜைகள் உங்கள் மருமகளை ரடா என அழைக்கிறார்கள்.
எப்படியும் என் பெயரை சரியாக யாரும் சொல்லி அழைக்கப் போவதில்லையென, ஹோட்டல், காப்பிக்கடை என்று எங்கு சென்றாலும், அவர்கள் வீட்டில் பெண் கொடுத்துப் பெண் எடுக்கவா போகிறோமென்று (இது உங்கள் உதாரணம்தான்), ராஜ் என்று பெயர் கொடுத்துவிட்டு, என் பெயர் அழைக்க காத்திருக்கப் பழகிக்கொண்டேன். உங்கள் பேரன், சஹா என்ற பெயரை சொன்னால், சாஹா என்றழைக்கிறார்களென என, சேம் என்று பெயர் கொடுத்துவிட்டுக் காத்திருப்பார். ராஜ் என்றழைப்பதற்கு திணரும் இடங்களில், நானும் அவ்வப்பொழுது சாம் என கொடுப்பதுண்டு.
உலக மக்கள் யாவரும் குடும்பப் பெயரை, தங்களது கடைசிப் பெயராக வைத்துக்கொள்ள, அப்பாவின் பெயரை கடைசிப் பெயர் என்ற முறையை நம் மாநிலம் (தமிழ் நாடு) மட்டும் வைத்துக்கொண்டுள்ளது. நடக்க ஆரம்பித்த நாளிலிருந்து உழைத்த உங்களுக்கு, பள்ளி சென்று படிக்கவும், மேலும் நிறைய அறியவும் வாய்ப்பு அமையவில்லை. இல்லையெனில், எதியோப்பாவில், நம்மலாட்டம்தான் அப்பாவின் பெயரை கடைசிப் பெயராக வைத்துக்கொள்வார்கள் என்று வாதம் செய்வீர்கள். கடைசிப் பெயரை வைத்து அழைக்கும்பொழுது தமிழ் நாட்டு மருமகள்கள் எதிர்கொள்ளும் காதுகொள்ளா பிரச்சனையைக் கேளுங்கள். திருமணத்திற்குப் பின் அப்பாவின் பெயர் அப்படியே இருக்கட்டும் என்று ராதா போல இருப்பவர்களுக்குத்தான் அந்தப் பாடு. நானும் ராதாவும் இணைந்து செல்லும் இடங்களில், என்னை Mr வரதப்பன் என்றழைத்துவிட்டு, ராதாவை Mrs வரதப்பன் என்றழைப்பார்கள். இதற்கே முகம் சுழிக்கும் ராதா, Mrs வேலுசாமிக்கு எப்படி மாறுவார் என்று யோசித்துப் பாருங்கள். கமலாவிற்கும், எல்லம்மாவிற்கும் ராதாவை இப்படி அழைக்கிறார்கள் என்று சொல்லவேண்டாம். இரண்டு பேருமே, கணவன் பெயரை சொல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றவர்கள். இதை சொல்லி டென்ஷன் படுத்தவேண்டாம்.
நீங்களும் சரி, பள்ளிக்கூட வாத்தியார்களும் சரி, கடைசிப் பெயரை எப்படி அழைப்பது என்று சொல்லிக்கொடுத்ததே இல்லை. நம்மிடம் அப்படி ஒரு வழக்கம் இருந்திருந்தால்தானே புத்தி வந்திருக்கும். கடைசிப் பெயரை அழைக்கும்பொழுது Mr போட்டு அழைக்கவேண்டுமென்று, அடிபட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது. கடைசிப் பெயரை சொல்லி அழைப்பதில் ராதாவும் நானும் சந்தோஷப்பட்ட நிமிடங்களும் உண்டு. காலம் முழுக்க உழைத்த உங்களாலும் சரி, ராதாவின் அப்பாவாலும் சரி சொந்தமாக ஒரு வீடு கட்டமுடியாமல் இருந்தீர்கள். ஆஸ்டின் வீடு வாங்கியபொழுது , வீட்டுக் கட்டமைப்பாளர்கள் அனுப்பிய கடிதத்தில் Congratulations Varathappan and Velusamy என அனுப்பியிருந்தார்கள். உங்கள் ஆசை நிறைவேறியதென மகிழ்ந்தோம். நிறை வாழ்வு வாழ்ந்து சென்ற உங்கள் பெயரை சொல்லி Mr வரதப்பன் என்று என்னை அழைக்கும்பொழுதெல்லாம் நீங்கள் இருந்துகொண்டே இருக்கிறீர்கள். பெயரின் முக்கியத்துவம் அழைப்பதில் இருக்கிறது, அப்பா, தகப்பா, வரதப்பா !

Leave a comment