வீட்டை வாடகைக்கு விடும் முதலீட்டாளர்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கேஸ், தண்ணீர், எலெக்ட்ரிசிட்டி வகையறா வகையறாவிற்கு லேண்ட் லார்ட் கணக்கு என்று ஒன்று வீட்டின் உரிமையாளர் வைத்துக்கொள்ளலாம். வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டைக் காலி பண்ணினால், யுடிலிட்டி கணக்குத் தானாக வீட்டு உரிமையாளருக்கு மாறிவிடும். அடுத்துப் புதிதாக ஒருவர் குடிவந்துவிட்டால், அவர் அழைத்துச் சொன்னால் , அவரது பெயருக்கு மாறிவிடும். வீட்டில் யாரும் குடியில்லாதபொழுது உரிமையாளர்தான் பில் கட்டவேண்டும். என் நண்பர் ஒருவருக்கு , அவர் குடித்தனக்காரர் காலிசெய்துவிட, இவருக்கு வந்த கேஸ் பில்லை கட்டலாம் என்று வாடிக்கையாளர்களுக்கான எண்ணை அழைத்துள்ளார். “அக்கௌண்ட் நம்பர் எனில் ஒன்றை அழுத்தவும், போன் நம்பர் எனில் இரண்டை அழுத்தவும், என்ட்ரி செய்த எண் சரி என்றால் ஒன்றை அழுத்தவும் , தவறு எனில் இரண்டை அழுத்தவும்” என்று AI பெண் சொல்ல சொல்ல பொறுமையாக கட்டளைகளுக்கு அடி பணிந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், நண்பர் சலிப்பாகி, உயிருள்ள ஆத்மாவிடம் பேசினால் பரவாயில்லையென, 0-வை அழுத்துகிறார். போனில் டாம்-னு ஒரு அண்ணாச்சி வந்திருக்கார். “எப்படி இருக்கீங்க, இன்னைக்கு நாளு எப்படி இருக்கு, பாதுகாப்புக்கு உங்க சோசியல் செக்யுரிட்டில கடைசி நாலு எண்களை சொல்லுங்க” என்று சம்பிராயுதமான கேள்விகளை கேட்டுவிட்டு, நான் என்ன உதவி செய்யவேண்டும் என்றிருக்கிறார். நண்பர், பில் பே பண்ண வேண்டும் என்று தன் நிபந்தனையை சொல்கிறார். ” அடடே, வீட்டுக்கு வேற ஆளு வந்துட்டாங்க போல இருக்கே, இதை இப்ப நீங்க கட்டவேண்டாம், இன்னொரு செட்டில்மெண்ட் பில் வரும் அப்பக் கட்டுனா போதும்” என்று கனிவாகப் பேசுகிறார். “நீங்க மனுசன், மனுசன் கஷ்டம் தெரிஞ்சு பேசறீங்க, AI இப்படியெல்லாம் ரெகமெண்ட் செய்யாதுதானே? “ என்று நண்பர் கேட்டிருக்கார். “ஆமா, ஆமா” என்றாராம் டாம்.
*
அடுத்து இன்னொரு நண்பருக்கு என்ன நடந்தது என்று நான் சொன்னாலும், என் சொந்த அனுபவம் என்றுதான் வாசிப்பீர்கள். பரவாயில்லை. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நடந்தது என்னவோ உண்மை. நண்பரின் வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க வேண்டியிருந்ததால், TaskRabbit-ல் ரேட்டிங்க், ரிவ்யூ எல்லாம் பார்த்து ஒரு பெயிண்டரை புக் செய்கிறார். பெயிண்டர் வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால், அவருக்கு வரமுடியாத சூழல். நண்பர், அந்த வேலையை , App-ல் சென்று கேன்சல் செய்கிறார். உங்கள் பணம் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று தானியிங்கி மின்னஞ்சலும் வந்து விடுகிறது. உஷாரான என் நண்பரோ, கிரிடிக் கார்ட் கணக்கில் சென்று பார்த்திருக்கிறார். பெயிண்டருக்கு போன காசு திரும்பி வரவேயில்லை. வாடிக்கையாளர் நலன் விரும்பும் எண்ணிற்கு அழைத்து, நடக்காத பெயிண்ட் வேலைக்கு , நீங்க திருப்பி அனுப்பிய பணம் எனக்கு வரவில்லை என்று பிராது பாடியிருக்கிறார். நண்பர் அன்று நரி முகத்தில் விழித்திருப்பார் என நினைக்கிறேன். உதவி செய்ய வந்த பெண், ‘அப்படியா சார், Bot அது கேன்சல் ஆயிருச்சு, காசு அனுப்பியாச்சுனு, தானா மெயில் அனுப்பியிருக்கு, ஆனா, உண்மையில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நான் manual-ஆக இப்ப கேன்சல் பண்ணுகிறேன். உங்கள் பணம் இனி இருபத்து நான்கு மணி நேரத்தில் வந்து விடும்” என்று சொல்லியிருக்கிறாள்.
*
டாலஸ் நண்பர், “வணக்கம் சார், பேசலாமா?” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு எனது பதிலுக்குப் பிறகே அழைப்பார். நியூ ஜெர்ஸியில் வாழ்க்கைப்பட்டுவிட்ட தங்கை, “அண்ணா, உங்களுக்கு free-ஆக இருக்கும்பொழுது அழையுங்கள்” என்று அனுப்புவார். “பெரியப்பா, நீங்க எப்ப free” என்று standard மெஸ்ஸேஜ் போட்டு தனது கேள்விகளை அடுக்குவான் தம்பி மகன். “Quick Call” என்று போட்டுவிட்டு , எனது பதிலுக்குக் காத்திருந்து அழைக்கும் நண்பர்கள் பத்துக்கு மேல் இருக்கிறார்கள். சிரிப்பவரோ, முறைப்பவரோ, எங்கோ பார்த்துக்கொண்டிருப்பவரா என புகைப்படத்தைப் பார்த்து இனம் கண்டுகொள்வேன். இப்படி காண்டக்டில இருக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு Template இருக்கறப்ப, “Honey, how are you today” என்று குறுஞ்செய்தி வந்தால், அதுவும், யுவனின், “தலைப்பில்லாதவை” குறுங்கதைகள் வாசித்துக்கொண்டிருக்கும்பொழுது, அதற்கு reply செய்வேனா ? போங்கடா, நீங்களும் உங்க AI-யும்.

Leave a comment