கூட்டத்தில் தனது கருத்தை , ஆசையை, ஏக்கத்தை சொல்லத் தயங்குபவர்கள், தான் பார்க்கும் மரத்திடம், பூவிடம், கிளியிடம், துள்ளுகின்ற மானிடம் சொல்லத் தயங்குவதில்லை. அதுவும் வெளியில் கூட்டத்தில் பேசத்தயங்குபவர்கள், இயற்கையுடன் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வது என்பது இயல்பு. என் காதலியே, வீட்டுத் தோட்டத்து கருவேப்பிலை செடிகளிடம் என்னிடம் சொல்லாத ரகசியங்களை சொல்வார். அவரிடம் கோபமாக திட்டு வாங்கிய ரோஜாப் பூக்களும் உண்டு. கண்ணாடியில் தன்னையே பார்த்துப் புகழ்ந்துகொள்பவர்கள் ஒரு ரகம் என்றால், காற்றில் நீச்சலடிக்கும் பட்டாம்பூச்சியிடம் உன்னாட்டமாக்கும் நானு என்று பகிர்ந்துகொள்பவர்கள் ஒரு ரகம். பேசுவதே தனியாக, இதிலென்ன கூச்சம். பாடவும் செய்யலாம். அதனால்தானோ என்னவோ, அந்தப் பாணியில் வரும் பாடல்களில், தன்னையும், தன் ரசனையையும், தனக்கானவரையும் வைத்துப் பார்த்து மகிழ்கிறார்கள். இளையராஜாவின் வெற்றிக்கு அவர் இசைதான் காரணம் என்பதை மறுக்கவில்லை. கூர்ந்து பார்த்தால், அவர் பாடல்களிலும், நாட்டுப்புறப் பாடல்களின் பாணியில், தனது எண்ணங்களை இயற்கையுடன் பகிர்ந்த பெண்களின் பாடல்கள் மக்களால் விரும்பி கேட்கப்பட்டன. அவரது இசையில் “மச்சானைப் பார்த்தீங்களா, மலைவாழைத் தோப்புக்குள்ளே”, என்று கேட்ட அன்னக்கிளியின் தேடலையும், “செந்தூரப் பூவே செந்தூரப் பூவே” என்று அவள் மன்னன் எங்கே என்ற பதினாறு வயது மயிலின் தேடலையும் ஆர்வமுடன் கேட்டார்கள். வரவிருக்கும் மணாளனை குறித்த ஏக்கத்தை கேட்ட அதே ஆர்வத்தோடு, அவள் , ‘சுத்த சம்பா, பச்ச நெல்லு குத்தத்தா வேணும்’ என்று திருமண வைபவத்திற்கு அழைத்தாலும் உடன் ஆடினார்கள், பாடினார்கள். கிராமத்து விழாக்களில், பட்டி தொட்டியெல்லாம், நீள் குழாய் மைக்குகளில், “மச்சானை பார்த்தீங்களா?” பாடலும் “சுத்த சம்பா, பச்ச நெல்லு குத்தத்தா வேணும்’ பாடலும் மாறி மாறி ஒலித்தன.
இயற்கை ரசனை மற்றும் சூழல் குறித்த , தனிமனித எண்ணங்கள், கருத்துக்கள் சார்ந்த பாடல்களை கேட்கும் ரசிகர்கள் இன்றும் உள்ளனர் என்றே யூட்யூப் பார்வையாளர்கள் எண்ணிக்கை சொல்கிறது. சந்தோஷ் நாராயணன், தி, அறிவு கூட்டணியில் வெளிவந்த இயற்கையை போற்றும் “என்ஜாயி என்ஜாமி” , வெளியிடப்பட்ட நாளிலிருந்து. ஐந்து வருடங்களில் 53 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. அமெரிக்க எண்களில் கவர்ச்சியாக சொல்லவேண்டுமெனில் அரை பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தெலுங்கானா நாட்டுப்புறப் பாடல்களின் பின்னனியில் எழுதப்பட்டு வெளிவரும் நாக துர்கா-வின் இசைக்கோவைகளை ரசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதையே நிரூபிக்கிறது. 2020-ல் கோவிட் காலத்தில் ஊரடங்கின்பொழுது, நாக துர்கா, ‘தின்னா திரும் படுதலே’ என்ற பாடலை வெளியிடுகிறார். பஸ்ஸில் தனியே பயணம் செய்யும் அவரிடம், பின் சீட்டில் அமர்ந்திருக்கும் சிறுமி, பிஸ்கட் ஒன்றை நீட்டிச் சாப்பிடு என்கிறாள். காதல் வயப்பட்ட பெண்ணுக்கு சாப்பிடப் பிடிக்குமா, தூக்கம்தான் வருமா? அவர் பாடலும் நடனமும் அந்தப் பாணியில் செல்கிறது. ஆறு வருடங்களாக தொடர்ந்து கேட்கப்படும் இந்தப் பாடல் 136 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. குச்சிப்பிடி நடனத்தில் பட்டம் பெற்ற, நடனத்திற்கெனவே பள்ளி நடத்தும், நாக துர்கா , காதல் வயப்பட்ட பெண்ணின் கவலையையும் வலியையும் கண்ணிலும், முகபாவனையிலும் கடத்துவதற்கு அதிக சிரத்தை எடுக்கவில்லை. இந்த முதல் பாடலே ரசிகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்துவிட்டது. (என்னுடைய குறைந்த தெலுங்கு அறிவில், கூகிளின் உதவியுடன் பாடலின் சில வரிகள், கட்டுரையின் ஓட்டத்திற்காக மட்டும்.)
உண்ணும்போதும் சரி, அமர்ந்திருக்கும்போதும் சரி,
எனக்கு நிம்மதியே இல்லை;
எங்கிருந்தாலும் சரி, யாருடன் இருந்தாலும் சரி,
எனக்கு நிம்மதியே இல்லை.
உன்னைப் பற்றிய நினைவால்
என் இதயம் மிகுந்த வலியையும்,
தாங்க முடியாத பாரத்தையும் உணர்கிறது;
உன்னைப் பற்றிய நினைவால்
என் இதயம் மிகுந்த வலியையும்,
தாங்க முடியாத பாரத்தையும் உணர்கிறது.
நாம் பிரிந்து சென்று ஒரு முழு ஆண்டு ஆகிவிட்டது;
முடிவில்லாமல் காத்திருந்தும்,
உன்னைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லை.
எனக்கு இத்தகைய வேதனையைத் தர
உன்னால் எப்படி முடிந்தது?
உன்னைப் பற்றிய நினைவுகளால்
என் இதயம் மிகுந்த பாரத்துடன்
கனத்துப்போயிருக்கிறது.
தமிழ், தெலுங்கு பேசும் குடும்பங்களில் தந்தையுடன் பிறந்த சகோதரியின் புதல்வனையோ புதல்வியையோ, தாயுடன் பிறந்த சகோதரனின் புதல்வனையோ, புதல்வியையோ மணம்புரியும் வழக்கம் உண்டு. அவர்களை முறை மாப்பிள்ளை, முறைப் பெண் என்று உரிமை கொண்டாடுவதும், கிண்டல் செய்வதும் அன்றாட வாழ்க்கை. அப்படித்தான், அந்த வருடம், என் தாய் மாமன் காட்டில் கம்புப் பயிர்கள் கதிரெடுத்து விளைந்து நின்றது. நான் ஒரு கதிரை பிய்த்து எடுத்து, இரு கைகளில் வைத்து தேய்த்து, கம்பை உதிர்த்துத் தின்றேன். அதைப் பார்த்த, என் மாமன் மகள் (அம்மாவின் சகோதரனின் பெண்), “கம்மங் கருதைக் கண்டா கை சும்மாயிருக்காது. அத்தை மகளைக் கண்டா வாய் சும்மா இருக்காது” என்ற பழமொழியை சொன்னார். இதில் “வாய் சும்மா இருக்காது” என்பதை கிண்டல் செய்யாமல் இருக்கமுடியாது என்று வாசிக்கவும். ‘கஷின் மேரேஜ்’ என்றால் அருவருப்பாக நினைக்கும் ஜென்ஜி வரை உலகம் வளர்ந்துவிட்டாலும், இந்த வழக்கம் இன்னும் பின்பற்றப்படுகிறது என்பதையே தமிழ் / தெலுங்கில் வெளிவரும் பாடல்கள் சொல்கின்றன. இல்லை காதலிக்கும் பையனை, அத்தை மகன் / மாமன் மகன் என நினைத்துப் பாடுவதாகவும் வைத்துக்கொள்ளலாம். நாக துர்கா-வின் பெரும்பாலான பாடல்களுக்கு நடனமைப்பு செய்பவரான வைரஸ் சேகரின் வழி நடத்தலில், வெளிவந்த “ஜில்லேலம்மா ஜிட்டா” பாடலில் அத்தை மகன் தன்னைப் பார்க்கத்தானே செய்வான் என்கிறார், நாக துர்கா சித்தரிக்கும் நாட்டுப்புறப் பெண் ஒருவள்.
அவன், “ஏய் பெண்ணே!” என்று அழைத்தான்.
மேல்நோக்கிய மீசையைக் கொண்ட அந்த இளைஞன்
அவன் புன்னகைக்கிறான்,
கண்களில் ஒரு குறும்பு மின்னுகிறது,
அந்தத் துடுக்குத்தனமான வாலிபன்.
“ஏய் பெண்ணே, என்னுடன் வருகிறாயா?
உனக்கு ஒரு பெப்பர்மிண்ட் மிட்டாய்
வாங்கிக் கொடுக்கிறேன்.”
“ஏய் பொண்ணே, என்கூட வர்றியா?
உனக்கு ஒரு பெப்பர்மிண்ட் வாங்கித்தர்றேன்”
இப்படித்தான் அவன் என்னைத் தொந்தரவு செய்வான்;
என்ன இருந்தாலும்,
அவன் என் அத்தையின் மூத்த மகன் அல்லவா?
அவனது கோபம், பிணக்கு என்று அனைத்தையும் அவள் சுட்டிக்காட்டிப் பாடினாலும், அவன் பாடலில் உடன் வருவதுபோல காட்டப்படுவதில்லை. அவன் குரல் மட்டும் ஒலிக்கிறது. நாக துர்கா, தனித்து ஆடியே சாதிக்கிறார். இந்தப் பாடல் மூவாயிரம் ரசிகர்களால் எதிர்வினையாற்றப்பட்டு ரசிக்கப்பட்டுள்ளன.
ஜில்லேலம்மா ஜிட்டா,
பெண்ணே, நான் உனக்குத் துணையாக வருகிறேன்.
ஜில்லேலம்மா ஜிட்டா,
உன்னை என்னுடையவளாக
அழைத்துச் செல்ல வருகிறேன்.
அப்பாவிற்கு மகள் எப்பொழுதுமே பொக்கிஷம். என்னதான் தானே மாப்பிள்ளையை தேடிப்பிடித்து மகளுக்குத் திருமணம் செய்து வைத்தாலும், பிரிவால் அப்பாவிற்குத் தூங்காத இரவுகள்தான். மகளுக்கும் அப்பா குறித்த நினைவு போவதே இல்லை. அவள் பிறந்த அன்று அமாவாசை என்றாலும், அவள் பௌர்ணமியாக ஜொலித்தாள் என்று அப்பா தன்னை சீராட்டினார் என அப்பா குறித்த நினைவுகளைப் பாடும் “பெருகல்ல பெட்டி ரெட்டி” பாடலின் வழியாகத்தான் நாக துர்கா-வை நான் முதன் முதலில் வந்தடைந்தேன். பாட்டுப் பாடிக்கொண்டே வயலில் நாற்று நாடுவது, கூட்டாக அமர்ந்து , தூக்கில் கொண்டு வந்த தங்கள் உணவை உண்பது என காட்சிப்படுத்தப்பட்ட கிராமத்தின் ரம்யமும் இந்தப் பாடலின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்
பெருகல்ல பெத்தி ரெட்டியின் பிள்ளை !
ஓ ராம சிலுகா !
அவர் என்னை மிகுந்த அன்போடும்
அக்கறையோடும் வளர்த்தார்,
ஓ ராம சிலுகா !
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், அவருடனான ஓர் உரையாடலின்போது, “பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில், வெளிவந்த அவரது, “பொன்னி நதி பார்க்கப் போறேன்” பாடலை “ஆடிப் பெருக்கு” அன்று காவிரியை ஒட்டிய கிராமங்களில் ஒலிக்கவிடப்பட்டுக் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிட்டார். தமிழ் மக்களுக்கு காவிரி. தெலுங்கானா மக்களுக்கு, ‘கோதாவரி’. சேகர் வைரஸ், நாக துர்கா-வின் நடனத்தை வடிவமைக்க,, சந்தோஸ் ஷெரியின் வரிகளில், ரோஹினியின் குரலில், கோதாவரி ஆற்றின் விரிவை, அவை வளப்படுத்தும் நிலப்பரப்பை, அந்த மக்களை விவரித்து நடனமிடும் பாடல் – “பாரே கோதாரி”.
ஓடும் கோதாவரி – என் பாதை,
மகிழ்ச்சியான சிரிப்பொலியால்
நிறைந்திருக்கிறது;
சுற்றிலும் பார், மின்னும் வயல்வெளிகளை,
என் செல்லமே.
செழிப்பான பசுமையான பயிர்கள்
என்னை வரவேற்கையில்
என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது…
பறவைகள் கூவி மகிழ்வதை ரசிப்பதில்
என் கண்களுக்குச் சலிப்பே ஏற்படுவதில்லை…
இந்தக் கிராமியச் சூழலில் ஊஞ்சலாடுவோம்…
இளம் மாந்தோப்புகளுக்கு இடையே
குயில்களைப் போலப் பாடுவோம்.
தமிழறிஞர் நா. வானமாமலை தனது “தமிழர் நாட்டுப் பாடல்கள்” நூலில், “கிராமத்து மக்கள் வழிபடும் தெய்வமான மாரியம்மாளுக்கு விழா எடுத்துக் கொண்டாடும்பொழுது, உடுக்கடித்து மாரியம்மன் புகழைப் பாடிக்கொண்டு தலையில் தீச்சட்டி தாங்கிக் கொண்டு சிலர் வருவர். அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடு. உடுக்குத்தாளத்தோடு சேர்ந்துவரும் பாட்டு மாரியம்மனின் பக்தர்களைப் பரவசப்படுத்தும்.” என்று குறிப்பிடுகிறார். “நா பேரே எல்லம்மா” என்று நாக துர்கா பாடி ஆடும் பாடலை, தெலுங்கு மாரியம்மன் பாடல் என பரவசத்துடன் கேட்கலாம். 2026-ல் நான் அதிகமுறை கேட்ட பாடல் என்று இந்தப் பாடலை சொல்லலாம்.
“நான் ஆற்றின் கரை. நான் சாக்காவின் தாய். நான் உயிரினங்களின் தாய். நான் அந்த கரையில் இருக்கிறேன். நீ, குழந்தை. நான் தாயின் தாய். நான் தாயின் தாய். நான் தான் அதைப் பெறப் போகிறேன். நான் ஒரு தாய். என் பெயர் எல்லம்மா” என்ற பொருளில், நாக துர்கா எனக்கு எல்லம்மாவாகவே தோன்றி எனக்கு வரம் கொடுக்கிறார் என்று நினைத்ததாலும் இருக்கலாம் 🙂
நெல்லை மாவட்டம், சிவகிரியில் சேகரிக்கப்பட்ட பாடலென, ந. வானமாமலை நூலில் குறிப்பிடப்படும் பாடல் ஒன்றில், கணவன் என்ன சேலை எடுத்துக்கொடுத்தாலும், மனைவி மூக்காள் அழுகிறாள்.
எள்ளுக் கருப்புச் சீலை
எடுத்துடுத்தும் சாயச்சீலை
சுத்துக்கு எட்டலணு
சுண்டுதாளே கண்ணீரை
எள்ளுக் கருப்புச் சீலை
இருபத்திரண்டு முழம்
உடுத்திப் புறப்படடி
உள்ளூரச் சாமி பார்க்க
பாசிப் பயத்தஞ் சேலை
பத்துலட்சம் பெத்த சேலை
கத்துக்கு எட்டலண்ணு
சுண்டுதாலே மேமுழிய
முந்திப்பச்சையடி
முழுநிறம் நீலமடி
ஊதாக கருப்புச் சீலை
உட்காரடி பக்கத்தில்
“காபல்லோ இன்ட்டிக்காட” பாடலில் காதலியாக வரும் நாக துர்கா, காதலனை, காபல்லோ வீட்டில் அன்பு நிறைந்து உள்ளது. குழந்தைகள் விளையாடுகிறார்கள். விளையாடப் போவோம், கூட வருகிறாயா என்று அழைக்கிறார். நெசவாளர் வீட்டில் சேலை எடுத்து வா என்று பாடுகிறார்.
நெசவாளர் வீட்டில் அழகான சேலைகள் உள்ளன
நேர்த்தியான, பொருத்தமான
ஓரங்களைக் கொண்ட சேலைகள்!
அங்கிருந்து எனக்காக
ஒரு சேலையை வாங்கி வருகிறாயா, மைத்துனரே!
எனக்காக ஒரு சேலையைக் கொண்டு வருகிறாயா?
தன் அத்தை மகனிடம் விதம் விதமாக தனது விருப்பங்களை வைக்கும், காபல்ல இன்ட்டிக்காட பாடல் ஐந்து பகுதிகளாக வந்துள்ளது.
மேற்கண்ட தமிழ் நாட்டுப்புற பாடலில், எல்லா வண்ணச் சேலைகளையும் குறிப்பிட்டு கணவன் பாடுவது போல, காதலன் கட்டும் ஒவ்வொரு நிற உருமாலையும் குறிப்பிட்டு, அவன் கண்டுகொள்ளாமல் சென்றால், தன் இதயம் வாடும் என்று பாடுகிறாள், “யெர்ரா யெர்ரானி ருமாலு” பாடலில்.
அடர் சிவப்பு நிறத் துணியை
இறுக்கிக் கட்டிக்கொண்டு
ஆம், அடர் சிவப்பு நிறத் துணியை
இறுக்கிக் கட்டிக்கொண்டு,
எங்கே கிளம்புகிறீர்கள், மைத்துனரே?
அந்த அடர் சிவப்பு நிறத் துணியை
இறுக்கிக் கட்டிக்கொண்டு.
பாம்பு போன்ற மென்மையான
என் முகம் நசுங்கிவிடக்கூடும்
அப்படி நசுங்கிவிட்டால்,
என் உயிர் பிரிந்துவிடும், மைத்துனரே,
பாம்பு போன்ற மென்மையான
என் முகம் நசுங்கிவிடக்கூடும்.
பச்சை நிற ஆடைகள் அணிந்து
ஓ, பச்சை நிற ஆடைகள் அணிந்து,
அன்பு மைத்துனரே,
பச்சை நிற ஆடைகள் அணிந்து எங்கே செல்கிறீர்கள்?
பாம்பு போன்ற என் மென்மையான முகம்
நசுங்கிவிடக்கூடும்
அது நசுங்கினால் என் உயிர் போய்விடுமே,
அன்பு மைத்துனரே,
பாம்பு போன்ற என் மென்மையான முகம்
நசுங்கிவிடக்கூடும்.
முழுதும் வெண்ணிற ஆடை அணிந்து
தூய வெண்மையில் ஜொலித்து
எங்கே செல்கிறீர்கள்,
என் அன்பிற்குரிய மைத்துனரே?
முழுதும் வெண்ணிற ஆடை அணிந்து,
நீங்கள் சென்றால் என் இதயம் வாடிவிடும்
நீங்கள் பிரிந்து சென்றால் என் உயிரே போய்விடும்,
நீங்கள் சென்றால் என் இதயம் வாடிவிடும்.
கருநிற லுங்கி அணிந்து…
கருநிற லுங்கி அணிந்து,
புன்னகைத்தபடி நடந்து செல்கிறாய்,
மைத்துனரே கருநிற லுங்கி அணிந்து.
நாகபாம்பு படம் எடுத்து நிற்கிறது…
அது கொத்தினால் உயிர் போய்விடும்,
மைத்துனரே,
நாகபாம்பு படம் எடுத்து நிற்கிறது.
நாக துர்கா தன் நடனத்தின் வழியாக சித்தரிக்கும் பெண், காதல், பிரிவு, திருமணம், குடும்பம் என்று ஒடுங்கிவிடுபவள் அல்ல. கோதாவரி ஆற்றின் சலசலப்பான சிரிப்பில் மயங்கி ஆடுபவள் அல்லவா அவள்? திருமணமாகிச் செல்லும் பெண்ணிடம், வாழ்வை ரசிப்பதையும், ஆடிப்பாடுவதையும் நிறுத்த வேண்டாம் என்று சொல்லும் பாடலும் உள்ளது. மணமாகி கணவனுடன் காரில் ஊர்வலம் செல்லும் பெண்ணை தரையில் இறக்கி, முந்தானையை இறுக்கிக் கட்டி, “லகாரே சௌண்ட் சாலா “ என பாடவும் ஆடவும் சொல்கிறார்.
உங்கள் சேலையின் முந்தானையை
இறுக்கமாக உள்ளே சொருகிக்கொள்ளுங்கள்.
மேலும்,
மேகங்களுக்குக் கீழே நீங்கள் நடனமாடும்போது,
தூசு எழட்டும்.
ஒலியைக் கூட்டு, டிஜே,
அந்த அதிரடியான தாளத்தில் எங்களை மூழ்கடி!
நீங்கள் புடவை உடுத்தியிருக்கும் விதம்
மிகவும் அழகாக இருப்பதால்,
அதைப் பார்க்கும் அனைவருடைய மனமும்
மகிழ்ச்சியால் நிறைகிறது.
நீங்கள் பேசும் விதம்
மிகவும் இனிமையாக இருக்கிறது;
உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும்
ஒரு வரப்பிரசாதம் போலத் தோன்றுகிறது.

Leave a Reply