உழைக்கும் கலைஞன் தனது இலக்கை அடைவான்

Published by

on

லிவி-யை நான் முதலில் சந்தித்தது 2017-ல். சினிமாக் கனவுகளுடன் இருந்த எனது இருபது வயது இளைஞனை அவனிடம் கண்டேன். அந்தக் கனவை அப்படியே தக்கவைத்துகொள் என்று சொன்னேன். எஸ். ராமகிருஷ்ணன், சஞ்சாரம் நாவலுக்காக சாஹித்ய அகாடமி விருது வாங்கியபொழுது பவா செல்லத்துரை, திருவண்ணாமலையில் உண்டாட்டு நடத்தினார். அதற்கு லிவி வரைந்த ஓவியங்களை குறித்து ஒரு முக நூல் குறிப்பு எழுதினேன். 2021-ல் பவா திண்டுக்கல்லில் வெள்ளையான நாவலை , தனது பெருங்கதையாடலில் கேட்போர் மகிழவும் உணரவும் தனது குரலில் நிகழ்த்திக் காட்டினார். லிவி , வெள்ளையானை நாவலை வாசித்த வாசகனாக, பவாவின் பெருங்கதையாடல் அரங்கை வடிவமைத்தான். ஐஸ் ஹௌஷையும், ஆட்களை கொன்ற பஞ்சத்தையும் உள்வாங்கி , வெறும் அட்டைகளில் அவன் வடிவமைத்த காட்சிகளை பார்த்த கணையாழி கட்டுரை எழுதியது. ஒரு வாரத்திற்கு முன், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உன்னிடம் இருக்கும் கலையை விட்டுவிடாதே , நீ வெற்றியடைவாய் என்று நான் சொன்னதாக குறிப்பிட்டு, தான் கலைஞனாக பணியாற்றிய ‘டெத் இரயில்வே’ படத்தின் Teaser-ஐஅனுப்பி வைத்திருந்தான். வாழ்த்துக்கள் லிவி !

Whatsapp-ல் அழைத்துப் பேசும்பொழுது, “எப்படி சார் , என்னைக் கண்டுபிடிச்சு சொன்னீங்க?” என்று கேட்டுக்கொண்டேயிருந்தான். “எல்லாக் கலைஞனையும் போல  நீயும்  உன்னைக் கொடுத்து உழைத்துத்தானே இந்த இடத்திற்கு வந்திருக்கிறாய்” என்றேன். நானும் ராதாவும்,  அந்த ட்ரெய்லரில் Livi James என்ற பெயரை Zoom out செய்து, என்னவோ எங்கள் பெயரை பார்ப்பதைப்போல பார்த்தோம்!

வளரட்டும் அவனென வாழ்த்துகிறேன் – 07/21/2019-ல் எழுதிய குறிப்பு:

‘பார்த்ததும் பிடிச்சுப் போச்சு’ எனும் கூற்று காதலர்களுக்கு மட்டுமில்லை , மற்ற உறவுகளுக்கும் உண்டு. முதல் வேலையில்சேர்ந்து, பதினைந்து நாட்கள் பயிற்சியில் இருந்த பொழுது, அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தவரை பிடித்து பழகி, அவரேவார இறுதியில்  சந்திக்கும், ஒத்த கருத்துக்களை உடைய நண்பரானார். அமெரிக்காவில் இரண்டாவதாக வேலை பார்த்தநிறுவனத்தில், ஆல் ஹேண்ட்ஸ மீட்டிங் என்றால் மட்டும் பார்த்துக்கொள்ளும் சிற்சில நிமிடங்களில்  வேறு துறையில் இருப்பவரும், நானும்  சிரித்து பழகி நண்பர்களானோம். பிறகு அவரும் நானும் ஒரே துறையில் வேலை பார்த்து,  ‘இந்த வேலை நல்லாஇல்லை’என்று பேசி,  பிறகு வேறு நிறுவனத்திற்கு மாறி பக்கத்து பக்கத்து அறைகளில் அமர்ந்து வேலை பார்க்கும் நண்பர்களானோம்.நண்பர்கள் கூடி மகிழ்ந்திருக்கும் விழா ஒன்றில், என்னையும்  என் மனைவியையும் சந்தித்த முதல் சந்திப்பிலேயே  சகோதரி ஒருவர்,  ‘அண்ணா’ ,  ‘அண்ணி’ என்று எங்களை அழைத்து, பெயர் சொல்லி கூப்பிடும் உலகில் உடன் பிறவா பிறப்பாகஎங்களுடன் பயணிக்க ஆரம்பித்தார். இந்த வரிசையில்,  திருவண்ணாமலையில்,   எழுத்தாளர் பவா செல்லத்துரையின் வீட்டில்சந்தித்த லிவியையும், ‘பார்த்ததும் எங்களுக்கு பிடிச்சி போச்சி’  ஒரு மகனாக.

அதுவரை கதைகளையும்,கவிதைகளையும் சிலாகித்து எந்த இளைஞனும் எங்களிடம் பேசியதில்லை. அவனது , தமிழும்,கோர்வையான பேச்சும் கேட்பதற்கு ரசிக்கும்படி இருந்தது. மறுநாள் , அவன் கதைகளையும், சினிமா பாடல்களின் வரிகளையம்  பிய்த்துப்போட்டு ஆர்வமுடன் பேசியதை கேட்டுக்கொண்டே பயணித்ததில் , திருவண்ணாமலையிலிருந்து சென்னை வந்ததேதெரியவில்லை. நான், நேசித்து வாசிக்கும் இளைஞனை நேரில் சந்திக்க மாட்டோமோ என்று ஏங்கியிருக்கிறேன். தெருவில்கிழிந்து ஓடும் ஆனந்த விகடனின் அரை பக்க காகிதத்தைக்கூட எடுத்து வாசிக்கும் , அவன் வாசிப்பு ஆர்வத்தை கண்டு, ‘இவன்தான் நான் தேடுகின்ற வாசகன்’ என்று அகம் மகிழ்ந்தோம். திரைத்துறையில் , பின்னணியில் இருக்கும் கலைஞர்களில்ஒருவன் அவன் என அறிந்தோம். அன்று முதல் இன்று வரை அவனுடனான நட்பு இன்றும் தொடர்கிறது. வார இறுதி நாட்களில்,நான் அழைத்து பேசும் ஒரு இனிய நண்பனாக, மகனாக தொடர்கிறான். நரனின், ‘மரியபுஷ்பத்தின் சைக்கிள்’ கதையை , அவன்சொல்ல நான் கேட்பதும், வண்ணதாசனின், ‘எச்சம்’ கதையை நான் சொல்ல அவன் கேட்பதும் என்றாகிவிட்டது. எனது வாழ்வின்நிகழ்வுகளை கேட்டு அறிந்து கொள்வதில் அவனுக்கு ஒரு ஆர்வம்.  அவன் உலகத்தை பார்க்கும் விதம் என்னிலும் மாறுபட்டது. அவனிடம் கற்றுக்கொள்ள எனக்கும் இருக்கவே செய்கிறது  எஸ். ராமகிருஷ்னனுக்கு, பவா செல்லத்துரை அவர்கள், ‘உண்டாட்டு’விழா நடத்தியபொழுது, லிவி, அரங்கம் அமைக்க ,அவனது கை வண்ணத்தை காண்பித்திருந்தான். அவற்றில் சில உங்களின்பார்வைக்கு. அவன் , வளர்ந்து பெரிய கலைஞனாக வெற்றிபெற வாழ்த்துக்கள்!

Leave a Reply