தமிழகத்தின் கிராமங்களில் காலை இளவெயிலில், கயிற்றுக் கட்டிலில் போர்வையை விரித்து தங்கள் மூன்று மாதக் குழந்தையை மல்லாக்கப் போட்டுவிட்டுத் தாய்மார்கள் தங்கள் வேலையை கவனிப்பார்கள். அப்படித்தான் சம்சாரிக்கு வாழ்க்கைப்பட்ட என் அம்மாவும் என்னையும் மல்லாக்கப் போட்டு வானத்தைப் பார்க்க வெயில் காயவிட்டிருப்பார். வானம் திரைவிரிக்க, வெயில் இளம் குளிரை விரட்ட, காற்று என் காதில் கதை ஒன்று சொல்ல, பட்டாம்பூச்சி அதற்கு நடித்துக் காட்ட குழந்தையாக நான் மகிழ்ந்து சிரித்திருந்திருப்பேன். கவிஞர் இசை, இப்பொழுதும் நான் நினைத்தால் ‘சிசு’-ஆகலாம் என்கிறார்.
வான் நோக்கி மல்லாந்திருக்கிறேன்.
மொட்டைமாடி
தொட்டிலென்றாட
இப்போது
ஒரெயொரு
தேன்ரப்பர் போதும்
அமெரிக்காவில் மொட்டை மாடிக்கு நான் எங்கே போவது ? நான் மாலை நடைப்பயணம் செல்லும்பொழுது ஒரு வீட்டைப் பார்ப்பேன். அந்த வீட்டை மொட்டைமாடி வைத்து கட்டியிருக்கிறார்கள். ‘இசை’ பாடும் வழியைப் பின்பற்ற, ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்து அந்த வீட்டை வாங்கினாலும், தேன் ரப்பருக்கு எங்கே போவது? மன் பசந்திலும், காந்தி பஜாரிலும் தேன் மிட்டாய் கிடைக்கும். தேன் ரப்பார் கிடைக்காது. ‘வெயில் பறந்தது’ தொகுப்பில் சிக்கனமான வழியை சொல்லித் தருகிறார், மதார்.
சன்னலைத் திறந்ததும்
ஒரு பெரும் ஆச்சர்யம்
ஆகாசத்தின் கதவா
என் எளிய சன்னல்
சன்னலே, ஆகாயத்தின் கதவாக ஆவது நன்றாக இருக்கிறது என்று உவகை கொண்டால், உலகம் சன்னலுக்கு எப்படி சண்டைபோடும் என்று இசையின் ‘உலகு’ கவிதை என்னை எச்சரிக்கிறது.
இடையில் இருப்பவருக்கு
காற்றென்றால்
ஆகவே ஆகாது
கடைசியில் உள்ளவருக்கு
கிளியனார் கொஞ்சலன்ன
லேசாசக அலச வேண்டும்.
ஜன்னலோரத்தானுக்கோ
அது வழியே
உலகமே தெரிய வேண்டும்
ஒத்தைக்கண்ணாடி
படாத பாடு படுவதைப் பார்.
பிரபஞ்சன் , வானம் வசப்படும், என்று கதைசொன்னார். வானம் எனக்கு வசப்படவெல்லாம் வேண்டாம், ஒரே ஒரு முறை தொட்டால் போதும் என்றேன். பெருந்தேவி, தனது ‘புனைவாக்கம்’ கவிதையில் இப்படிக் கற்பிக்கிறார்.
நாம் அனைவரும் ஒரே நேரத்தில் அண்ணாந்து பார்த்து 1 2 3
Cheese என்கிறோம் வானம் தொப்பென்று உடைந்து விழுகிறது
நிழலின் அருமை வெயிலில் தெரியும். அப்படியெனில் வெயிலின் அருமை மழையில் தெரியும். சோ.தர்மன் , சூல், நாவலில் , மூன்று நாட்களாக விடாது அடை மழை பெய்யும். உருளக்குடி மக்கள், “சேய்.. என்ன கழுத மழ; மாடு மொண்டாப்ல இப்பிடியா பெய்யும்’ என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். வெயில் முகம் காண மக்கள் காத்துக் கிடப்பார்கள். கவிகளுக்கு, மழையெல்லாம் தேவையில்லை, வெயிலை கொண்டாட. அருவமான வெயிலுக்கு முத்தமிடும் இதழ்களை படைத்து எருக்கம் மொட்டுக்களுக்கு முத்தம் கொடுக்க சொல்லிக்கொடுக்கிறார், சம்யுக்தா மாயா தனது ‘வசீகர மலர்’ கவிதையில்.
எருக்கம் மொட்டுக்கள் மீது
இதழ் பதிக்கிறது வெயில்
பூ வெடிக்கிறது அவன் இடும்
முத்தத்தின் சத்தத்தோடு.
கவிஞர் மதார் கவிதையில், குயில்கள் இட்ட முத்தத்தின் சூட்டில் வெயில் பறக்கிறது. குக்கூ என்று பாடவும் செய்கிறது.
மழை
குடையில்லை
மரம்
ஒதுங்கினேன்
குளிர்
குளிர்
இரு குயில் மரக்கிளையில்
இட்டுக்கொண்ட முத்தம்
இதமான சூடு
வெயில்
வெயில்
வெயில் பறந்தது
குக்கூ என்றபடி வானில்
அ. முத்துலிங்கத்தின் , விசா கதையை வாசித்தவர்களுக்கு , கோணேஸ்வரனை தெரிந்திருக்கும். விதவிதமான வண்ணத்துப்பூச்சிகளை பற்றி அறிந்து ஆறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளை சேகரித்து வைத்திருப்பார். குளிர்காலத்தில் அலாஸ்காவிலிருந்து 3000 மைல்கள் பயணம் செய்து கலிபோர்னியா வந்து சாப்பிட்டு சுகித்து மீண்டும் வசந்த காலத்தில் திரும்பிச் சென்றுவிடும் மொனார்க் பட்டாம்பூச்சியை பார்ப்பதற்காக இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு வந்திருப்பார். சான்பிரான்சிஸ்கோவிலிருந்து அறுபது தொலைவில் இருக்கும் நேச்சுரல் ப்ரிட்ஜ் , அங்கு மரங்களில், இலைகளே தெரியாமல் கோடிக்கணக்கில் மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள் வியாபித்து இருக்கும். ‘கோணேஸவரரன்’ , இசையின் ‘வண்ணங்களின் ஆட்டம்’ சிறுவனென கண்ணீர் வடித்திருப்பார்.
ஒரு இலையிலிருந்து
இன்னொன்றுக்கு
மாறி மாறி
அமர்ந்து
என்னென்னவோ பேசுகிறது
தன்னையும்
ஆட்டத்தில்
சேர்த்துக்கொள்ளச் சொல்லி
கண்ணீர் வடிக்கும் சிறுவனைப் போல
அருகிருந்து தேம்புகிறேன் நான்.
வண்னத்துப்பூச்சி என்றால் வண்ணங்கள் நினைவில் வருவதுபோல, தேவதச்சனின் “காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில் காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகினறன” நினைவில் வரமால் இருக்குமா?
எனது தளத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து நானும் ராதாவும் சொற்கள் சொற்களாக சொல்லிப்பார்த்து ‘காற்றின் நிழல்’ என்று உச்சரிக்க வாயெல்லாம் இனிக்க, உணர்வால் வைத்த பெயர். தளத்திற்கு வந்த நண்பர்களில் ஒருவர் காற்றுக்கு நிழல் உண்டா என்று அறுவைச் சிகிச்சை கத்தியை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டார். என் கண்ணால் கண்டதையே நான் சொல்வேன் என்று அப்போதைக்கு ஜமாளித்தேன். இப்பொழுது மதாரின் கவிதையின் துணையோடு காற்றின் நிழலை நான் கண்டேன் என்று ஆதாரத்துடன் சொல்லமுடியும்.
சருகின் நிழல்
தரையில் விழும்
காற்றின் நிழனெ
யார் கண்டார்
வெட்டவெளியில் அன்னை என்னைப் போட்டு வானையும், வெய்யிலையும், காற்றையும், வண்ணத்துப்பூச்சிகளையும், அறிமுகம் செய்ய, தமிழ்க் கவிகளின் புண்ணியத்தில் அவற்றுடனான ஈர்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளேன். நானும் எருக்கம் மொட்டுக்களை வெயில் முத்தமிடுவதையும் (சம்யுக்தா மாயா), வண்ணத்துப்பூச்சி காற்றை கொஞ்சுவதையும் (மதார்) ரசிக்க வாழ்க்கை நகர்கிறது (இசை).
முகமறியா காற்றில்
என்ன அழகைக் கண்டு
இப்படிக் கொஞ்சிக் கொஞ்சிப் பறக்கிறது
வண்ணத்துப்பூச்சி.

Leave a Reply