எல்லாமே பெருசு

Published by

on

என்ன சிரிக்கிறீங்க ? Everything is Big in Texas. அதுதான் டெக்ஸாஸ்  மாநிலத்தைக்  குறிக்கும் ஒரு சொலவடை. தமிழில் , டெக்ஸாஸுல எல்லாமே பெருசுனு சொன்னா, உங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வந்தா, நான் அதற்குப் பொறுப்பில்லை.

விஷயத்துக்கு வருவோம். டெக்ஸாஸ் மாநிலத் தலைநகரான, ஆஸ்டினுக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், 1995-ல் ஆரம்பித்து மூன்று தசாப்தங்களை கண்டுவிட்ட Texas Book Festival-ற்கு இந்த வருடம்தான் நானும் ராதாவும் சென்று கலந்துகொண்டோம்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான எழுத்தாளர்களை சந்திப்பதற்கான பெரும் விழா. நவம்பர் 14 மற்றும் நவம்பர் 15 என இரு நாட்கள் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடக்கும் விழாவில், இன்று,  இரண்டு மணி முதல் ஐந்து மணி வரை செலவிடுவோம் என்று சென்றிருந்தோம். இலவசமாக காரை நிறுத்திமிடம் தேடித்தேடி முக்கால் மணி நேரம் அப்படி விரயம் ஆனது. Trinity ரோடும் 8th அவென்யும் வும் சந்திக்கும் இடத்தில், மணிக்கு நான்கு டாலர் என்று போட்டிருந்த ஒரு கராஜில் காரை நிறுத்திவிட்டு விழாவில் ஐக்கியமாக தயாரானோம்.

ஸ்டேட் கேபிடல் கட்டிடத்தின் முன்னே நீண்டு ஓடும் காங்கிரஸ் அவென்யூ-வின் ஒரு புறம் ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து பனிரெண்டு டெண்ட் கொட்டகைகளில் புத்தககங்களும் அதுசார்ந்த பயன்பாட்டுப் பொருட்களையும் விற்கும் கடைகளைப் பார்த்ததும்,  நினைவுக்கு வருவது, “டெக்ஸாஸில் எல்லாமே பெருசு”.  கேபிடல் பில்டிங்கிற்கு இணையாக ஓடும் பதினொன்றாம் அவென்யூவில், விழாவிற்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர்கள் அமர்ந்து அவர்கள் வாசகர்களுக்கு கையெழுத்துப் போட என்று ஒரு டெண்ட் கொட்டகை.  The Bright Years என்ற புத்தகத்தின் ஆசிரியர் Sarah Damoff-விடமும், Vampires of El Norte-வின் ஆசிரியர் Isabel Canas-விடமும் கையெழுத்து வாங்க வாசகர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள். (தமிழ் எழுத்தாளர்களில் ஒருவருக்காவது, வாசகர்கள் இந்த அளவு வரிசையில் நின்று கையெழுத்து வாங்கவேண்டும் என்று என் பின் மண்டையில் ஓடியிருக்கும் என்பதை என்னுடன் வந்த ராதாவும், எனது பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்).

டாலஸை தன்னிடமாகக் கொண்டு இயங்கும் Deep Vellum பதிப்பகத்தின் நிறுவனரான Will Evans-உடன் அவ்வப்பொழுது குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பில் இருந்திருக்கிறேன். விழாவில் கடை விரித்திருந்தவர்களில் அவரும் ஒருவர். அவரிடம் சென்று என்னையும் என் துணையையும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவருக்கு உதவியாளாரக இருந்த இளம் பெண், அங்கு விற்கப்படும் எந்தப் புத்தத்தை பற்றிக் கேட்டாலும், மூன்று நிமிடம் மூச்சுவிடாமல் குறிப்புகளை பொழிந்த வண்ணம் இருந்தார். டாலஸின் அருகில் உள்ள Deep Ellum சிறு நகரின் வரலாறு கூறும் நூலையும், லத்தீன் கவிஞர்கள் Alan Chazaro, Malcolm Fried and Kim Sousa கவிதைகள் அடங்கிய தொகுப்பான Ate Mais-யும் தேர்வு செய்ய, அந்தப் பெண் இரண்டு வாங்கினால் இரண்டு இலவசம் என்று சொன்னார். நீங்களே பரிந்துரையுங்கள் என்று அவரிடம் கேட்க, Ethan Rutherford-ன் North Sun என்ற நாவல் குறித்தும், வெல்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலம் மொழியாக்கம் செய்யப்பட்ட The Blue Book of Nebo நாவல் குறித்தும் ஈர்க்கும்படி சொன்னார். எனது ஒரு கையில் நான்கு புத்தகங்கள்,  ராதாவின் ஒரு கையில் தண்ணீர் பாட்டில் , காப்பி வாங்கினால், அவரவரிடம் மீதம் இருக்கும் இன்னொரு கையில் வசதியாகப் பிடித்து குடித்துக்கொண்டே சுற்றமுடியுமா என்று கவலையாகிவிட்டது. என்னுடைய பெரும் கவலைகளை எப்பொழுதுமெ காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த தேவதைக்கு கேட்டுவிட்டது. Rich Sahapero’s என்ற எழுத்தாளரின் இரு நாவல்களை ஒரு பையில் போட்டு அந்தப் பையையும் இலவசம் இலவசம் என்று ஒரு பெண் கூவி கூவி போவோர் வருவோர் கையில் திணித்துக்கொண்டிருந்தார். கோவை பெரியார் நூலக நூல்களைப் போல இவைவள் போலிகளாக இருக்கலாம் என்று ஒதுங்க நினைத்தாலும், பையிற்காக அவற்றை வாங்கிகொண்டேன். எனக்கு ஒன்று, ராதாவிற்கு ஒன்று என பேராசையெல்லாம் படவில்லை. ஆனால், தேவதை-யின் முடிவு வேறு மாதிரி இருந்தது. இன்னொருவர் தள்ளுவண்டியில் Texas Book Festival என்று அச்சிட்ட பைகளை வைத்துக்கொண்டு இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்தார். ராதா-விற்கும் ஒரு பை கிடைத்துவிட்டது.

புத்தகம் விற்கும் கொட்டகை, எழுத்தாளர்கள் கையெழுத்துப் போட கொட்டகை என்ற வரிசையில், எழுத்தாளர்கள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்களை நடத்தவும் கொட்டகைகள் இருந்தன.  நாங்கள், Kirkus Review மீது உள்ள மரியாதையால், அவர்கள் கொட்டகையில் , Mark Cunningham வழி நடத்தும் Crime Fictions and Indigenous Communities உரையாடலில் பங்குகொள்வது என்று முடிவு எடுத்தோம்.  பழங்குடி மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் பற்றிப் பேசும் நாவல்களை எழுதிய David Heska Wanbi Weiden மற்றும் Devon Mihesuah என்ற இரு எழுத்தாளர்களுடன் நடத்தப்படும் உரையாடல் என்பதுதான் ஏற்பாடு. தொலை தொடர்பு இடர்பாட்டால், வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்க விமான நிலையங்கள் முழுவதும் இயங்கமுடியாமால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயங்கின. இல்லை பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்தப் பாதிப்பினால், இந்த விழாவிற்கு வரவேண்டிய சில எழுத்தாளர்கள் வரவில்லை. அவற்றில் ஒருவர் Devon Mihesuah.  ஆதலால், மார்க், Wisdom Corner-ன் எழுத்தாளர் Mr. Weiden-உடன் மட்டும் உரையாடினார். மார்க், குற்றவியல் நாவல்களை நீங்கள் எழுதுவது எப்படி இலக்கியமாகும் என்று கேட்க, Mr Weiden, வாசகருக்கு சுவாரஷ்யமாக எழுதினாலும், இதனால் என்னால் சமூக அநீதியை பற்றி குரல் எழுப்ப முடிகிறது என்றார். என் நாவலில் பழங்குடி இந்தியர்களின் தொன்மத்தையும், ஆன்மிகத்தையும் சொல்ல முடிகிறது. இதுவரை அவர்களிடம் இருக்கும் ஆன்மிகம் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்றார்.

David Heska ஒவ்வொரு கேள்விக்கும் மிகத் தெளிவான பதில்கள் சொன்னார். பழங்குடி இந்தியர்களுக்கு என்று அந்தக் காலத்தில் Boarding School நடத்தப்படும். பழங்குடி இந்தியர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகள் படிப்பதற்காக என்று இழுத்துச் செல்லப்படுவார்கள். அவரின் பாட்டியும் அப்படிப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர். அந்தப் பள்ளியில் அவர்கள் கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாலியல் தொந்தரவுக்கு ஆளாவார்கள். சில குழந்தைகள் இறந்து அங்கேயே புதைக்கப் பட்டுவிடுவார்கள். அவரது நாவலில் இது விரிவாக வாசகர்கள் வலியை உணரும் வண்ணம் உள்ளது என்றார். இந்தப் பள்ளிகள் இன்றைய வழக்கத்தில் இல்லை. அந்தப் பள்ளிகள் இருந்த நிலங்களை பழங்குடி இந்தியர் அல்லாதவர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மார்க், தண்ணியில் கைகழுவும் திரவத்தை ஊற்றி அது போதை தரும் சாராயம் என்று விற்பார்கள் என நாவலில் உள்ளது. அப்படியெல்லாம் நடக்குமா எனக் கேட்டார். டேவிட்டின் பதில், அவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பரிதாபகரமானது. இது கற்பனையாக எழுதப்பட்ட நாவலெனினும் அதில் உண்மை உள்ளது. பழங்குடி இந்தியர்களின் வாழ்வு பரிதாபத்திற்குரியது. அவர்கள் வாழ்வதாரத்திற்காக இப்படிப்பட்ட சாராயத்தை விற்கவேண்டியுள்ளது. ஒன்று தெரியுமா அவர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். அதையும்தானே எனது நாவலில் பிரதிபலித்துள்ளேன் என்றார் டேவிட்.

பழங்குடி இந்தியர்களைப் பற்றி இவ்வளவு பேசும் டேவிட் நாவல் அவர்களது உணவு குறித்தும் பேசுவது ஒரு பதிலில் தெரிந்துகொண்டேன். Wisdom Corner-ல் விவரிக்கப்படும் Fried Bread பழங்குடி இந்தியர்களுடைய பாரம்பரிய பண்டம். பாரம்பரியப் பண்டங்களை விற்கவென்று நியூ யார்க்கில் ஒரு கடை உள்ளது. அந்தக் கடையில் Fried Bread-ந் விலை முன்னூறு டாலர்கள். ஒரு பழங்குடி இந்தியனால் இதை விலைகொடுத்து வாங்கமுடியாது என்றார் டேவிட்.

டேவிட், முப்பது வருடங்களாக பழங்குடி இந்தியர்களை பற்றி எந்த நூல்களும் எழுதப்படவில்லை. 2018-ல் இவர் எழுதி அனுப்பியதும், எட்டு பதிப்பகத்தார் நூலை வெளியிட முன்வந்தார்கள் என்றார். வாசகர்கள் இந்த நாவலில் வரும் பாத்திரங்களை புரிந்துகொண்டால் அதுவே அவருக்கு கிடைக்கும் பரிசு என்றார்.

அடுத்து அடுத்து என கலந்துரையாடல்கள் அரங்கம் மாற்றி அரங்கம் நடந்துகொண்டே இருந்தன. அரங்கங்கள் நூற்றுக்கணக்கான வாசகர்களால் நிறைந்து காணப்பட்டன. ஒவ்வொரு நிகழ்வும் நேரத்திற்கு ஆரம்பித்து நேரத்திற்கு முடிந்தன. திறந்தவெளி அரங்கம் போல இருந்தாலும், மக்கள் அமைதி காப்பதால், எழுத்தாளரின் பேச்சு எங்கு அமர்ந்திருந்தாலும், செவியை வந்தடைந்தது. ஒரே சமயத்தில் நான்கு அல்லது ஐந்து கலந்துரையாடல்களாவது நடந்தன என அங்கே வைக்கப்பட்டிருந்த அட்டவனையில் கண்டறிந்தோம். நாங்கள் மாதிரிக்கு ஒன்றை தேர்வு செய்து கலந்துகொண்டோம். நண்பர் கிரிக்கு நிகழ்வுக்குச் செல்வதற்கு முன், நான் விழாவில் இருக்கும் நேரத்தை குறிப்பிட்டு முடிந்தால் அவரைக் கலந்துகொள்ள சொல்லியிருந்தேன். அவரும் அவரது மகள் நிலாவும், நான் குறிப்பிட்ட கொட்டகையின் பெயரை வைத்து, மேற்கண்ட நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வந்தனர். ராதாவும் நானும் அவர்களுடன் இணைந்து ஒரு பதினைந்து நிமிடம் விழாவில் உலா வந்தோம்.

புத்தகப் பை தோளுக்கு மாறிவிட்டது. காப்பி குடிக்காமல் போகமுடியுமா?  காங்கிரஸ் அவென்யுவில் இருந்த, Capitol Cafe-யில் , ராதா, காப்பிக்கு காப்பி ஒரு Muffin-ம் வாங்கிக்கொடுத்தார். அங்கேயே அமர்ந்து புத்தகம்  விற்கும் டெண்ட் கொட்டகைகளையும், மக்கள் திரளையும் பார்த்த வண்ணம் காப்பியை பருகினோம். காரை நிறுத்திய இடத்திற்கு செல்லும் முன் இன்னொரு காட்சியையும் கண்டோம். அமெரிக்க பாஷையில் மூன்று ப்ளாக் நீளத்திற்கு வாசகர்கள் நின்று ஒரு ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவரின் பெயர் Abid Khorram. புனைவுகளில் Youth Adults என்று ஒரு வகைமை உண்டு. அந்த வகை நாவல்களை எழுதும் ஆசிரியர் அவர். இந்தப் பெருசின் ரகசியம் அதுதான்.

Leave a Reply