ஓங்கிய மரமொன்றை
வழியில் கண்டால்
நீர்தேடிச் செல்லும் அதன் வேர்கள்
எதுவரை சென்றுள்ளன
என விசாரிப்போம் !
நதியோடு நதியாக
இணைந்து செல்லும் பாதையில்
நடப்போம் !
சலசலவென அது சொல்லும்
கடந்துவந்த கதை கேட்போம்!
மெய்மறந்து அமைதி காக்கும் நதியாயின்
அப்படியே ஆகட்டும் என்று
உடன் பயணிப்போம்.
மலை ஏறுவோம்
ஏறிய மலையில் பறவைகள் சாப்பிட்டது போக
மீதியிருக்கும் பழங்களை
சாப்பிட்டுவிட்டு
அங்கேயே தூங்கிவிடுவோம்.
புலி கரடி வந்தால்
தூங்கும் நம்மை முகர்ந்து பார்த்து முடிவெடுக்கட்டும் !
கடலின் அலைகள்
சிரிக்கிறது என நினைத்து
நாமும் வயிறு குலுங்கி சிரிப்போம்.
போக்கிடம்
வீட்டு மொட்டை மாடிதான் எனினும்
அந்தியில் வான் நோக்கி
அகத்தில் பொன் சேர்ப்போம் !

Leave a Reply